×

குட்பை மல்யுத்தம்!

நன்றி குங்குமம் தோழி

– வினேஷ் போகத்

‘‘அம்மா, எனக்கு எதிராக மல்யுத்தம் வென்றுவிட்டது. நான் தோற்றுவிட்டேன். உங்கள் கனவுகளும் என் தைரியமும் தகர்ந்துவிட்டன. அதற்காக என்னை மன்னியுங்கள். இனி போராட என்னுள் வலிமை இல்லை. குட் பை மல்யுத்தம் 2001-2024. உங்கள் அனைவருக்கும் நான் என்றும் கடமைப்பட்டிருப்பேன். என்னை மன்னியுங்கள்’’-இப்படியொரு துயரம் நிறைந்த வார்த்தைகளை, ஓய்வை அறிவித்த கையோடு தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்.

‘இனி போராட என்னுள் வலிமை இல்லை’ என்ற அந்த வார்த்தைகளின் வழியே அவரின் ஒட்டுமொத்த வலிகளையும் வேதனைகளையும் நம்மால் உணரமுடியும். ‘இந்தியாவின் மகள் நீங்கள், உங்களுடன் நாங்கள் இருக்கிறோம்’ என இப்போது அவருக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுகளும், ஆறுதல் கரங்களும் நீண்டபடி உள்ளன. அவர் ஓய்வு அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்ற குரல்களும் ஒலிக்கின்றன.

காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டி ஆகிய இரண்டிலும் தங்கம் வென்றுள்ள முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்ற அசாத்திய பெருமை உடையவர் வினேஷ் போகத். ஒருவேளை பாரிஸில் தங்கம் வென்றிருந்தால் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற சாதனையும் அவர் வசம் வந்திருக்கும். ஆனால், நூறு கிராம் எடை அதிகரிப்பு அனைத்தையும் புரட்டிப் போட்டுவிட்டது. ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்கிற அவரின் நீண்டநாள் கனவையும் சாகடித்துவிட்டது. அதனாலேயே அத்தனை துயர வரிகளை அவரின் பதிவில் பிரதிபலித்திருந்தார். ஏனெனில், அவர் கடந்து வந்த பாதைகள் அவ்வளவு சுலபமானதல்ல.

1994ம் ஆண்டு ஹரியானா மாநிலத்தின் சார்கி தாத்ரி நகரில் மல்யுத்த குடும்பத்தில் பிறந்தவர் வினேஷ் போகத். தந்தை ராஜ்பால் போகத். தாய் பிரேம்லதா. வினேஷ் போகத் தன்னுடைய ஒன்பது வயதில் தந்தையை இழந்தார். நிலத்தகராறு பிரச்னையில் ஒன்றில் உறவினர் ஒருவர் இவரின் தந்தையைச் சுட்டுக்கொன்றார். அப்போது தாய் பிரேம்லதாவிற்கு 32 வயதுதான். அவருக்கு வினேஷ் போகத்தையும், மற்றொரு மகள் பிரியங்கா போகத்தையும், மூத்த மகனையும் மிகுந்த சிரமத்திற்கு இடையில் ஆளாக்க வேண்டிய நிர்பந்தம் உண்டானது. இதற்கிடையில் அவர் புற்றுநோயுடனும் போராடிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில்தான் ராஜ்பால் போகத்தின் உடன் பிறந்த அண்ணன் மகாவீர் சிங் போகத், தன் மகள்களுடன் சேர்த்து பிரியங்காவிற்கும், வினேஷிற்கும் மல்யுத்தம் பயிற்சி அளித்தார். அவர்கள் இருவரையும் தன்னுடனே வைத்துக் கொண்டார். இந்த மகாவீர் சிங் போகத்தின் மகள்கள்தான் கீதா போகத், ரித்து போகத், பபிதா குமாரி, சங்கீதா போகத் ஆகியோர். இவர்கள் அனைவருமே இந்திய மல்யுத்த வீராங்கனைகள். இந்தியாவிற்காக பல பதக்கங்களை வென்று தந்தவர்கள்.

இதில் கீதா போகத் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்ற பெருமை கொண்டவர். சங்கீதா போகத்தின் கணவர்தான் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பஜ்ரங் புனியா. அதுமட்டுமல்ல, மகாவீர் சிங் போகத்தின் கதாபாத்திரமே 2016ம் ஆண்டு ‘தங்கல்’ படமானது. மகாவீர் சிங் போகத்தாக ஆமீர்கான் நடித்தார். இதனால், மகாவீருக்கு இந்திய அரசின் உயரிய துரோணச்சார்யா விருதும் கிடைத்தது.

அவரிடம் பெற்ற பயிற்சியே வினேஷ் போகத்தையும் சர்வதேச அளவில் கொண்டு சென்றது. ஆரம்பத்தில் தேசிய அளவில் பல்வேறு பதக்கங்களை வென்ற வினேஷ் போகத் இந்திய ரயில்வேயில் வேலைக்குச் சேர்ந்தார். 2013ம் ஆண்டு தில்லியில் நடந்த ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 51 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். 2014ம் ஆண்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 48 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்று சர்வதேச கவனம் ஈர்த்தார்.

பின்னர் இதே ஆண்டு நடந்த ஆசிய விைளயாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். தொடர்ந்து 2015ல் கத்தார் நாட்டின் தோகா நகரில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வெற்றிகொண்டார். இதனையடுத்து 2016ல் பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிராவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 48 கிலோ எடைப் பிரிவில் கலந்துகொண்டார். ஆனால் காலிறுதிப் போட்டியில் மூட்டுவலி காயத்தால் பாதியில் வெளியேறினார்.

அப்போது பலரும் இனி வினேஷ் போகத்தால் விளையாட முடியுமா என சந்தேகத்தினர். ஆனால், மன உறுதியுடன் 2018ல் மீண்டு வந்தார். ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் போட்டியில் 50 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்று தகதகத்தார். இதே ஆண்டு ஜகர்த்தாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் தங்கம் வென்றார். இதற்கிடையே அவர் 53 கிலோ எடைப் பிரிவிலும் கலந்து கொண்டு பதக்கங்கள் வென்றார்.

2018ம் ஆண்டு சக மல்யுத்த வீரர் சோம்வீர் ராதீயை திருமணம் செய்துகொண்டார். இருவரும் ஒன்றாக ரயில்வேயில் பணிபுரியும்போதே ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டனர். 2019ல் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 53 கிலோ எடைப் பிரிவில் வெண்கலம் வென்றார். தொடர்ந்து 53 கிலோ எடைப் பிரிவிலேயே கலந்துகொள்ள ஆரம்பித்தார். 2020 புதுதில்லியில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம், 2021ல் கஜகஸ்தான் நாட்டின் அல்மாட்டி நகரில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கம், 2022ல் இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கம் என வினேஷின் கிராஃப் உயர்ந்தது.

2021ல் நடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் 53 எடைப் பிரிவில் கலந்து கொண்டு காலிறுதியில் தோற்றார். இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டு இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பா.ஜ எம்பியுமான பிரிஜ் பூஷன் ஷரன் சிங், பெண் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் துன்புறுத்தல செய்ததாக குற்றஞ்சாட்டி மல்யுத்த வீராங்கனைகள் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதில் சாக்‌ஷி மாலிக்குடன் முன்னணியில் இருந்தவர் வினேஷ் போகத். இதனால் அவரின் விளையாட்டு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்த நேரத்தில்தான் வளர்ந்துவரும் வீராங்கனையான அன்டிம் பங்கல் 2023 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றார்.

இதன்மூலம் 53 கிலோ எடைப்பிரிவில் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதிபெற்றார். அப்போது போராட்டம் காரணமாக அமைக்கப்பட்டிருந்த இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தற்காலிகக் குழு 53 கிலோ எடைப்பிரிவில் வினேஷ் போகத்திற்கு ஒரு ட்ரையல் தருவதாகச் சொன்னது. ஆனால், பிரிஜ் பூஷனுக்கு வேண்டப்பட்டவரான சஞ்சய் சிங் இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவரானதும் தனக்கு 53 கிலோ எடைப் பிரிவு கிடைக்காது எனத் தெரிந்துகொண்டார் வினேஷ். 50 அல்லது 57 கிலோ எடைப்பிரிவுக்கு மாற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார்.

நிறைவில் போகத் 50 கிலோ எடைப் பிரிவை தேர்ந்தெடுத்தார். தன் உடல் எடையை 50 கிலோவாக குறைத்து ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்றார். முதல் போட்டியிலேயே உலகச் சாம்பியனான ஜப்பானின் யுய் சுசாகியை தோற்கடித்தார். அடுத்து காலிறுதியில் உக்ரைனின் ஒக்ஸானா லிவாச்சையும், அரையிறுதியில் கியூபாவின் யூஸ்னேலிஸ் குஸ்மன் லோபஸையும் வென்றார். இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் சாரா ஆன் ஹில்டர்பிரான்ட்டுடன் மோத இருந்தார்.

இந்நிலையில்தான் நூறு கிராம் எடை அதிகரிப்பு காரணமாக தகுதிநீக்கம் செய்யப்பட்டார். அரையிறுதி ஆட்டம் முடிந்தபோதே வினேஷ் போகத்தின் உடல் எடை அதிகரித்துள்ளது. அவர் இறுதிப்போட்டிக்கு உடல் எடையை குறைக்க உடற்பயிற்சிகள், சைக்கிளிங் உள்ளிட்டவற்றை விடிய விடிய மேற்கொண்டுள்ளார். தலைமுடியைகூட வெட்டியிருக்கிறார். ஆனாலும்கூட நூறு கிராம் எடை அதிகமாக இருந்துள்ளது.

ஒலிம்பிக்கைப் பொறுத்தவரை விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படும் எனச் சொல்லப்படுகிறது. இந்நிலையில்தான் தனக்கு வெள்ளிப் பதக்கத்தை பகிர்ந்தளிக்க வேண்டுமென வினேஷ் தரப்பில் விளையாட்டுக்கான நடுவண் நீதிமன்றத்திடம் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம். ஆனால், அனைத்து இந்தியர்களின் மனங்களையும் வென்று தங்கத் தாரகையாக வினேஷ் போகத் ஜொலிக்கிறார் என்பது மட்டும் நிஜம்.

தொகுப்பு: செல்வி

The post குட்பை மல்யுத்தம்! appeared first on Dinakaran.

Tags : wrestling ,kumkum dothi – ,Vinesh Phogat ,Goodbye ,Goodbye Wrestling ,Dinakaran ,
× RELATED உணவுக் கலாச்சாரத்திற்கு கிடைத்த மதிப்பான விருது!