காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி மூலம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் தீர்த்திட வேண்டும் என்ற நல்ல நோக்கில் வாரத்திற்கு ஒருநாள் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில், கலெக்டர் கலைச்செல்வி மோகன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களின் முன்னிலையில், மாவட்டத்தில் உள்ள பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் தருகின்ற கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, துறை வாரியாக பிரித்து அம்மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்கில் நேற்று மனுக்கள் பெறப்பட்டன.
இதற்கென்று தனியாக சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு, வழங்கப்பட்ட மனுக்களை முறைப்படுத்தி அதனை முறையே கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும். இம்மனுக்கள் மீது வாரம்தோறும் ஆய்வு மேற்கொண்டு, தீர்க்க கூடிய மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், நிதி ஆதாரத்துடன் மேற்கொள்ள வேண்டிய பணிகளை அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று விரைந்து முடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, நேற்று நடைபெற்ற மனுக்கள் பெறும் நிகழ்வில் பெறப்பட்ட 306 மனுக்களில் முக்கியமாக சாலை வசதிகள், இடுக்காடுகளுக்கு சரியான அடிப்படை வசதிகள், வீட்டுமனை பட்டாக்கள் மேலும் கொடுக்கப்பட்டுள்ள பட்டாக்களை அடங்கலில் பதிய வேண்டும். குடிநீர் வசதிகள், வடிகால் கால்வாய்கள் தூர் வாரப்பட்டு சரிசெய்ய வேண்டும். மின் கம்பங்களை மாற்றப்பட வேண்டும். சில பகுதிகளில் மின்சாரம் குறைந்த மின் அழுத்த திறன் கொண்டு இருக்கிறது, அதனை சரி செய்ய வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
அம்மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு, தேவை ஏற்படும் மனுக்களுக்கு அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து அப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அரசு அலுவலர்களை, அமைச்சர் தா.மோ.அன்பரசன் கேட்டுக்கொண்டார். தொடந்து, நிகழ்ச்சியில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 6 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.5.76 லட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.27 லட்சம் மதிப்பிலான முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.28 ஆயிரம் மதிப்பிலான மின் மோட்டாருடன் கூடிய விலையில்லா தையல் இயந்திரமும்,
15 பயனாளிகளுக்கு ரூ.1.09 லட்சம் விலையில்லா தேய்ப்பு பெட்டிகளும், கிறிஸ்தவ தேவாலய பணியாளர்கள் – உறுப்பினர் அடையாள அட்டைகள் 43 நபர்களுக்கும், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 115 பயனாளிகளுக்கு ரூ.402.50 லட்சம் மதிப்பிலான கலைஞரின் கனவு இல்லத்திற்கான பணித்தரவு ஆணைகளும், மீன்வளத்துறை சார்பில் உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க 5 பயனாளிகளுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் பரிசல்களும் என மொத்தம் 191 பயனாளிகளுக்கு ரூ.4.12 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.
முன்னதாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியங்களுக்கு ஒரு ஊர்தியும், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒரு ஊர்தியும், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியங்களுக்கு ஒரு ஊர்தியும் என ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் 3 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி சேவையை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.
இதில், கலெக்டர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் எம்பி செல்வம், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், வாலாஜாபாத் ஒன்றிய குழுத்தலைவர் ஆர்.கே.தேவேந்திரன், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
* ஒருநாள் ஆன்மிக சுற்றுலா முன்பதிவு தொடக்கம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை சார்பில் ஒருநாள் ஆன்மிக சுற்றுலா பேருந்து சேவையினை சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (வி)லிட், காஞ்சிபுரம் மண்டலம் சார்பாக ஒருநாள் ஆன்மீக சுற்றுலா பயணம் சேவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஆன்மீக சுற்றுலா காஞ்சிபுரம் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து காலை 7 மணியளவில் துவங்கி, வரதராஜ பெருமாள் கோயில், ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரரேஸ்வரர் கோயில், கோவிந்தவாடி அகரம் குருபகவன் கோயில், திருத்தனி சுப்பிரமணிய சுவாமி கோயில், திருவலங்காடு தேவார சிவலாயம், திருவள்ளுர் வீரராக பெருமாள் கோயில் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ ராமானுஜர் கோயில் என 8 கோயில்கள் தரிசனம் முடித்து, இரவு 9 மணிக்கு காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் ஆன்மீக சுற்றுலா முடிவடைகிறது.மேலும், ஆன்மீக சுற்றுலா கட்டணம் சேவையாக ஒருவருக்கு கட்டணம் 650 ரூபாய், இணையதள முகவரி tnstc.inல் முன்பதிவு செய்ய வேண்டும்.
The post உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி ரூ.4.21 கோடியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார் appeared first on Dinakaran.