திருத்தணி: திருத்தணி நகரில் உள்ள திருத்தணி நகரம், மடம், அமிர்தாபுரம் ஆகிய மூன்று கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் 25 ஆண்டுகளாக நிரந்தர கட்டிடம் இல்லாத அவல நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் இருக்கும் இடத்தை தேடி அலைந்து அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, மூன்று கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் ஒரே இடத்தில் நிரந்தர கட்டிடம் கட்டி தந்தால் சந்தித்து, சான்றிதழ்கள் வாங்க வசதியாக இருக்கும் என நீண்ட நாள் கோரிக்கையாக வைத்துள்ளனர்.
திருத்தணி நகராட்சியில் 21 வார்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். திருத்தணி நகரில் வசிக்கும் பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்று பதிவு செய்யவும், மருத்துவ காப்பீடு அட்டை, விவசாயிகள் பட்டா, சிட்டா நகல், காலம் கடந்து பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் உட்பட அரசின் பல்வேறு நலதிட்ட உதவிகள் பெற கிராம நிர்வாக அலுவலரை அணுக வேண்டி உள்ளது.
திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் திருத்தணி நகரம், மடம், அமிர்தாபுரம் ஆகிய 3 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.
பொதுமக்கள எளிதாக கிராம நிர்வாக அலுவலரை சந்தித்து சான்றிதழ்கள் பெற ஏதுவாக கிராம நிர்வாக அலுவலக கட்டிடங்கள் உள்ளன. இருப்பினும் திருத்தணியில் பழைய தாசில்தார் அலுவலகம் அருகில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு சிதிலமடைந்து பயனற்று மூடப்பட்டது. இதன் பிறகு 25 ஆண்டுகளாக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நிரந்தர கட்டிடம் கட்டப்படவில்லை.
திருத்தணி நகரில் கிராம நிர்வாக அலுவலர்களாக பணியாற்றுபவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப வாடகை கட்டிடத்தில் அலுவலகம் வைத்துக் கொண்டு பணியாற்றி வருவதும், பணி மாறுதல் பெற்று சென்று விட்டால், புதிதாக வரும் கிராம நிர்வாக அலுவலர் அவர் வசதிக்கு ஏற்ப, வேறு புதிய வாடகை கட்டிடத்தில் தங்கி அங்கிருந்து கிராம நிர்வாக அலுவலர் பணிகள் மேற்கொள்வதால், கிராம நிர்வாக அலுவலர்களை எளிதில் சந்தித்து சான்றிதழ்கள் பெற பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர்.
மூன்று கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் ஒரே இடத்தில் நிரந்தர கட்டிடம் கட்டி தந்தால், பொதுமக்கள் எளிதாக கிராம நிர்வாக அலுவலர்களை சந்தித்து மனுக்கள் வழங்கவும், சான்றிதழ்கள் உரிய நேரத்தில் பெற்று பயன் அடைய வசதியாக இருக்கும் என்று பொதுமக்களின் நீண்ட கால எதிர்பார் பார்ப்பாக உள்ளது.
* விஏஓ இல்லாததால் அவதி
திருத்தணி நகரில் 6 மாதங்களாக கிராம நிர்வாக அலுவலர் பணியிடம் காலியாக உள்ள நிலையில், திருத்தணியிலிருந்து 20 கி.மீ. தூரத்தில் உள்ள சிவ்வாடா கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் ராஜேஷ் என்பவர் திருத்தணி நகரம் விஏஒவாக கூடுதல் பொறுப்பில் பணியாற்றி வருகிறார். இதனால் ஒரே நேரத்தில் திருத்தணி நகரம், சிவ்வாடா ஆகிய இரண்டு பகுதிகளில் கிராம நிர்வாக அலுவலர் பணிகள் பார்க்க வேண்டிய நிலை இருப்பதால், திருத்தணி நகரமக்கள் உரிய நேரத்தில் மிக அவசியமான மருத்துவ காப்பீடு அட்டை, உள்ளிட்ட சான்றிதழ்கள் பெற முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
* விரைவில் விஏஓ நியமிக்கப்படுவார்
திருத்தணியில் உள்ள மூன்று கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நிரந்தர கட்டிடம் இல்லாத நிலையில் பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலர்களை தேடி அலையும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் தொடர்பாக மாவட்ட கலெக்டர் பார்வைக்கு கொண்டு சென்று நிரந்தர தீர்வு காணப்படும் என்றும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்று வருவதால், விரைவில் திருத்தணி நகரத்தில் நிரந்தர கிராம நிர்வாக அலுவலர் நியமிக்கப்படுவார் என தாசில்தார் மலர்விழி தெரிவித்தார்.
The post திருத்தணியில் 25 ஆண்டுகளாக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு நிரந்தர கட்டிடம் இல்லாத அவலம்: சான்றிதழ்களுக்காக அலையும் மக்கள் appeared first on Dinakaran.