×

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி

மான்செஸ்டர்: இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதில் முதல் டெஸ்ட் மான்செஸ்டரில் நடந்து வந்தது. முதல் இன்னிங்சில் முறையே இலங்கை 236, இங்கிலாந்து 358 ரன் எடுத்தன. இதையடுத்து 122 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணியில் நிஷான் மதுஷ்கா, குசால் மெண்டிஸ் டக்அவுட் ஆகினர். ஏஞ்சலோ மேத்யூஸ் 65, கேப்டன் தனஞ்செயா 11 ரன்னில் அவுட் ஆகினர். 3ம் நாள் முடிவில் இலங்கை 6 விக்கெட் இழப்பிற்கு 204 ரன் எடுத்திருந்தது. சண்டிமால் 20, கமிந்து மெண்டிஸ் 56 ரன்னில் களத்தில் இருந்தனர்.

4வது நாளான நேற்று கமிந்து மெண்டிஸ் 113, சண்டிமால் 79 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். 7வது விக்கெட்டிற்கு இவர்கள் 117 ரன் சேர்த்தனர். அடுத்துவந்த பிரபாத் ஜெயசூரியா 5, விஷ்வா பெர்னாண்டோ டக்அவுட் ஆகினர். 90.3 ஓவரில் 326 ரன்னுக்கு இலங்கை ஆல்அவுட் ஆனது. இங்கிலாந்து பவுலிங்கில் கிறிஸ் வோக்ஸ், மேத்யூ பாட்ஸ் தலா 3 விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 205 ரன் இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணியில் பென் டக்கெட் 11, டான் லாரன்ஸ் 34, கேப்டன் ஒல்லி போப் 6, ஹாரி புரூக் 32, ஜேமி ஸ்மித் 39 ரன் எடுத்து அவுட் ஆகினர்.

ஜோ ரூட் நாட் அவுட்டாக 62, கிறிஸ் வோக்ஸ் 8 ரன் அடிக்க 57.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் 111, 2வது இன்னிங்சில் 39 ரன் எடுத்த ஜேமி ஸ்மித் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றி மூலம் 1-0 என இங்கிலாந்து முன்னிலை வகிக்க 2வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் வரும் 29ம்தேதி தொடங்கி நடக்கிறது.

ராகுல் டிராவிட்டை முந்திய ஜோ ரூட்: ஜோரூட் நேற்று 2வது இன்னிங்சில் டெஸ்ட்டில் தனது 64வது அரை சதத்தை அடித்தார். இதன் மூலம் டெஸ்ட்டில் அதிக அரைசதம் அடித்தவர்களில் இந்தியாவின் டிராவிட், ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டரை (63 அரைசதம்) முந்தி 3வது இடத்திற்கு முன்னேறினார். சச்சின் டெண்டுல்கர் 68, சந்தர்பால் 66 அரைசதத்துடன் முதல் 3 இடத்தில் உள்ளனர்.

The post இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்: 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி appeared first on Dinakaran.

Tags : Sri ,Lanka ,England ,Manchester ,Sri Lanka ,Dinakaran ,
× RELATED 147 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில்...