×

ஆக்கிரமிப்பு கோயில் பொக்லைன் மூலம் இடித்து அகற்றம்

பாகூர், செப். 13: கரையாம்புத்தூர் அருகே ஆக்கிரமிப்பு கோயிலை ஜேசிபி மூலம் அதிகாரிகள் இடித்து அகற்றினர். அப்போது அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி மாநிலம் கரையாம்புத்துார் அருகே உள்ள மணமேடு கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் கலையரங்கம், அங்கன்வாடி மையம், கழிப்பறை உள்ளிட்டவைகள் உள்ளன. மேலும் அங்குள்ள காலி இடத்தை, அப்பகுதி இளைஞர்கள் விளையாட்டு திடலாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த சிலர், அங்கு ஒரு முருகர் சிலை வைத்து கொட்டகை கட்டி கோவிலாக வழிபட்டு வருகின்றனர். இதற்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே மேலும் சிலர் அங்கு வீடுகள் கட்டி ஆக்கிரமித்தார்களாம்.

இதனால் அங்கு விளையாட்டு பயிற்சியை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வருவாய்த் துறை மற்றும் கொம்யூன் பஞ்சாயத்தில் முறையிட்டனர். சப்-கலெக்டர் சோமசேகர் அப்பாராவ் கொட்டாரு நேற்று மணமேடு கிராமத்தில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றிட உத்தரவிட்டார். இதையடுத்து பாகூர் தாசில்தார் கோபால கிருஷ்ணா தலைமையில், கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், போலீசார் பாதுகாப்புடன் மணமேடு கிராமத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோயில் மற்றும் கொட்டகையை ஜேசிபி இயந்திரம் மூலமாக அப்புறப்படுத்தினர். இதையறிந்த அப்பகுதி மக்கள் சிலர் கோயிலை அகற்ற கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அங்குள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றிட வேண்டும் எனக்கூறிய தாசில்தார் மற்றும் போலீசாரிடம் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post ஆக்கிரமிப்பு கோயில் பொக்லைன் மூலம் இடித்து அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Bokline ,BAKUR ,Karayambuthur ,JCP ,Mamedu ,Karayambuthur, Puducherry ,
× RELATED சிங்கபெருமாள் கோயில் அருகே சாலையை...