காவேரிப்பாக்கம், நவ.8: காவேரிப்பாக்கம் வட்டார விவசாயிகள், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரபி சிறப்பு பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்து பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவேரிப்பாக்கம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடப்பு 2024-25ம் ஆண்டு ரபி சிறப்பு பருவத்தில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்த அரசாணை பெறப்பட்டுள்ளது. வருவாய் கிராம அளவில் சம்பா நெல் பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம். தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் கனமழை எச்சரிக்கை பற்றிய தகவல்களும் வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பருவமழை காலங்களில் வெள்ளம், புயல் மற்றும் இயற்கை சீற்றங்களினால் விவசாயிகள் பாதிக்கப்படும் போது, விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், நெல்பயிர்களையும் பாதுகாக்கும் வகையில், ரபி சிறப்பு பருவ பயிர் காப்பீடு திட்டத்தில், பதிவு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் மழையினால் எதிர்பாராத இயற்கை இடர்பாடுகள் மூலம் ஏற்படும் பயிர் சேதங்களில் இருந்து பாதுகாக்க விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொண்டு பயன் பெறவேண்டும். சம்பா நெல் பயிர்களை பயிர் காப்பீடு செய்ய வரும் 15ம் தேதி கடைசி நாளாகும். இந்த திட்டத்தில் அனைத்து கடன்பெறும் விவசாயிகள் மற்றும் கடன்பெறா விவசாயிகள் அனைவரும் தங்கள் விருப்பத்தின் பேரில் இந்த திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.
இத்திட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய, சிட்டா, நடப்பு ஆண்டு பயிர் சாகுபடி அடங்கல், ஆதார் அட்டை,வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன், அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைகள், கிராமிய வங்கிகள்,தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பொது சேவை மையங்களை அணுகலாம். மேலும் தகவலுக்கு, அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையத்தையும் அணுகலாம். மேலும் இத்திட்டத்தில், நெல் பயிருக்கு ஒரு ஏக்கருக்கு பிரீமியமாக ₹517 செலுத்தி பயிர் காப்பீடு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post காவேரிப்பாக்கம் வட்டார விவசாயிகள் ரபி சிறப்பு பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய 15ம் தேதி கடைசி நாள்: உதவி இயக்குனர் தகவல் appeared first on Dinakaran.