×

நரிக்குறவர்கள் குடும்பத்தை நடுவழியில் இறக்கிவிட்ட டிரைவர், கண்டக்டர் கதறி அழுத குழந்தைகளுடன் தவித்த வீடியோ வைரல் வேலூர் அருகே தனியார் பஸ்சில் நடனம் ஆடியதால்

வேலூர், நவ.10: வேலூர் அருகே தனியார் பஸ்சில் நடனம் ஆடியதால் டிரைவர், கண்டக்டரால் நடுவழியில் இறக்கிவிடப்பட்ட நரிக்குறவர்கள் குடும்பத்தினர், கதறி அழுத குழந்தைகளுடன் தவித்த வீடியோ வைரலாகி வருகிறது. வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்த நரிக்குறவர்கள், வேலூர் பழைய பஸ் நிலையத்தில் ஊசிமணி, பாசிமணி விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் தினமும் காலை ஒடுகத்தூரில் இருந்து வேலூர் பழைய பஸ் நிலையத்திற்கு வந்து விற்பனை முடித்துவிட்டு, மாலையில் பஸ் மூலம் வீட்டுக்கு செல்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் மாலை நரிக்குறவர்கள் தங்களது குடும்பத்தினருடன் வேலூருக்கு வந்து விற்பனை செய்தனர். பின்னர் மாலை 6 மணியளவில் தொரப்பாடி, ஊசூர், அணைக்கட்டு வழியாக ஒடுகத்தூர் செல்லும் தனியார் பஸ்சில் நரிக்குறவர் குடும்பத்தினர் ஏறி பயணம் செய்தனர்.

அந்த தனியார் பஸ்சில் சினிமா பாடல்கள் இசைக்கப்பட்டது. ஊசூர் அடுத்த புலிமேடு அருகே பஸ் சென்று கொண்டிருந்தபோது, நரிக்குறவர் ஒருவர் நடனமாடியாக கூறப்படுகிறது. இதனால் பஸ் டிரைவர் பாடல் இசைப்பதை நிறுத்திவிட்டார். அப்போது நரிக்குறவர் பாடல் பாடியபடி நடனம் ஆடினார். இதனால் ஆத்திரமடைந்த டிரைவர் மற்றும் கண்டக்டர், நரிக்குறவரிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். மேலும் நரிக்குறவர் குடும்பத்தின் உடைமைகளையும் பஸ்சில் இருந்து வெளியே தூக்கி வீசியுள்ளனர். அந்த சமயத்தில் குழந்தைகள் பயந்து கதறி அழுதது. அதனை சற்றும் பொருட்படுத்தாமல் டிரைவர் மற்றும் கண்டக்டர், நரிக்குறவர்கள் குடும்பத்தினரை புலிமேட்டில் இறக்கி விட்டனர்.

அப்போது அவர்கள் பஸ்சில் இருந்து இறக்கி விடப்பட்ட காட்சிகளை பயணிகள் சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி உள்ளனர். 2 ஆண்கள், 2 பெண்கள் மற்றும் 6 குழந்தைகள் புலிமேடு பஸ் நிலையத்தில் பரிதாபமாக நின்று அழுது கொண்டிருந்த சம்பவம் பார்ப்பவர்கள் நெஞ்சை உருகச் செய்தது. பின்னர் சுமார் 2 மணி நேரம் கடும் அவதியுடன் குழந்தை குட்டிகளுடன் காத்திருந்து அந்த வழியாக வந்த மற்றொரு பஸ்சில் ஏறி ஒடுகத்தூருக்கு சென்றனர். சிறு குழந்தைகள் என்று கூட பார்க்காமல் நடுவழியில் இறக்கி விட்ட தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

The post நரிக்குறவர்கள் குடும்பத்தை நடுவழியில் இறக்கிவிட்ட டிரைவர், கண்டக்டர் கதறி அழுத குழந்தைகளுடன் தவித்த வீடியோ வைரல் வேலூர் அருகே தனியார் பஸ்சில் நடனம் ஆடியதால் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Odukathur ,Vellore district ,
× RELATED சோலார் மின்வேலி அமைக்க நடவடிக்கை...