- தே.தொ.கவும்
- Thiruverumpur
- திருச்சி
- டீன்
- தேசிய தொழில்நுட்ப நிறுவனம்
- மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை
- திருச்சி துவக்குடி
- தின மலர்
திருவெறும்பூர்: மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதை கண்டித்து திருச்சி என்ஐடி மாணவ, மாணவிகள் விடிய விடிய போராட்டம் நடத்தினர். விடுதி, டீன் வீடு முற்றுகையால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி துவாக்குடியில் தேசிய தொழில்நுட்ப கழகம் (என்ஐடி) ஒன்றிய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவிகளுக்கு தனியாக கல்லூரி வளாகத்திலேயே 12 விடுதிகள் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை ஓவல் என்ற மகளிர் விடுதியில் இணைய தள வசதியில் ஏற்பட்ட கோளாறை சரி செய்ய கல்லூரியில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்க்கும் முதுகுளத்தூரை சேர்ந்த கதிரேசன் (38) வந்தார்.
அப்போது விடுதி அறையில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர், சார்ட்ஸ் மற்றும் டீ சர்ட் அணிந்து தனியாக படித்து கொண்டிருந்தார். இதைபார்த்து சபலமடைந்த கதிரேசன், தனது ஆடையை அவிழ்த்து மாணவி முன் ஆபாசமாக நின்று செய்கை காட்டியதுடன், மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி கூச்சலிட்டபடி வெளியே ஓடி வந்து சக மாணவ, மாணவிகளிடம் கூறி கதறிஅழுதார். தனது பெற்றோருக்கும் தகவல் கொடுத்தார்.
இதுதொடர்பாக மாணவியின் தந்தை, திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேரில் புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்றுமுன்தினம் இரவு கதிரேசனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, பாதிக்கப்பட்ட மாணவி, தனக்கு நடந்த பாலியல் தொந்தரவு குறித்து விடுதி வார்டன் பேபியிடம் கூறினார். அதற்கு அவர், ‘நீங்கள் அரைகுறையாக உடையை இப்படி அணிவதால் தான் இதுபோன்று சம்பவம் நடக்கிறது’ என கூறியதோடு, அந்த மாணவி மீது பழியை போடும் தொனியில் பேசி அலட்சியப்படுத்தி உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்தின் அலட்சிய போக்கு, விடுதி வார்டன்கள் பேபி, மகேஷ்வரி, சபிதா பேகம் ஆகிய 3 பேரின் பொறுப்பின்மையை கண்டித்தும், அவர்களை இடமாற்றம் செய்யக்கோரியும், குற்றவாளிக்கு ஆதரவாக பேசும் அவர்கள் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் நேற்றுமுன்தினம் இரவு 10 மணிக்கு விடுதி முன் மாணவ, மாணவிகள் திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்தில் உள்ள டீன் அகிலாவின் வீட்டுக்கு சென்று வீடு முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் டீன் அகிலா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பொழுது பாதிக்கப்பட்ட மாணவியிடம், தரக்குறைவாக நடந்து கொண்ட விடுதி வார்டன் பேபி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என டீனிடம் மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். விடுதி வார்டன்களுக்கு பதிலாக தான் மன்னிப்பு கேட்பதாக டீன் கூறினார். ஆனால் மாணவர்கள் அதற்கு ஏற்க மறுத்து போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதையடுத்து நேற்று காலை திருச்சி எஸ்.பி வருன்குமார் சம்பவ இடத்திற்கு சென்று வந்ததோடு மாணவர்களிடமும் மற்றும் கல்லூரி நிர்வாகத்திடமும் பேச்சு வார்த்தை நடத்தினார். அவரிடம் மாணவர்கள் தங்களது கோரிக்கைகளை வைத்தனர். இதனைத்தொடர்ந்து எஸ்.பி, சம்பந்தப்பட்ட என்ஐடி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் மாணவ, மாணவிகளிடம் தங்களது கோரிக்கையை ஏற்கப்படும் என்றார். தொடர்ந்து சம்பந்தப்பட்ட மாணவியிடம், விடுதி வார்டன் பேபி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார். இதனையடுத்து மாணவ, மாணவிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் 12 மணி நேர மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.
* இன்று முக்கிய நடவடிக்கை; எஸ்.பி தகவல்
எஸ்பி வருண் குமார் கூறுகையில், பாதுகாப்பு தொடர்பாக நாளைக்குள் (இன்று) முக்கிய நடவடிக்கை ஒன்றை அறிவிக்க உள்ளதாக என்ஐடி நிர்வாகம் சார்பிலும் தெரிவித்தனர். இனி வரும் காலங்களில் காவல் துறையை அணுக உதவி எண் மற்றும் எனது வாட்ஸ் எண் கொடுத்துள்ளேன். அதை என்ஐடி முழுவதும் போஸ்டராக ஒட்டப்படும். அந்த எண்ணில் எப்போது வேண்டுமானாலும் மாணவ, மாணவிகள் தொடர்பு கொள்ளலாம்’ என்றார்.
* சட்டப்படி நடவடிக்கை; கலெக்டர் உறுதி
திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் கூறுகையில், ‘என்ஐடி கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். மாணவிகளிடம் கல்லூரி ஆசிரியர்களும், விடுதி வார்டன்களும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்’ என்றார்.
* சில ஆண்டுகளுக்கு முன் மாணவி பலாத்காரம்
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விடுதியில் தங்கி படித்த மாணவி ஒருவர், வெளியில் சென்று விட்டு மீண்டும் விடுதிக்கு திரும்பினார். அப்போது என்ஐடி வளாகத்தில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் குற்றவாளி கைது செய்யப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பலாத்காரம் செய்யப்பட்ட பிறகுதான் மாணவி விடுதியில் இல்லை என்பதே வார்டனுக்கு தெரிய வந்தது.
* வருத்தம் தெரிவித்த என்ஐடி நிர்வாகம்
என்ஐடி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘திருச்சி என்ஐடி கல்லூரி வளாகத்தில் உள்ள ஓபல் மகளிர் விடுதியில் அவுட்சோர்ஸ் செய்யப்பட்ட ஒரு தொழிலாளியின் மோசமான பாலியல் தொல்லையால் என்ஐடி நிர்வாகம் வருத்தமடைந்துள்ளது. மாணவர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய விவகாரம் மிகுந்த உணர்திறனுடனும். அக்கறையுடனும் பார்க்கப்படுகிறது. என்ஐடி நிர்வாகம் வளாகத்தில் உள்ள அனைத்து மாணவர்களின் பாதுகாப்பு, குறிப்பாக மாணவிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய மிகவும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் இருக்க பாதுகாப்பு அதிகாரி, அதிக விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்’ என கூறப்பட்டுள்ளது.
The post என்ஐடியில் மாணவிக்கு பாலியல் தொல்லை விடிய விடிய மாணவர்கள் போராட்டம்: ஒப்பந்த ஊழியர் கைது appeared first on Dinakaran.