×
Saravana Stores

கவிதா ஜாமீன் குறித்து கருத்து தெலங்கானா முதல்வருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவ் மகள் கவிதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதுகுறித்து தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறுகையில்,’டெல்லி மதுபான ஊழல் வழக்கில் முன்னாள் துணை முதல்வரான மணீஷ் சிசோடியா, 15 மாதங்கள் சிறையில் இருந்துவிட்டு இப்போதுதான் வந்துள்ளார். முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்னும் ஜாமீன் கிடைக்காத நிலையில், 5 மாதங்களுக்குள் கவிதாவுக்கு ஜாமீன் கிடைத்தது எப்படி என்பதில் சந்தேகம் உள்ளது.

2024 மக்களவைத் தேர்தலில் பாஜவின் வெற்றிக்காக பிஆர்எஸ் உழைத்தது உண்மைதான். பிஆர்எஸ்க்கும் பாஜவுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தால்தான் கவிதாவுக்கு ஜாமீன் கிடைத்தது என்று பேசப்படுகிறது’ என்றார். இந்த சூழலில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மீதான தேர்தல் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று நீதிபதிகள் பி.ஆர்.கவாய்,பி.கே மிஸ்ரா,கே.வி விஸ்வநாதன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ரேவந்த் ரெட்டி பேச்சு குறித்து, அவரது சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தகியிடம் நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

நீதிபதிகள் கூறுகையில்,’ உங்கள் கட்சிக்காரர் ரேவந்த் ரெட்டி கூறியதை நீங்கள் செய்தித்தாளில் படித்தீர்களா? ஒரு பொறுப்புள்ள முதல்வரின் என்ன வகையான பேச்சு இது. இந்த பேச்சு மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தக்கூடும். ஒரு அரசியல் சாசன பதவியில் இருப்பவர் இப்படி பேசுகிறாரா?. அரசியல் போட்டிக்கு நீதிமன்றத்தை ஏன் இழுக்க வேண்டும்? நாங்கள் அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசித்த பிறகே உத்தரவு பிறப்பிக்கிறோமா? உங்கள் கட்சிக்காரருக்கு உச்ச நீதிமன்றத்தின் மீது மரியாதை இல்லையென்றால், விசாரணை வேறு இடத்தில் நடத்தப்படட்டும்’ என்று கூறிய நீதிபதிகள் ரோத்தகி கோரிக்கையை ஏற்று விசாரணையை திங்கட்கிழமைக்கு தள்ளிவைத்தனர்.

The post கவிதா ஜாமீன் குறித்து கருத்து தெலங்கானா முதல்வருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Telangana ,Chief Minister ,Kavita ,New Delhi ,Chandrasekhar Rao ,Kavitha ,Delhi Liquor Policy ,Revanth Reddy ,Delhi ,Kavita Zamin ,
× RELATED அரசு ஊழியர்கள் மீது அமலாக்கத்துறை...