×

அமைச்சர் பதவியை விட சினிமா தான் முக்கியம் சர்ச்சை பேச்சால் சுரேஷ் கோபியின் பதவி பறிபோகுமா? பாஜ மேலிடம் கடும் அதிருப்தி

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சுரேஷ் கோபி கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜ சார்பில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கேரளாவில் பாஜவுக்கு கணக்கை தொடங்கி வைத்ததால் சுரேஷ் கோபிக்கு இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன் கொச்சியில் நடந்த பிலிம் சேம்பர் கூட்டத்தில் சுரேஷ் கோபி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், எனக்கு அமைச்சர் பதவியை விட சினிமா தான் முக்கியமாகும். 22 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன்.

அதில் நடிப்பதற்கு அமித்ஷாவிடம் அனுமதி கேட்டு ஒரு கடிதம் கொடுத்தேன். ஆனால் அந்தக் கடிதத்தை அவர் மூலையில் தூக்கி வீசிவிட்டார். படங்களில் நடிக்க இதுவரை எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. அனுமதி கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். இல்லாவிட்டாலும் செப்டம்பர் 6ம் தேதி முதல் ஒற்றக்கொம்பன் சினிமா படப்பிடிப்பில் கலந்து கொள்வேன். அதற்காக என்னை அமைச்சர் பதவியை விட்டு நீக்கினால் நல்லது என்று நினைப்பேன். சினிமா இல்லாவிட்டால் நான் செத்து விடுவேன் என்று கூறினார். சுரேஷ் கோபியின் இந்த பேச்சு பாஜ மேலிடத்திற்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக அமித்ஷா குறித்தும் அவர் பேசியது மேலிடத் தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் பதவியில் இருந்தபடி பணம் பெறும் வேறு தொழிலில் ஈடுபடக்கூடாது. எனவே சினிமாவில் நடிக்கும் முடிவில் சுரேஷ் கோபி உறுதியாக இருந்தால் அவரது அமைச்சர் பதவி பறிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாஜ மேடம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

The post அமைச்சர் பதவியை விட சினிமா தான் முக்கியம் சர்ச்சை பேச்சால் சுரேஷ் கோபியின் பதவி பறிபோகுமா? பாஜ மேலிடம் கடும் அதிருப்தி appeared first on Dinakaran.

Tags : Suresh Gopi ,BJP ,Thiruvananthapuram ,Thrissur ,Lok Sabha ,Chief Minister ,Kerala ,Suresh Gobi ,
× RELATED பத்திரிகையாளர்களை தள்ளிவிட்ட...