திருமலை: ஆந்திர மாநிலம் கடப்பாவில் குப்பைக்கு வரி வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து, தெலுங்கு தேசம் கட்சியினர் மேயர் வீட்டில் குப்பை வீசி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ஆட்சியில் குப்பைகளை சேகரிக்க மாதத்திற்கு வீடு வீடாக ரூ.60 வரி விதிக்கப்பட்டது. அதை ரத்து செய்வதாக தேசிய கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக தேர்தல் பிரசாரத்தில் உறுதி அளித்தன. அதன்படி ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் சந்திரபாபு நாயுடு அரசு கடந்த மூன்று மாதங்களாக குப்பைக்கு வரி வசூல் செய்யவில்லை.
ஆனால், கடப்பாவில் குப்பை வரி தொடர்பாக எம்எல்ஏ மாதவிரெட்டிக்கும், ஒய்எஸ்ஆர் கட்சியை சேர்ந்த மேயர் சுரேஷ்பாபுவுக்கும் இடையே வார்த்தைப் போர் நடந்து வருகிறது. இதற்கிடையே வரி கட்டாவிட்டால் குப்பைகளை சேகரிக்க மாட்டோம் என மேயர் சுரேஷ்பாபு எச்சரிக்கை விடுத்தார். இதற்கிடையே நேற்று தெலுங்கு தேசம் கட்சியினர் மேயர் சுரேஷ்பாபு வீட்டின் முன்பு குப்பைகளுடன் சென்று வீட்டின் முன்பும், வீட்டின் உள்ளேயும் குப்பைகளை வீசி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை கண்டித்து மேயர் ஆதரவாளர்கள் சின்னசவுக் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த விவகாரம் கடப்பா மாநகராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post வரி வசூலிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் மேயர் வீட்டில் குப்பை வீசிய தெலுங்கு தேசம் கட்சியினர்: ஆந்திர மாநிலம் கடப்பாவில் பரபரப்பு appeared first on Dinakaran.