×
Saravana Stores

செங்கோட்டை அருகே கரிசல்குடியிருப்பு ஊருக்குள் ஒற்றை யானை புகுந்தது

*விவசாயியை மிதித்து தள்ளியதில் படுகாயம்

*பொதுமக்கள் வெளியே வர தடை விதிப்பு

செங்கோட்டை : செங்கோட்டை அருகே கரிசல் குடியிருப்பு கிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானை விளைநிலங்களுக்கு சென்ற விவசாயியை மிதித்து தள்ளியதில் படுகாயம் அடைந்தார். இதையடுத்து வனப்பகுதிக்குள் யானையை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.பண்பொழி கரிசல் குடியிருப்பு பகுதியில் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் ஒற்றை யானை ஊருக்குள் புகுந்தது.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனச்சரகர் சுரேஷ் தலைமையில் 30 பேர் கொண்ட குழுவினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. மாறாக யானை கரிசல் குடியிருப்பு ஊர் பகுதியில் உள்ள குளத்தை சுற்றி உலா வந்தது. இதனால் விவசாயிகள் தங்களது விளை நிலங்களுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் கரிசல்குளம் பகுதிக்குச் சென்ற கரிசல் குடியிருப்பு பஜனை மடத்தெருவை சேர்ந்த காளி தேவர் மகன் ஆறுமுகச்சாமி (53) என்ற விவசாயியை அங்கு சுற்றி திரிந்த ஒற்றை யானை மிதித்து தள்ளியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் அங்கிருந்து தப்பி வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவரை செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதையடுத்து தென்காசி டிஎஸ்பி நாகசங்கர் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். அப்பகுதியில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரிசல் குடியிருப்பு கிராமத்தில் மின்தடை செய்யப்பட்டது. வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் தங்கள் வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம். விவசாயிகள் யாரும் கரிசல்குளம் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்தனர். அப்பகுதிக்கு பொதுமக்கள் செல்லாதவாறு சாலையில் கயிறு கட்டி போலீசார் தடுப்பு ஏற்படுத்தி இருந்தனர்.

இதனால் கரிசல் குடியிருப்பு பகுதியில் உள்ள மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லவில்லை. ஊர் மக்கள் யாரும் வேலைக்கு செல்லவில்லை. விவசாயிகள் தங்கள் விளைநிலங்களுக்கு செல்லாமல் தங்கள் வீடுகளிலேயே முடங்கினர். தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் உத்தரவின் பேரில் ஆர்டிஓ லாவண்யா சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வனத்துறையினர் மற்றும் போலீசாருடன் ஆய்வு மேற்கொண்டார். யானையை விரட்டுவதற்காக வனத்துறையினர் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது ஊருக்குள் புகுந்துள்ள ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

அதன்பேரில் கரிசல் குடியிருப்பு ஊருக்குள் வர விடாமல் யானையை தடுக்கவும், அதனை அடர்ந்த வனப்பகுதிக்குள் துரத்தவும் தொடர்ந்து வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் யானை அடர்ந்த வனப்பகுதிக்கும் செல்லாமல் அடம்பிடித்து கரிசல் குளத்தை சுற்றி வந்தது. இதையடுத்து யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.
இதைதொடர்ந்து நெல்லை மாவட்ட வன அலுவலர் முருகன் தலைமையில், வனத்துறை மருத்துவ குழுவினர் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயன்றனர்.

ஆனால் யானை அங்கும், இங்கும் சென்றதால் மயக்க ஊசி மூலம் யானையை பிடிக்கும் முயற்சி தோல்வி அடைந்தது. எனவே வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இதனிடையே கடையநல்லூர் எம்எல்ஏ கிருஷ்ணமுரளி கரிசல் குடியிருப்பு கிராமத்துக்கு வருகை தந்தார். அவர் ஒற்றை யானையை வனப்பகுதிக்குள் விரட்ட எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து வனத்துறையினரிடம் கேட்டறிந்தார். இதைதொடர்ந்து யானை தாக்கியதால் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் ஆறுமுகச்சாமி என்பவரை தென்காசி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி டாக்டர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

The post செங்கோட்டை அருகே கரிசல்குடியிருப்பு ஊருக்குள் ஒற்றை யானை புகுந்தது appeared first on Dinakaran.

Tags : Karisalkudiiripu ,Red Fort ,Sengottai ,Karisal ,Karisalkudiyaru ,Dinakaran ,
× RELATED செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் பள்ளியில் மாநாடு