×

உன்னத உறவுகள்

நன்றி குங்குமம் தோழி

உடன்பிறப்பின் உயர்வு!

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை குடும்பங்களில் சராசரியாக 4 பிள்ளைகள் இருந்தார்கள். அதற்கு முன்பெல்லாம் “பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க” என்று பெரியோர்கள் ஆசீர்வதித்தார்கள். அதன்படியே குடும்பங்களில் பத்துக் குழந்தைகளாவது இருந்தனர். எத்தனை பிள்ளைகள் இருந்தாலும், அத்தனை பேரும் மிகவும் சந்தோஷமாக ஒழுக்கத்துடன் வாழ்ந்து வந்தனர். தாத்தா, பாட்டிகள் மற்ற பெரியோர்கள் என குடும்பம் நிறைந்து காணப்பட்டது.

இன்றைய காலகட்டம் மாதிரி வசதிகள் கிடையாது. ஆனால் ஆரோக்கியமான வாழ்க்கை காணப்பட்டது. இயற்கையில் விளையும் காய்கனிகளும், கீரை வகைகள் கொண்ட சாப்பாடு. சாப்பாட்டு நேரம் கூடத்தில் அனைவரும் வரிசையில் அவரவர் தட்டுடன் வந்து அமருவார்கள். பேசியும், சிரித்தும் கும்மாளம் போட்டுக் கொண்டு சாப்பிடுவார்கள். படிப்பிலும் எந்தவிதமான மன அழுத்தமும் இருந்திருக்கவில்லை.

பெரும்பாலானோர் அரசுப் பள்ளிகளிலேயே படித்தனர். மாலை வீட்டிற்கு வந்தவுடன் பெரியவர்களே பிள்ளைகளை தெருவில் சென்று விளையாடச் சொல்வார்கள். விளையாடி முடித்ததும் கை, கால்களை அலம்பிக் கொண்டுதான் உள்ளே நுழைய வேண்டும். இயற்றப்படாத சட்டங்களாக இருந்தாலும் கடைபிடிக்கப்பட்ட சட்டங்களாக இருந்தன. இன்று போல் யாருக்கும் தனித்தனி அறைகள் கிடையாது. எல்லா விஷயங்களும் பெரியவர்கள் முன்னிலையில்தான் விவாதிக்கப்பட்டன. இரவு பெரிய ஜமக்காளம் விரிக்கப்பட்டால், எல்லோரும் வரிசையாக படுத்து உறங்குவார்கள். மெத்தையில்லாவிட்டாலும் சுகமான தூக்கம்.

அவ்வளவு பேர் வயிறு ரொம்ப சாப்பிட்ட பிறகும் சாதம் மீந்துவிடும். இப்பொழுது போல் அப்பொழுது குளிர்சாதனப் பெட்டிகள் கிடையாது. அம்மா எஞ்சிய சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைப்பார்கள். கோடை காலங்களில் காலையில் எழுந்தவுடன் அந்த சாதத்தின் மேல் இருக்கும் நீர் ஆகாரத்தில் கொஞ்சம் உப்புப் போட்டு, சிறிய வெங்காயம் நறுக்கிப் போட்டு குடிக்கக் கொடுப்பார்கள். ஆளுக்கு ஒரு டம்ளர் குடித்து விடுவோம். அதில் அப்படியொரு தெம்பு கிடைக்கும். சாப்பாட்டு நேரம் வரை நம்மை உற்சாகத்துடன் வைத்துவிடும்.

ஆடம்பரமான காலை சிற்றுண்டிகள் எதுவும் இருக்காது. ‘தம்பியுடையான் படைக்கு அஞ்சான்’ என்பார்கள். அண்ணன், தம்பி உறவு என்பது நகமும், சதையும் போல என்று கூட சொல்லலாம். ஒருத்தனை அடித்தால் மற்றவனுக்கு வலிக்கும். தவறு செய்துவிட்டால் ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்க மாட்டார்கள். தவறு என்றால் எதுவும் பெரிதாக செய்ய
மாட்டார்கள். சிறு பிள்ளைகள் சாப்பாட்டுப் பொருட்களில் ஆசைப்படுவார்கள். அம்மா எவ்வளவுதான் தந்தாலும், தெரியாமல் எடுத்து சாப்பிடுவதில்தான் அவர்களுக்கு ஆனந்தம்.

யாராவது உடல்நலம் பாதிக்கப்பட்டால், கொடுப்பதற்காக அப்பொழுதெல்லாம் ‘ஹார்லிக்ஸ்’ வைத்திருப்பார்கள். அதை அருந்துவதை விட பவுடராக சாப்பிடுவதில் பிள்ளைகளுக்கு ஆர்வம் அதிகம். மேலும் ‘போர்ன்விட்டா’ போன்றவைகளும் எப்பொழுதாவது குடிக்கத் தருவார்கள். காலை வேளையில் பெரும்பாலும் கோதுமை மாவு கஞ்சிதான் இருக்கும். பெரியவர்களுக்கு மட்டும்தான் காபி.

ஆண் பிள்ளைகள் சனிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும், பெண் பிள்ளைகள் வெள்ளிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதும் குடும்ப வழக்கம்தான். அன்றைய தினங்களில் எல்லோருக்கும் பத்திய சாப்பாடுதான். ஆனால் எப்பொழுது மற்ற விசேஷங்கள் நடைபெறுமோ அப்போதெல்லாம் வீட்டில் உள்ள குட்டீஸ்களுக்கு குஷிதான். நிறைய பதார்த்தங்கள் செய்வார்கள். அதை போட்டி போட்டு உண்ணுவதில்தான் எத்தனை சுகம். மேலும் பெரியவர்கள் வீட்டில் செய்யப்படும் பலகாரம் என்பதால் பிள்ளைகளுக்கும் அள்ளிக் கொடுப்பார்கள்.

“யார் சாப்பிட்டாலும் நெஞ்சுவரைதானே ருசி, பிள்ளைகள் சாப்பிட்டு விட்டுப் போகட்டுமே!” என்பார்கள். இருப்பினும் எதிர்பாராமல் உடன் பிறப்புகளுக்குள் ஏதாவது வருத்தம் ஏற்படும். நம்மை புரிந்து கொள்ளவில்லையே என்கிற ஆதங்கம் எழுந்தாலும் ஒருவர் கஷ்டப்படும் நேரத்தில் கண்ணீரை துடைப்பதும் அவர்களாகத்தான் இருப்பார்கள். உறவுகள்தான் என்றுமே நமக்கு பலம். அண்ணன்-தம்பிகள் பாசமென்பது, எந்த இடத்திலும் உண்மையான பாச உணர்வை உரிமையுடன் காட்டக்கூடியது. ஆலமரத்தின் விழுதுகள் அதைத் தாங்கிப் பிடிப்பது போல், பிரச்னைகளில் தாங்கிப்பிடிக்க முன்வருவர். எவ்வளவுக்கு சண்டை, வாக்குவாதம் சிறு வயதில் செய்கிறார்களோ அந்த அளவுக்கு அவர்களிடம்தான் சுவாதீனம் அதிகரிக்கும். சமயத்தில் ஏளனப் பேச்சுகள் வந்தாலும் ஏணியில் ஏற்றிவிட முன்வருவர்.

எத்தனையோ கோப-தாபங்கள் வந்தாலும் விட முடியாத உறவுகள் உடன்பிறப்புகள், ஒரு பிள்ளை தனியாக வளரும் பொழுது அவன் துன்பங்களை யாரிடமும் பகிர முடியாது. அப்பா, அம்மாவிடம் பகிர முடியாததைக் கூட உடன் பிறப்புகள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்வர். அதனால் தானோ என்னவோ, அண்ணன், தம்பிகளைப் பார்த்தால் ‘ராம, லஷ்மணர்’ போல என்பார்கள். தம்பி ஒரு தவறு செய்துவிட்டால், அண்ணன் அவனை திட்டுவான். அப்பாவிடம் சொல்வேன் என்று பயமுறுத்துவான். ஆனால் தானே அவனுக்கு அறிவுரை தந்து திருத்துவான். அது போல் அண்ணன் ஏதாவது தவறு செய்தாலும் தம்பி கேட்பானே தவிர, அவனை மற்றவர் எதிரில் காட்டிக் கொடுக்க மாட்டான்.

எத்தனையோ குடும்பங்களில் அண்ணன் முதலில் வேலைக்குச் சென்று, தம்பிகளை படிக்க வைப்பதை நடைமுறை வாழ்க்கையில் காண்கிறோம். அப்படியானால், அப்பாவுக்கு அடுத்து அண்ணன் குடும்பத்தைப் பார்ப்பது என்பது யாரும் சொல்லாமலே வந்த ரத்த பந்த உறவாகிறது. இன்றைய சூழலில் அண்ணன், தம்பிகள் சில குடும்பங்களில் பேசாமல் கூட இருக்கிறார்கள். அந்த சமயத்தில் பெற்றோர்கள் பிரச்னைகளை தீர்த்து வைத்து பாசமும் பந்தமும் குறையாமல் பார்த்துக் கொள்வார்கள்.

உடன் பிறப்புகளுக்காக தியாகம் செய்த எத்தனையோ அண்ணன், தம்பிகளை பார்த்திருக்கிறோம். இன்றைய சூழலில் தனித்துவிடப்பட்ட பிள்ளைகளின் வாழ்க்கையில் யார்தான் வழிகாட்டப் போகிறார்கள். நாம் வாழ்ந்த வாழ்க்கை முறைகளையும், நம்மை ஆதரித்த பெரியவர்களையும் நினைத்துப் பார்க்கும் பொழுது வேதனைதான் வருகிறது. வாழ்க்கையில் ஒரு உடன்பிறப்பாவது அவசியம் தேவை என்பது போய், தனித்து வளரும் பிள்ளைகள் நிலை என்னவாகுமோ என்கிற ஆதங்கம் மேலோங்குகிறது. முடிந்தவரை எடுத்துரைப்போமே!

தொகுப்பு: சரஸ்வதி ஸ்ரீநிவாசன்

The post உன்னத உறவுகள் appeared first on Dinakaran.

Tags : Kumkum Doshi ,Dinakaran ,
× RELATED ஹேப்பி மாம் = குயின் மாம்!