×

புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு

ஓசூர், ஆக.30: அரசு பள்ளி மாணவ-மாணவிகள் சிறந்த குறிக்கோள், விடாமுயற்சி, தன்னம்பிக்கையுடன் படித்து இந்திய ஆட்சிப்பணி, காவல் பணி, வனப்பணியில் உயரதிகாரியாக வர வேண்டுமென ஓசூர் அருகே அரசு பள்ளியில் புதிய வகுப்பறைகளை திறந்து வைத்து அமைச்சர் சக்கரபாணி பேசினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே ஜூஜூவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் சரயு தலைமை வகித்தார். கோபிநாத் எம்.பி., பிரகாஷ் எம்எல்ஏ, மேயர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பங்கேற்று, புதிய வகுப்பறைகளை திறந்து வைத்து பேசியதாவது: திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து, பள்ளிக் கல்வித்துறைக்கு இந்த வருடம் ₹44.44 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தியாவிலேயே உயர்கல்வியில் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

2023-2024ம் கல்வியாண்டில் நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவி 497 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். தற்போது, மாணவியின் மேற்படிப்புக்காக தமிழ்நாடு அரசு அனைத்து வகையான உதவிகளையும் செய்துள்ளது. எனவே, அரசு பள்ளிகளில் படிக்கின்ற மாணவர்கள் சிறந்த குறிக்கோளுடனும், விடாமுயற்சியோடும், தன்னம்பிக்கையுடனும் படித்து, இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, இந்திய வனப்பணி உள்ளிட்ட துறைகளில் உயரதிகாரியாக வர வேண்டும். படிப்பு மட்டுமல்லாமல் விளையாட்டுத்துறை மற்றும் இதர துறைகளிலும் முத்திரை பதித்து, வருங்காலத்தில் உயர்ந்த இடத்திற்கு வரவேண்டும்.
இப்பள்ளியில் 2000 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 1200 மாணவர்கள் படித்த இப்பள்ளியில் ஓராண்டு காலத்தில் 800 மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். இவ்வாறு அமைச்சர் சக்கரபாணி பேசினார்.

நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் காந்த், துணை மேயர் ஆனந்தய்யா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் மலர்விழி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, ஜிஆர்பி நிறுவன மேலாண்மை இயக்குநர் பாலசுப்ரமணியம், மைக்ரோடெக் குரூப் நிறுவன இயக்குநர் முரளிபாபு, எம்.எஸ்.தோனி குளோபல் பள்ளி தலைவர்கள் சந்திரசேகர், புவனேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் ரமாவதி, உதவி திட்ட அலுவலர் வடிவேல், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சர்தார், தலைமையாசிரியர் நர்மதாதேவி, வட்டாட்சியர் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி, சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், டேக்ஸ் கமிட்டி தலைவர் சென்னீரப்பா, மண்டலக்குழு தலைவர் ரவி, மாமன்ற உறுப்பினர்கள் நாகராஜ், சீனிவாசலு, மாதேஷ், கிருஷ்ணாப்பா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சுமன், நகர இளைஞரணி அமைப்பாளர் கலைச்செழியன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

The post புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Hosur ,Minister ,Chakrapani ,Krishnagiri… ,
× RELATED 72 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள்