திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் 4ம்தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறும் பிரம்மோற்சவத்தின்போது முன்னுரிமை சேவைகள், சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்படுவதாக செயல் அதிகாரி தெரிவித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் அக்டோபர் 4ம்தேதி தொடங்கி 12ம்தேதி வரை நடைபெற உள்ளது. இதுதொடர்பான ஆலோசனைக்கூட்டம் செயல் அதிகாரி ஷியாமளாராவ் தலைமையில் திருமலையில் நேற்று நடந்தது. பின்னர் ஷியாமளாராவ், நிருபர்களிடம் கூறியதாவது:
அக்டோபர் 4ம்தேதி பிரம்மோற்சவ கொடியேற்றம் நடைபெறும். அன்று முதல்வர் சந்திரபாபு நாயுடு, மாநில அரசு சார்பில் பட்டு வஸ்திரம் சமர்பிக்க உள்ளார். தினந்தோறும் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையிலும் உற்சவம் நடைபெறும். பிரம்மோற்சவத்தின் 5ம்நாள் (8ம்தேதி) மாலை 6.30 மணிக்கு கருட சேவை உற்சவம் நடைபெறும். அதிக பக்தர்கள் வருவார்கள் என்பதால் பல முன்னுரிமை சேவைகள், சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சுமார் 7 லட்சம் லட்டுகள் நிலுவை வைத்து பக்தர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் வழங்கப்படும். கருடசேவைக்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்படுவார்கள்.
திருமலையில் அறைகள் குறைவாக இருப்பதால், பக்தர்கள் திருப்பதியில் தங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கல்யாண கட்டா (முடி காணிக்கை இடம்) மற்றும் பிற மினி கல்யாண கட்டாக்களில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்த நீண்ட நேரம் காத்திருக்காமல் இருக்க பணியாளர்கள் பக்தர்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய ஏற்பாடு செய்து வருகிறோம்.
அக்டோபர் 8ம்தேதி கருடசேவையின்போது மலைப்பாதை சாலைகளில் இரு சக்கர வாகன போக்குவரத்து தடை விதிக்கப்படும். ஸ்ரீவாரி மெட்டு, அலிபிரி பழைய சோதனைச்சாவடியில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மீண்டும் திவ்ய தரிசன டோக்கன்: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு அலிபிரி மலைப்பாதையில் பாத யாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு கொரோனாவிற்கு முன்பு இருந்ததை போன்று சிறப்பு தரிசனத்தில் அனுமதிக்கும் திவ்ய தரிசன டோக்கன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அலைமோதும் பக்தர்கள்: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 79,521 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 40,152 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ₹3.87 கோடி காணிக்கை செலுத்தினர். இன்று காலை வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகள் நிரம்பி கங்கம்மா கோயில் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை உள்ளது. ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 4 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.
The post பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருப்பதி கோயிலில் சிறப்பு தரிசனங்கள் ரத்து: செயல் அதிகாரி தகவல் appeared first on Dinakaran.