×

பிரச்னையை கண்டு துவளாமல் துணிந்து இறங்கினால் வெற்றி உங்கள் கையில்!

நன்றி குங்குமம் தோழி

கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பார்கள். ‘கற்றுக் கொடுப்பவருக்கும் சென்ற இடமெல்லாம் மரியாதைதான்’ என்கிறார் கல்வியாளர் துர்கா தேவி. தனி ஒரு பெண்மணியாக குடும்பத்தையும், தொழிலையும் திறம்பட நடத்துவது என்பது ஆகப் பெறும் சவால். அதனை பல வருடங்களாக இவர் செய்து வருகிறார். கல்லூரிப் பேராசிரியராக பணிபுரிந்து வந்தாலும், குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதில் கிடைக்கும் பேரானந்தம் வேறு எதிலும் இல்லை என்கிறார் இவர்.

‘‘நான் பி.எட் மற்றும் பி.எச்.டி படித்திருக்கிறேன். திருமணத்திற்கு முன்பு சில தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்திருக்கேன். அதன் பிறகு பள்ளியில் தலைமை ஆசிரியராகவும், கல்லூரி பேராசிரியராகவும் இருந்தேன். ஆனால் எனது தனிப்பட்ட விருப்பம் சிறு குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க வேண்டும் என்பதுதான். நாம் முதன் முதலில் கற்பிக்கும் பாடமே அவர்களின் வாழ்நாள் முழுக்க கூட வரும் என்பது மறுக்க இயலாத உண்மை. அதனால் எனக்கு பிஞ்சுக் குழந்தைகளுக்கு கல்வியை கற்பிக்க வேண்டும் என்கிற ஆவல் இருந்தது.

அந்த சமயத்தில் என் இரண்டாவது குழந்தைக்காக ஒரு நல்ல முன் பள்ளியை (preschool) தேடி அலைந்தேன். ஆனால் நல்ல தகுதியான பள்ளி கிடைக்கவில்லை. அப்போதுதான், ஏற்கனவே ஆசிரியராக இருந்த அனுபவம் உள்ளதால், நாம் ஏன் முன் பள்ளி ஒன்றை துவங்கி நடத்தக்கூடாது என்று யோசனை எனக்குள் தோன்றியது. அதன் காரணமாக 2020ல் சொந்தமாக ஆரம்பித்து, அதனை கடந்த நான்கு வருடங்களாக வெற்றிகரமாக நடத்தியும் வருகிறேன். எனது மாணவர்கள் மற்றும் மாணவிகள் வெற்றிகரமாக வளர்ந்து மரமாக விரிந்து எங்கும் கிளை பரப்ப வேண்டும் என்பது தான் என்னுடைய நோக்கம்’’ என்றவர் தன் பள்ளி மூலமாக ஆட்டிசம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் கல்வி கற்பித்து வருகிறார்.

‘‘நான் எனது பள்ளியை துவங்கிய போது, ஒரு சில பெற்றோர் தங்களின் குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு இருப்பதாகவும், அவர்களுக்கும் அடிப்படை கல்வி முறையினை வழங்க முடியுமா என்று கேட்டார். அவர்களும் குழந்தைகள் தானே என்று நானும் அவர்களை என் பள்ளியில் சேர்த்துக் கொண்டேன். இந்தக் குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து படிக்கும் போது அவர்களின் நடவடிக்கையில் நல்ல முன்னேற்றத்தினை காண முடிந்தது. அதே போல் சரிவர பேசமுடியாத குழந்தைகளும் எங்களிடம் வருவதுண்டு. அவர்களுக்கும் தனிப்பட்ட பயிற்சியினை அளிக்கிறோம்.

ஆரம்பத்தில் பேசவே தயங்கிய குழந்தைகளும் இங்கு சேர்ந்த பிறகு சரளமாக பேச ஆரம்பித்தார்கள். அவர்களிடம் தெரிந்த மாற்றத்தினால், அதை பார்த்து மேலும் அதே பிரச்னையுள்ள குழந்தைகளும் இங்கு வர ஆரம்பித்தார்கள். ஆட்டிசம் மற்றும் இது போன்ற குழந்தைகளுக்கு மட்டும் சிறப்பு கவனம் எடுத்து அவர்களுக்கு தனிப்பட்ட பயிற்சிகள் கொடுக்க ஆரம்பித்தேன். அதில் நல்ல மாற்றம் தெரிந்தது.

இது போன்ற பாதிப்புள்ள குழந்தைகளுக்கு மேலும் பல புதிய கற்றல் முறைகளை அறிமுகப்படுத்தி அவர்களின் பிரச்னைக்கு என்னால் முடிந்த அளவு தீர்வு அளிக்க வேண்டும் என்பது குறித்து திட்டமிட்டு வருகிறேன். அதற்காக பல்வேறு கற்றல் வழிமுறைகளையும் பரிசோதித்து பயிற்சி எடுத்து வருகிறேன்’’ என்றவர், பள்ளி நிர்வாகியாக மட்டுமில்லாமல் கவுன்சிலராகவும் பல குழந்தைகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.

‘‘நான் உளவியல் குறித்து படித்திருப்பதால், பிரச்னை உள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு நான் கவுன்சிலிங் அளித்து வருகிறேன். சில சமயம் குழந்தைகள் மூலம் வரும் பெற்றோர்களுக்கும் ஆலோசனை வழங்குகிறேன். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்களை ஊக்கமளிக்க மோட்டிவேஷனல் ஸ்பீச் தருகிறேன். சுய முன்னேற்ற குறிப்புகளை பலருக்கும் அளித்து வருகிறேன். நீட் தேர்வுக்கான பயிற்சியும் தனிப்பட்ட முறையில் அளிக்கிறேன். அபாக்கஸ், ஓவியம் மற்றும் பரதநாட்டியம் போன்ற பயிற்சி வகுப்புகளும் நடத்தி வருகிறேன். கல்வி கற்பிப்பது எப்படி எனக்கு பிடிக்குமோ அதே போல் சமையல் செய்வதும் எனக்கு ரொம்ப பிடித்தமானது.

பல சமையல் போட்டியிலும் பங்கு பெற்று பரிசுகளை பெற்றிருக்கிறேன். என்னால் முடிந்த அளவுக்கு மாணவர்களுக்கு பல விஷயங்களை கல்வி மூலம் கொடுக்க வேண்டும் என்ற பேராசை இருக்கு’’ என்றவர், குழந்தைகளின் ஆரோக்கியத்தினை காக்கும் சத்து மாவினை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். ‘‘நான் இவ்வளவும் தனி ஒரு பெண்ணாக பல போராட்டங்களை கடந்துதான் செயல்படுத்தி வருகிறேன். நான் இந்தப் பயணத்தில் வெற்றிப் பாதையை நோக்கி நகர முழுக் காரணம் என் நண்பர்கள் தான். சிங்கிள் மதர் என்பதால் என் வாழ்க்கை, என் குழந்தைகளின் நலன் மட்டுமில்லாமல் தொழில் என அனைத்திலும் முழு பொறுப்பினை ஏற்று என்னுடைய கடமையை நான் தவறாமல் செய்து வருகிறேன். அதற்கான தன்னம்பிக்கையை என் தொழில் எனக்கு கொடுத்துள்ளது.

வாழ்க்கை இப்படி மாறிவிட்டதே என்று துவண்டு விடாமல், எழுந்து நிற்கும் போது நம் வாழ்க்கையை சுவாரஸ்யமாக மாற்றி அமைக்க முடியும் என்ற தைரியம் ஏற்படும். பிரச்னைகளை கண்டு துவண்டு விழாமல் பிடித்தமான துறைகளில் துணிந்து இறங்குங்கள் வெற்றி உங்கள் வசமாகும். விடாமுயற்சியுடன் ஆர்வமும் ஊக்கமும் இருந்தால் என்னால் முடிந்தது போல் உங்களாலும் நிச்சயமாக வெற்றி காண முடியும்’’ என்றவர், தன் பள்ளியின் கிளைகளை விரிவாக்கம் செய்து வருகிறார்.

‘‘பலர் என்னிடம் பள்ளியின் கிளையினை விரிவாக்கம் செய்யச் சொல்லி கேட்டார்கள். என்னால் அனைத்து கிளைகளிலும் கவனம் செலுத்த முடியாது என்பதால் இதை தொழிலாக செய்ய ஆர்வமுள்ள பெண்களுக்கு கிளைகளை அமைத்துக் கொடுத்திருக்கேன். சென்னையில் மூன்று இடங்களிலும், வெளியூரில் இரண்டு இடங்கள் என என் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் கிளைகளை மேலும் விரிவாக்க விருப்பம் உள்ளது. என்னைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும் குழந்தைகள் எப்படி சொல்லிக் கொடுத்தாலும் புரிந்துகொள்வார்கள். ஆனால் ஆட்டிசம் மற்றும் பேச்சுத்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தனிப்பட்ட கவனம் அவசியம். அதனை நாங்க கொடுக்க தயாராக இருக்கிறோம்’’ என்றவர், சாதனை பெண்மணி, ஸ்டார் ஐகான், பெஸ்ட் ஐகான் உமன் போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.

தொகுப்பு: தனுஜா ஜெயராமன்

The post பிரச்னையை கண்டு துவளாமல் துணிந்து இறங்கினால் வெற்றி உங்கள் கையில்! appeared first on Dinakaran.

Tags : Saffron ,Durga Devi ,
× RELATED திறமை இருந்தால் வேலை நிச்சயம்!