×
Saravana Stores

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உத்தரவை ரத்து செய்து தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உத்தரவை ரத்து செய்து தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சக வழிகாட்டு நெறிமுறைகள் புதிய சூளைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. செங்கல் சூளைகளுக்கு இடையே ஒரு கிலோ மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என 2022-ல் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. குடியிருப்பு, பழத்தோட்டங்களில் இருந்து குறைந்தது 800 மீ. தொலைவில் செங்கல் சூளைகள் இயங்க வேண்டும்.

செங்கல் சூளைகள் தொடர்பாக ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த 2022-ம் ஆண்டு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கியது. வழிகாட்டுதல்கள் புதிய சூளைக்கு மட்டுமே பொருந்தும் என 2023 பிப். 14-ல் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. உத்தரவை எதிர்த்து கோவை தடாகத்தை சேர்ந்த மாணிக்கராஜ் என்பவர் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வாரிய ஆணையை அனுமதித்தால் சட்டவிரோத சூளைகள் கண்காணிப்பு இன்றி இயங்க வழிவகுக்கும் என தெரிவித்த தீர்ப்பாயம், ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சக வழிகாட்டு நெறிமுறைகள் புதிய சூளைகளுக்கு மட்டுமே பொருந்தும் என்ற உத்தரவை ரத்து செய்தது. மேலும் செங்கல் சூளைகள் இயக்கம் தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்க தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டது.

The post தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உத்தரவை ரத்து செய்து தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : South Zone National Green Tribunal ,Tamil Nadu Pollution Control Board ,Chennai ,Union Ministry of the Environment ,Dinakaran ,
× RELATED விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியை...