×

பெண் டாக்டர் கொலையை கண்டித்து 7வது நாளாக ஜிப்மர் மருத்துவர்கள் பணியை புறக்கணித்து போராட்டம் புறநோயாளிகள் பிரிவு 2 மணி நேரம் இயங்கியதால் மக்கள் அவதி

புதுச்சேரி, ஆக. 20: கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை கண்டித்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் 7வது நாளாக நேற்று பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். மேற்குவங்கம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுநிலை பயிற்சி பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இவ்விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பெண் பயிற்சி மருத்துவர் படுகொலையை கண்டித்து நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள் கடந்த 13ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பின்னர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள் சங்கம் சார்பில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் கடந்த 16ம் தேதி முதல் காலவரையின்றி பணியை புறக்கணித்து 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் புறநோயாளிகள் பிரிவு வாயிலில் திரண்டு ேபாராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் 7வது நாளாக நேற்றும் ஜிப்மர் மருத்துமனை மருத்துவர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் புறநோயாளிகள் பிரிவு காலை 8 மணி முதல் 10 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டது.
இதனால் 150 பேருக்கு மட்டுமே புறநோயாளி பிரிவில் சிகிச்சை பெற சீட்டு வழங்கப்பட்டது.

இதனால் பல நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். மேலும் வரும் நாட்களில் இதேபோல் புறநோயாளி பிரிவு இயங்கும் என அறிவிக்கப்பட்டு இருப்பதால், வெளி மாநில மக்கள் பாதிக்கு உள்ளாகினர். இதற்கிடையில் ஜிப்மர் டாக்டர்கள் 500க்கும் மேற்பட்டோர் அங்குள்ள மைதானத்தில் படுகொலை செய்யப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி வேண்டும் என்ற ஆங்கில வார்த்தை வடிவில் நின்று கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதேபோல் இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரியிலும் நேற்று காலை 8 மணி முதல் 12 மணி வரை பணிகளை புறக்கணித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ேபாராட்டத்தில் பெண் மருத்துவர் கொலையில் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும், உயிரிழந்த பெண் மருத்துவ குடும்பத்துக்கு நிதி வழங்கிட வேண்டும், மத்திய பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கைகளில் பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நேற்று மாலை 5 மணிக்கு புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள டூப்ளிக்ஸ் சிலையிலிருந்து கடற்கரை சாலை வழியாக தலைமை செயலகம் வரை பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் பிற மருத்துவமனை டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

“விதிகளின்படி நடவடிக்கை” ஜிப்மர் டாக்டர்களுக்கு நிர்வாகம் எச்சரிக்கை
புதுச்சேரி ஜிப்மர் நிர்வாக துணை இயக்குனர் அனைத்து துறைகளுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: கொல்கத்தாவில் மருத்துவக்கல்லூரி சம்பவத்தை தொடர்ந்து நாடு தழுவிய மருத்துவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக ஜிப்மர் மருத்துவர்கள் சங்கம் அறிவித்த வேலை நிறுத்தத்துக்கு இங்குள்ள சில சங்கங்கள் பல வழிகளில் தங்கள் ஆதரவை அளித்துள்ளன. ஜிப்மர் நடத்தை விதிகளில் அனைத்து ஊழியர்களின் கவனத்துக்கு தெரிவிக்கிறோம். வேலை நிறுத்தமோ, வேலை நிறுத்தத்தை ஊக்குவிக்கும் எந்த நடவடிக்கையும் விதியை மீறுவதாகும். குறிப்பாக அனுமதியின்றி மொத்தமாக விடுப்பு எடுப்பது, முன் அனுமதியின்றி பணியிடத்திலிருந்து வெளியேறுதல் ஆகியவை விதிகளை மீறி செயல்படுவதாக கருதப்படும். பணிகளில் இல்லாவிட்டால் அக்காலத்தில் ஊதியம் பெற முடியாது. இதில் மிக முக்கியமாக ஜிப்மர் நோயாளிகளை பராமரித்து சேவைகளை தரும் நிறுவனம். அதனால் டாக்டர்கள், ஊழியர்கள், சேவைகளை இழக்க முடியாது. அவர்கள் வேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். இல்லாவிடில் விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம்
காலாப்பட்டில் உள்ள அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை கண்டித்தும், விரைவாக நீதி வழங்க கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

The post பெண் டாக்டர் கொலையை கண்டித்து 7வது நாளாக ஜிப்மர் மருத்துவர்கள் பணியை புறக்கணித்து போராட்டம் புறநோயாளிகள் பிரிவு 2 மணி நேரம் இயங்கியதால் மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Jipmar ,Puducherry ,Puducherry Jipmar Hospital ,Kolkata ,
× RELATED பெங்களூரு, நாமக்கல் அலுவலகங்களில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது