×

சச்சின், டோனி, கோஹ்லியுடன் நேரம் செலவிட ஆசை… உலகத்தில் எனக்கு மிகவும் பிடித்த வீரர் உசைன்போல்ட்தான்: மனு பாக்கர் மனம் திறந்த பேட்டி

மும்பை: நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் துப்பாக்கிச் சுடுதல் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலம், கலப்பு இரட்டையர் பிரிவில் மற்றொரு வெண்கலப் பதக்கம் என ஒரே ஒலிம்பிக் தொடரில் 2 பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் மனு பார்க்கர். இதன் மூலம் இந்தியாவின் பட்டி தொட்டி எங்கும் மனு பார்க்கர் பிரபலமடைந்துள்ளார். பார்க்கருக்கு கோடிகளை கொட்டி கொடுத்து விளம்பர படங்களில் நடிக்க வைக்க விளம்பர நிறுவனங்கள் போட்டி போடுகின்றனர்.

ஒலிம்பிக் தொடருக்கு முன்பு மனு பாக்கருக்கு ரூ.20 லட்சம் வரை மட்டுமே கொடுக்க முன்வந்த விளம்பர நிறுவனங்கள் அவரது பிராண்ட் வேல்யூ 330 மடங்கு அதிகரித்த நிலையில், தற்போது ரூ.2 கோடி வரை ஊதியம் கொடுக்க தயாராக உள்ளன. இதனிடையே இந்தியாவின் பல்வேறு நட்சத்திரங்களை சந்தித்து வரும் மனு பாக்கர், பல்வேறு மாநிலங்களுக்கு பயணித்து சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் பேசி வருகிறார்.

இந்த நிலையில் மனு பாக்கரிடம் ஒருநாள் முழுக்க ஒரு விளையாட்டு வீரருடன் நேரம் செலவிட வேண்டும் என்றால் யாரை தேர்வு செய்வீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மனு பாக்கர் கூறுகையில், ‘‘முதலில் ஜமைக்கா விளையாட்டு வீரர் உசைன் போல்ட்டுடன் நேரம் செலவிட விரும்புகிறேன்.

அவர் தொடர்புடைய ஏராளமான புத்தகங்களை படித்திருக்கிறேன். அவர் கடந்து வந்த கடினமான பயணம், வலி நிறைந்த வாழ்க்கையையும் நன்கு அறிவேன். அவரின் எந்த நேர்காணலையும் நான் தவற விட்டதில்லை. இந்திய விளையாட்டு வீரர்களில் எனது ஆல் டைம் பேவரைட் சச்சின் டெண்டுல்கர் தான். அவருடன் நேரம் செலவிட ஆவலாக உள்ளேன். அதன்பிறகு எம்எஸ் டோனி மற்றும் விராட் கோஹ்லியுடன் நேரம் செலவிட ஆசை இருக்கிறது.

இந்த மூன்று பேரில் ஒருவருடன் தலா ஒரு மணி நேரம் செலவிட வாய்ப்பு கிடைத்தாலே எனக்கு அது வாழ்நாள் பொக்கிஷம் போன்றது. அதை விட பெரிய ஆசை எதுவும் எனக்கில்லை. அதேபோல் ஒரு விளையாட்டு வீராங்கனையாக இந்தியாவுக்கு இன்னும் பதக்கங்கள் வெல்ல வேண்டும் என்று பேராவல் இருக்கிறது. ஒலிம்பிக் மட்டுமல்லாமல் மற்ற போட்டிகளிலும் பங்கு பெற்று வெற்றிபெற வேண்டும். அதேபோல் வருங்கால தலைமுறைக்கு எனது அனுபவத்தையும் பயிற்சிகளையும் கூறுவதற்கு எப்போதும் தயாராக இருப்பேன். ஏனென்றால் புதிதாக பயிற்சியை தொடங்குவோருக்கு எனது அனுபவங்கள் உதவியாக இருக்கும்’’ என்று கூறினார்.

The post சச்சின், டோனி, கோஹ்லியுடன் நேரம் செலவிட ஆசை… உலகத்தில் எனக்கு மிகவும் பிடித்த வீரர் உசைன்போல்ட்தான்: மனு பாக்கர் மனம் திறந்த பேட்டி appeared first on Dinakaran.

Tags : Sachin ,Dhoni ,Kohli ,Usainbold ,Manu Packer ,Mumbai ,Olympics ,Paris Olympics ,Manu Pakar ,Dinakaran ,
× RELATED கொலைக் குற்றவாளியை சுட்டுப் பிடித்த போலீசார்