தொண்டாமுத்தூர்: கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, போதை ஊசி, போதை மாத்திரை, புகையிலை பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் தீவிர வாகன ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தொண்டாமுத்தூர் அருகே கிராமப்புறங்களில் கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்பி கார்த்திகேயன் உத்தரவின்பேரில் பேரூர் டிஎஸ்பி சிவகுமார், ஆலந்துறை இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் தலைமையில் நேற்று தொண்டாமுத்தூர், தீனம்பாளையம், ராஜேஸ்வரி நகர் பகுதியில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது சந்தேகத்தின்பேரில் சிலரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து பிடிபட்டவர்களிடம் சோதனை நடத்தியபோது, அவர்களிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் தங்கியிருந்த வீடுகளில் போலீசார் சோதனையிட்டனர். அப்போது அங்கு போதை காளான், புகையிலை பொருட்கள் உள்ளிட்டவை இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து கோவை பிஎன் புதூரை சேர்ந்த பொறியியல் பட்டதாரி அமரன் (30), பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் மகன் ஜனாதன் சதீஷ் (31), ஆலந்துறை நரசிபுரத்தை சேர்ந்த பெயிண்டர் பிரசாந்த் (30), நரசிபுரத்தை சேர்ந்த ஆக்டிங் டிரைவர் சரவணகுமார் (26), சாய்பாபாகாலனி பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டதாரி நிஷாத் (23) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களை குறிவைத்து போதை காளான் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்ய முயன்றதும், காய்கறி வியாபாரம் செய்வதாக கூறி வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கி சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ரூ.12 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான 589 கிராம் போதை காளான், ஒரு கிலோ கஞ்சா, 13 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் 4 இரு சக்கர வாகனங்கள், 6 செல்போன்கள், பணம் எண்ணும் இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டன.
The post ரூ.13 லட்சம் போதை காளான் பறிமுதல்; 5 பேர் கும்பல் கைது: கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்ய முயன்றது அம்பலம் appeared first on Dinakaran.