- தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம்
- சென்னை
- பி.எட்.
- ராமகிருஷ்ணன்
- தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்
- தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழகம்
சென்னை: பி.எட். செமஸ்டர் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் ராமகிருஷ்ணன் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அரசு பிஎட் கல்லூரிகள் மற்றும் தனியார் பிஎட் கல்லூரிகளுக்கான தேர்வுகள் நடக்கும் போது கேள்வித்தாள் வெளியில் கசிவதாக ஒவ்வொரு ஆண்டும் புகார் எழும். பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் சில பணியாளர்கள் மூலம் வெளியில் எடுத்து வரப்பட்டு ரூ.2 ஆயிரம் வரைவிற்கப்படுவதாக ஒவ்வொரு ஆண்டும் புகார்கள் வரும்.
அதுகுறித்து, உடனடியாக உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுப்பது வாடிக்கையாக இருந்து வந்தது. இந்நிலையில், தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்துக்கு கடந்த 2 ஆண்டுகளாக துணை வேந்தர் நியமிக்கப்படவில்லை. அதனால் பல்கலைக்கழக நிர்வாகத்தை அந்த பல்கலைக்கழகத்தின் பதிவாளரே கவனித்து வந்துள்ளார். இந்நிலையில்தான், தற்போது நடக்கிற தேர்வுக்கான கேள்வித்தாளும் வெளியில் கசிந்து விலைக்கு விற்கப்பட்டதாக தகவல் வெளியானது. தற்போது பிஎட் செமஸ்டர் தேர்வுகள் கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி தொடங்கியது.
அதன் தொடர்ச்சியாக இரண்டாம் ஆண்டுக்குரிய 4வது செமஸ்டர் தேர்வில், ‘கிரியேட்டிங் அண்டு இன்க்ளூசிவ் ஸ்கூல்’ என்ற பாடத்திற்கான தேர்வு நேற்று நடப்பதாக இருந்தது. இந்நிலையில், காலை 10 மணிக்கு தேர்வு தொடங்க இருந்த நிலையில் அந்த பாடத்திற்கான வினாத்தாள் முன்கூட்டியே, அதாவது நேற்று முன்தினம் இரவே வெளியாகி அதை மாணவர்கள் விலை கொடுத்து வாங்கியதாகவும் தகவல் வெளியானது. இந்த விவகாரம் தமிழ்நாடு உயர்கல்வித்துறையின் கவனத்திற்குச் சென்றதையடுத்து, கசிந்த வினாத்தாள் திரும்பப் பெறப்பட்டது. மாற்று வினாத்தாள் வழங்கப்பட்டு தேர்வு நேற்று நடந்தது.
* இதுகுறித்து உயர்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பழைய வினாத்தாளை பயன்படுத்த வேண்டாம், காலை 9.15 மணிக்குள் புதிய வினாத்தாள் தேர்வு மையங்களுக்கு இணையதளம் வாயிலாக அனுப்பி வைக்கப்படும் என்று தேர்வு மையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி, நேற்று காலை மாற்று வினாத்தாள் அனைத்து தேர்வு மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. கேள்வித்தாள் வெளியான விவகாரத்தை அடுத்து, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் ராமகிருஷ்ணன் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக அதே பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர் ராஜசேகரன் புதிய பதிவாளராக நியமித்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
* புதிய பதிவாளர் ராஜசேகர்
தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கல்வி திட்டம் மற்றும் நிர்வாகத்துறையின் தலைவராக பணியாற்றி வந்த டாக்டர் கே.ராஜசேகர், 28ம் தேதி முதல் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் புதிய பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அனைத்து அதிகாரப்பூர்வ தொடர்புகளையும் புதிய பதிவாளர் முகவரியில் மேற்கொள்ள வேண்டும் என்றும் பல்கலைக்கழக புதிய பதிவாளர் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.
The post பிஎட் தேர்வு கேள்வித்தாள் வெளியான விவகாரம் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் நீக்கம் appeared first on Dinakaran.