×

திறமை இருந்தால் வேலை நிச்சயம்!

 

நன்றி குங்குமம் தோழி

+2 முடிச்சதும் பொறியியலா அல்லது கலை சார்ந்த பட்டப் படிப்பா..? அதில் என்ன படிக்கலாம் என்று அவர்கள் விரும்பும் பாடங்கள் உள்ள கல்லூரியில் விண்ணப்பிக்க தயாராக இருப்பார்கள். ஆனால் இதில் சிலர் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தாலும், அவர்களின் குடும்பச்சூழல் காரணமாக கல்வியினை மேலும் தொடர முடியாமல் போகும். திறமை இருந்தும் அதனை பயன்படுத்த முடியாத சூழலில் உள்ள மாணவர்களுக்காகவே பயிற்சியும் அளித்து வேலைக்கான வாய்ப்பினையும் ஏற்பாடு செய்கிறது ‘பிரஷ்வர்க்ஸ்’ ஐ.டி நிறுவனம். இவர்களின் சாஃப்ட்வேர் அகாடமி மூலம் பயிற்சி பெற்றவர்களுக்கு தங்கள் நிறுவனம் மட்டுமில்லாமல் மற்ற நிறுவனத்திலும் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தருகிறார்கள். அகாடமியினை வழிநடத்தி வரும் ஷண்முக அனந்தராமன் அகாடமியில் அளிக்கப்படும் பயிற்சி குறித்து விவரித்தார்.

‘‘இந்த நிறுவனத்துடன் 2015ல் இருந்து இணைந்து செயல்பட்டு வருகிறேன். அதற்கு முன்பு என்னுடைய ஸ்டார்டப் நிறுவனம் மூலம் இவர்களுக்கு சாஃப்ட்வேர் ெதாழில்நுட்பங்களை அளித்து வந்தேன். அப்படித்தான் எனக்கும் இந்த நிறுவனத்திற்குமான தொடர்பு ஏற்பட்டது. அதன் பிறகு நான் இந்த நிறுவனத்தில் பிராடக்ட் மேனேஜராக செயல்பட ஆரம்பித்தேன். இந்த நிறுவனத்தின் எக்சிக்யூடிவ் சேர்மேன் கிரிஷுக்கு ஆரம்பத்தில் இருந்தே கல்வி சார்ந்து ஒரு திட்டம் அமைக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்து வந்தது. எனக்கும் அதில் ஈடுபாடு இருந்ததால், நாங்க இருவரும் சேர்ந்து அதை செயல்படுத்த விரும்பினோம்.

என்னுடையது ரொம்ப சாதாரண குடும்பம். அப்பா, அம்மா இருவரும் டீக்கடை நடத்தி வந்தாங்க. அந்த வருமானத்தில்தான் எங்க குடும்பமே இயங்கியது. படிப்பு மட்டும்தான் என் ஆதாரம் என்று தெரிந்துகொண்டேன். எங்க குடும்பத்தில் நான்தான் முதல் பட்டதாரி. நல்லா படிச்சா நல்ல வேலை கிடைக்கும். அதன் மூலம் என் குடும்பம் உயரும்னு புரிந்து கொண்டு படிச்சேன். ஸ்காலர்ஷிப் மூலம் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பு முடிச்சேன். அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் முதுகலை பட்டம் படிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

படிப்பு முடிச்சு இந்தியா வந்ததும், ஸ்டார்டப் நிறுவனம் ஒன்றை துவங்கினேன். அதன் தொடர்ச்சிதான் இந்த அகாடமி. என்னைப் போல் பல மாணவர்கள் நகரத்தில் மட்டுமில்ைல கிராமத்திலும் இருக்கிறார்கள். அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்திக் கொடுத்தால் கண்டிப்பாக அந்த ஏணியில் ஏறி முன்னேறுவார்கள். அதற்கு அவர்களுக்கு தனிப்பட்ட பயிற்சி அளிக்க திட்டமிட்டோம்’’ என்றவர், பயிற்சி குறித்த செயல்பாட்டினை விவரித்தார்.

‘‘முதல் பேட்ச் 13 மாணவர்கள் கொண்டு துவங்கினோம். இதற்காக தனிப்பட்ட ஆசிரியர்களை நியமித்தோம். அவர்களுக்கு பயிற்சி அளிப்பது மட்டுமில்லாமல் வேலை வாய்ப்பினையும் ஏற்படுத்தி தரவேண்டும். அதற்கான பாடத்திட்டங்களை அமைத்தோம். எல்லாம் தயார் அடுத்து மாணவர்களின் சேர்க்கை என்பதால், எங்க நிறுவனத்தில் வேலை பார்க்கும் டிரைவர்கள், ஸ்டாப்கள், ஹவுஸ்கீப்பிங் துறையில் இருப்பவர்கள் மூலம் அவர்களுக்கு தெரிந்த +2 முடித்த மாணவர்கள் கொண்டுதான் முதல் பேட்சினை துவங்கினோம். முதல் பிராஜக்ட் சக்சஸானதை தொடர்ந்து, அடுத்த வருடம், தமிழ்நாடு முழுக்க, கிராமத்தில் உள்ள மாணவர்களுக்கு இந்தப் பயிற்சி திட்டம் குறித்து விவரித்தோம்.

குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்கள், குடும்பச்சூழல் காரணமாக கல்லூரி படிப்பினை தொடர முடியாதவர்கள், படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்களை தேர்வு செய்தோம். வெளியூரில் இருந்து வரும் மாணவர்கள் சென்னையில் தங்கி படிக்க வேண்டும். ஆனால் அவர்கள் தங்கிப் படிக்க போதிய நிதி வசதி இருக்காது. அதனால் ஊக்கத் தொகை அளிக்க முடிவு செய்தோம். இதன் மூலம் எங்களிடம் பயிற்சியில் ஈடுபடும் ஒரு வருட காலம் அவர்களுக்கு மாதா மாதம் ஊக்கத்தொகை அளிப்பதால், அவர்களுக்கான செலவினை தங்கள் குடும்பத்திடம் எதிர்பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது.

படிப்பிலும் கவனம் செலுத்த முடியும். சிலர் அதில் சேமித்து ஒரு சிறிய தொகையினை தங்களின் குடும்பத்திற்கும் அனுப்பி வைத்தார்கள். 13 மாணவர்கள் என துவங்கி தற்போது 100 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம். ஒரு வருட பயிற்சியில் அவர்களால் எந்த ஐ.டி நிறுவனத்திலும் வேலை பார்க்கக் கூடிய அளவிற்கு தேர்ச்சிப் பெற வைக்கிறோம்’’ என்றவர், பாடத்திட்டங்கள் குறித்து விவரித்தார்.

‘‘பொதுவாக ஐ.டி நிறுவனத்தில் கம்ப்யூட்டர் தெரிந்திருப்பது அவசியம். நாங்க பயிற்சிக்கு எடுக்கும் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் தெரிந்து இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அதற்கான பயிற்சி நாங்க அளிக்கிறோம். படிக்க விருப்பம் இருந்தும், குடும்பச்சூழல் காரணமாக படிக்க முடியாமல் வேலைக்கு செல்லும் கட்டாயத்தில் இருக்கும் மாணவர்களை தான் நாங்க தேர்வு செய்கிறோம்.

பாடத்திட்டங்கள் ெபாறுத்தவரை தனிப்பட்ட புத்தகங்கள் கிடையாது. ஆனால் ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்திற்கு என்ன அடிப்படை தேவை என்று தெரிந்து கொண்டு அதற்ேகற்ப அனைத்து பயிற்சிகளும் நாங்க அளித்து வருகிறோம். மேலும் எங்களின் பயிற்சி திட்டம் குறித்து நாங்க எங்களின் இணையத்தில் வெளியிட்டோம். காரணம், எங்க ஒரு நிறுவனத்தால் மட்டுமே இந்தியா முழுக்க உள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க முடியாது. ஆனால் இதனை பார்த்து மற்ற நிறுவனங்கள் அதனை பின்பற்றி பல மாணவர்களை பலன் அடைய செய்ய முடியும். அதனால்தான் எங்களின் ஒவ்வொரு செயல்பாட்டினையும் நாங்க இணையம் மூலமாக தெரியப்படுத்த துவங்கினோம்.

எங்களிடம் பயிற்சி பெற்ற பெரும்பாலான மாணவர்கள் குடும்ப பிரச்னையை சந்தித்து இருப்பார்கள். அப்பாவிற்கு குடிப்பழக்கம் இருக்கும். சிலரின் பெற்றோர் கூலி வேலை பார்ப்பவர்களாக இருப்பார்கள். கல்லூரியில் படிக்க வைக்க வசதி இருக்காது. இப்படிப்பட்ட சூழலில் வளரும் இவர்களுக்கு முதலில் தன்னம்பிக்கை கொடுக்க வேண்டும். சிலர் பேசவே பயப்படுவாங்க. அவர்களின் மனதை திறக்க வைத்து தன்னம்பிக்கையை ஏற்படுத்தினோம். இவர்கள் பாடத்தில் திறமைசாலியாக இருப்பார்கள். ஆனால் நடைமுறையில் எவ்வாறு வாழ வேண்டும் என்று தெரியாது. மற்றவரிடம் பேசுவது முதல் பொது இடங்களில் அணுகும் முறை போன்ற பயிற்சிகள்தான் எங்களுக்கு சாலஞ்சிங்கா இருந்தது. மேலும் திறமையாக பயிற்சி பெற்றால் வேலை நிச்சயம் என்பதை அவர்களுக்கு புரிய வைத்தோம்.

பயிற்சி பொறுத்தவரை ஒவ்வொரு வகுப்பிற்கும் இரண்டு பயிற்சியாளர்கள் இருப்பார்கள். ஒருவர் பாடங்களை சொல்லித் தருவார். மற்றொருவர் ஆங்கிலம் உச்சரிப்பு, உடை அணியும் முறை, குழுவாக செயல்படுவது, மற்றவர்களை அணுகும் முறை போன்ற லைஃப் ஸ்கில்ஸ் குறித்து விளக்குவார்’’ என்றவர், எதிர்கால திட்டம் குறித்து விவரித்தார். ‘‘ஒரு வருடத்தில் பல ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது எங்க நோக்கமில்லை. பயிற்சி பெரும் ஒவ்வொரு மாணவரும் வேலையில் நியமனமாக வேண்டும்.

வேலையில் சேர்த்துவிட்டோம் சம்பாதிக்கிறோம் என்று இல்லாமல், அவர்கள் கண்டிப்பாக இளங்கலை பட்டம் பெற வேண்டும் என்பதில் நாங்க உறுதியாக இருக்கிறோம். இந்த வேலை அந்த மாணவனுக்கு மட்டுமில்லை அவர்களின் மொத்த குடும்பத்திற்குமே ஒரு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்தி தரும். இதுவரை 100க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு எங்களால் முடிந்த உதவியினை செய்திருக்கிறோம். இந்தப் பயணம் சென்னை மட்டுமில்லாமல் பெங்களூரூ மற்றும் தமிழ்நாட்டில் மற்ற மாவட்டங்களிலும் தொடரும். அங்கும் இது போன்ற பயிற்சி மையம் அமைக்கும் எண்ணம் உள்ளது’’ என்றார் ஷண்முக அனந்தராமன்.

தொகுப்பு: ஷன்மதி

The post திறமை இருந்தால் வேலை நிச்சயம்! appeared first on Dinakaran.

Tags : Saffron Girl +2 ,Dinakaran ,
× RELATED பெரும் பூநாரை (Greater Flamingo)