×

பெங்களூரு, நாமக்கல் அலுவலகங்களில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது

புதுச்சேரி, செப். 14: போலி நிறுவனம் நடத்தி மோசடி செய்த வழக்கில் பெங்களூரு, நாமக்கல் அலுவலகங்களில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது. புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த அங்கன்வாடி ஊழியர் கோகிலா என்பவர் பங்குசந்தையில் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று சமூக வலைதளத்தில் வந்த தகவலை நம்பி ரூ.18 லட்சம் முதலீடு செய்து மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளார். இதுகுறித்து கோகிலா புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கேரளாவை சேர்ந்த பிரவீன்(32), நெய்வேலி தூபைல் அகமது (34), ராமச்சந்திரன் உள்பட 7 பேரை கடந்த 1ம் தேதி கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், பல்வேறு ஊர்களில் கிளை அலுவலகம் அமைத்து மோசடியில் ஈடுபட்டதும், அதன்மூலம் சம்பாதித்த பணத்தில் கோடிக்கணக்கில் சொத்துக்கள் வாங்கி குவித்து இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். தொடர்ந்து இவ்வழக்கு தொடர்பாக பெங்களூரு மற்றும் நாமக்கலில் உள்ள அலுவலகங்களில் புதுவை சைபர் கிரைம் போலீசார் 2 தனிப்படைகள் அமைத்து கடந்த சில நாட்களாக தீவிர சோதனை செய்தனர். அப்போது அங்கிருந்து கம்ப்யூட்டர்கள், ஹார்டு டிஸ்க் மற்றும் முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர். இதனிடையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரவீன், தூபைல் அகமது, ராமச்சந்திரன் ஆகிய 3 பேரை சைபர் கிரைம் போலீசார் காவலில் எடுத்து விசாரணையை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட ஹார்டு டிஸ்கில் (டேட்டா) உள்ள தகவல்களை குறித்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஹார்டு டிஸ்கில் உள்ள பல்வேறு நபர்களின் விவரங்களை எடுத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்த ஆலோசனை செய்து வருகின்றனர்.

The post பெங்களூரு, நாமக்கல் அலுவலகங்களில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Bangalore ,Namakkal ,Puducherry ,Kokila ,Anganwadi ,Puducherry Laspettai ,Dinakaran ,
× RELATED நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில்...