- கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகல கொண்டாட்டம்
- கிருஷ்ணா
- சென்னை
- கிருஷ்ண ஜெயந்தி திருவிழா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கண்ணன்
- ராதா
சென்னை: தமிழகம் முழுவதிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. வீட்டுக்குள் கிருஷ்ணன் நடந்து வருவதுபோல கோலமிட்டும், சீடை, முறுக்கு, அப்பம் உள்ளிட்ட பலகாரங்களோடு அவல், வெண்ணெய் உள்ளிட்டவற்றை நிவேதனம் செய்தும் வழிபட்டனர். வீடுகளில் உள்ள குழந்தைகளை கண்ணனாகவும், ராதையாகவும் அலங்கரித்து அவர்களுக்கு பட்சணங்களை கொடுத்து வழிபட்டனர். ஏராளமான மக்கள் அரிசி மாவினை தண்ணீரில் கலந்து, அதனை கிருஷ்ணரின் கால் பாதங்கள் போன்று வீட்டினுள் அச்சாக வைத்து, தங்களுடைய வீட்டிற்கு கிருஷ்ணரே வந்ததாக பாவித்து அகம் மகிழ்ந்தனர்.
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சென்னை உட்பட பல ஊர்களிலும் கடைகளில் பூக்கள், பழங்கள், பூஜை பொருட்கள் விற்பனை அதிகளவில் நடைபெற்றுள்ளது. மேலும், பலரும் கிருஷ்ணர் சிலைகளை ஆர்வத்துடன் வழிபடுவதற்காக வாங்கிச் சென்றுள்ளனர். சென்னையில் பல இடங்களில் கிருஷ்ணர் சிலைகள் விற்பனைக்கு வந்திருந்தது. குழந்தை கிருஷ்ணர், ராதையுடன் இருக்கும் கிருஷ்ணர், நண்பர்களுடன் விளையாடும் கிருஷ்ணர், வெண்ணை உண்ட கிருஷ்ணர், கோபியர்களுடன் இருக்கும் கிருஷ்ணர், தவழும் கிருஷ்ணர் என்று பல விதமான உருவங்களில் சிறிய, பெரிய கிருஷ்ணர் பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
சென்னை புரசைவாக்கம், மயிலாப்பூர், தியாகராயநகர், பாரிமுனை, மூலக்கடை, பெரம்பூர், அண்ணாநகர், கோயம்பேடு, பூந்தமல்லி மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளிலும் கிருஷ்ணர் சிலைகள் விற்பனை செய்யப்பட்டது. அதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் தங்கள் வீடுகளுக்கு வாங்கி சென்ற காட்சிகளை பார்க்க முடிந்தது. தோரணம், மாவிலை மற்றும் பூஜைக்குரிய பொருட்களை ஏராளமானவர்கள் கடை வீதிக்கு வந்து வாங்கி சென்றனர். இதனால் கடைவீதிகளில் இன்று கூட்டம் அலைமோதியது.
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி சென்னையில் உள்ள கிருஷ்ணர் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருவதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இன்று காலை 9.15 மணி முதல் நாளை காலை 7.30 வரை அஷ்டமி திதி இருக்கிறது. எனவே கோகுலாஷ்டமி வழிபாட்டினை மேற்கொள்பவர்கள் இன்று மாலை 6 மணிக்கு மேல் வழிபாட்டை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை இ.சி.ஆரில் உள்ள இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் மகா அபிஷேகமும், பல்வேறு பக்தி நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நாளை கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட இருக்கிறது.
The post கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகல கொண்டாட்டம்; கோயில்களில் சிறப்பு வழிபாடு பக்தர்கள் கூட்டம் அலைமோதல்: கிருஷ்ணர் போல் குழந்தைகளுக்கு வேடமிட்டு அசத்தினர் appeared first on Dinakaran.