நன்றி குங்குமம் தோழி
இன்றைய சூழலில் இன்டர்நெட் இன்றியமையாததாக மாறிவிட்டன. ஷாப்பிங் முதல் டேட்டிங் வரை அனைத்திற்கும் இணையத்தையே நாம் நாடுகிறோம். நாம் ஒவ்வொரு செயலிகளை பதிவிறக்கம் செய்யும் போது, அதில் நம் தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்கிறோம். அவை பாதுகாப்பானதா இல்லையா என்று அந்த செயலிகள் மற்றும் வலைத்தளங்கள் பொறுத்தது. போலியான லிங்கை கிளிக் செய்து அதில் நாம் கொடுக்கும் விவரங்களை கொண்டு பலவகையான ஸ்கேம்கள் நடைபெறுகின்றன.
இதனால் ஆண்-பெண் இருவரும் பல பிரச்னைகளை சந்திக்கிறார்கள். அதில் பெண்களை குறிவைத்து செய்யப்படும் ஸ்கேம்கள் ஏராளம். இதில் குறிப்பாக அவர்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து மிரட்டல் விடுவது இன்றளவும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதில் இருந்து மீளத் தெரியாமல், மன உளைச்சலுக்கு ஆளாகி சிலர் தவறான முடிவினை எடுக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் புலனாய்வாளர்கள் மூலம் உதவிகளை பெறலாம் என்பது பலருக்கு தெரிவதில்லை. அதற்கான விழிப்புணர்வும் இல்லை.
இது போன்ற ஸ்கேம்களில் இருந்து மீளவும், செயலிகள் மற்றும் வலைத்தளங்களை எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்பதற்கான சில விதிமுறைகள் உள்ளன. அதற்கான வழிமுறைகளைப் பற்றி விவரிக்கிறார் தனியார் புலனாய்வாளர் சுபாஷ் ஜெகநாதன்.‘‘மழை, வெள்ளம், நிலச்சரிவு, பொதுவான சமூகப் பிரச்னைகளுக்கு ஓடிச் சென்று உதவ பலர் உள்ளனர். ஆனால் சைபர் க்ரைம்களில் சிக்கிக் கொள்பவர்களுக்கு அவர்களுக்கான உதவியினை கொண்டு போய் சேர்க்க குறைவான நபர்களே உள்ளனர். அந்த ஒரு காரணத்தினால்தான் நான் இந்த துறையை தேர்வு செய்தேன். பெண்கள் தங்களுக்கு ஏற்படும் ஸ்கேம்களை வெளியே சொல்லவே தயங்குகிறார்கள்.
அப்படிப்பட்ட பெண்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல், அரசு உதவியுடன் நான் தனிப்பட்ட முறையில் பல்வேறு உதவிகளை செய்து வருகிறேன். முதலில் பாதிக்கப்பட்ட பெண்கள் தயங்காமல் புகார் செய்ய முன் வரவேண்டும். அப்போதுதான் எங்களால் முடிந்த உதவியினை செய்ய முடியும். மேலும் செயலி மற்றும் வலைத்தளங்களை பயன்படுத்தும்போது பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்றுவது அவசியம்’’ என்கிறார்.
*பெண்களை குறிவைக்கும் ஸ்கேம்கள்…
இம்பெர்சனேஷன் ஸ்கேம் என்று சொல்லக்கூடிய ஆள்மாறாட்டம்தான் பெண்களை முக்கியமாக குறிவைக்கப்படும் ஸ்கேம். ஒருவரின் பெயரில் போலியான சமூக வலைத்தள கணக்குகளை உருவாக்கி அவரைப் பற்றிய போலியான தகவல்கள் மற்றும் தவறாக சித்தரிக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிடுவார்கள். காதலை நிராகரிக்கும் பெண்கள் மற்றும் உறவுகளை முறித்துக் கொள்பவர்களை சமூகத்தில் அவமானப்படுத்தவே இவ்வாறு செய்வார்கள். அடுத்து, ஆன்லைன் ஷாப்பிங் ஸ்கேம்.
ஆன்லைனில் வாங்கப்படும் உடைகள் குறித்து கருத்துகள் மற்றும் புகைப்படங்களை தவறான முறையில் சித்தரித்து மிரட்டலாம். உதாரணத்திற்கு உள்ளாடைகள் குறித்து கருத்து மற்றும் பகிரப்படும் புகைப்படங்கள் தவறாக பயன்படுத்தப்படலாம். அல்லது வேலை தருவதாக கூறி பணப்பறிப்பு செய்யலாம். கொரோனா காலக்கட்டத்திற்குப் பின் இன்ஸ்டன்ட் லோன் ஆப்கள் அதிகரித்துள்ளன.
அவசர பணத்தேவைக்காக போலியான லோன் செயலிகள் மூலம் கடன் பெற்று சிக்கிக்கொள்கிறார்கள். அடுத்து மிக முக்கியமானது காதல் ஸ்கேம். சம்பந்தப்பட்ட நபரின் அன்பையும் நம்பிக்கையையும் பெற்று மிக தந்திரமாக அவர்களை ஏமாற்றுகிறார்கள். காதல் வலையில் விழும் பெண்களை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பண மோசடி செய்யப்படுகிறது. சிலர் குழுவாகவும் இதில் ஈடுபட்டு வருகிறார்கள். நம் தொடர்பில் உள்ளவர்களின் ஈமெயில் மூலமாகவும் பணப்பறிப்பு சம்பவங்கள் பெரிதும் ஏற்படுகிறது. திருமண வரன் குறித்து இணையத்தில் போலியான பக்கத்தை உருவாக்கி அதில் போலியான விவரங்களை பதிவேற்றம் செய்து ஏமாற்றுகின்றனர். இதில் பெரும்பாலும் பண மோசடி செய்வதே அவர்களின் நோக்கமாக உள்ளது.
*பாதிக்கப்பட்டவர்கள் செய்ய வேண்டியவை…
தங்களை யாராவது உளவுப் பார்க்கிறார்கள் என்று உணர்ந்தால் உடனடியாக சைபர் செக்யூரிட்டியில் புகார் அளிக்க வேண்டும். புகைப்படங்கள் தவறாக சித்தரிக்கப்பட்டாலோ அது குறித்த மிரட்டல்கள் வந்தாலோ உடனடியாக cybercrime.gov.in என்ற வலைத்தளத்தில் புகார்களை பதிவு செய்யலாம். அல்லது என்னைப் போன்ற தனியார் புலனாய்வாளர்களின் உதவியினை பெறலாம். பெரும்பாலும் தவறாக சித்தரிக்கப்பட்ட புகைப்படங்கள், போலி வலைத்தள பக்கங்களை நீக்கச் சொல்லிதான் பலர் உதவியினை நாடுகிறார்கள். அவர்களின் பிரச்னைக்கு ஏற்ப புகைப்படங்களையோ அல்லது அந்த பக்கத்தினையோ நாங்க நீக்குவோம். போலியான செயலி மூலம் பணம் இழந்தவர்கள், 24 மணி நேரத்திற்குள் ஆதாரத்துடன் புகார் அளித்தால் RBI மூலம் உதவிகளை பெற்று இழந்த பணத்தை மீட்டெடுக்க வாய்ப்புள்ளது.
*ஸ்கேமர்ஸ் எவ்வாறு பெண்களை குறி வைக்கிறார்கள்..?
சம்பந்தப்பட்ட நபரின் தனிப்பட்ட விவரங்களை கொண்டுதான் ஸ்கேமர்கள் செயல்படுவார்கள். அதாவது, நீங்கள் எப்படிப்பட்டவர், விருப்பங்கள் என அனைத்தும் தெரிந்து கொண்டு அது சம்பந்தமான போலியான லிங்கை உங்களுக்கு அனுப்புவார்கள். நீங்கள் அதை கிளிக் செய்தவுடன் உங்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரித்திடுவார்கள். சில சமயம் அந்த லிங்கினை நீங்க கிளிக் ெசய்யும் போது, வைரஸ்கள் உங்க மொபைலை தாக்கும்.
அதன் மூலம் உங்களின் தகவல்களை திருடி, செல்போனை ஹேக் செய்வார்கள். வலைத்தளங்களில் உங்களுக்கு தெரிந்தவர்களை போல பேசி, உங்களை பற்றின தகவல்களை தந்திரமாக வாங்கிடுவார்கள். பின்னர் அதை வைத்தே உங்களை சிக்க வைப்பார்கள். டேட்டிங் ஆப்கள் மூலம் போலியான காதல் வளர்த்து தனக்கு பணப்பிரச்னை இருப்பதாக கூறி லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டியுள்ள க்ரைம்களும் உள்ளன.
*எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது?
முதலில் உங்களைச் சுற்றி நடப்பதை தெரிந்து கொள்ளுங்கள். உங்களைப் பற்றிய தகவல்களை மற்றவர்களிடம் பகிர வேண்டும் என்பதற்கான அளவுகோலை நிர்ணயித்துக் கொள்வது அவசியம். தெரியாத நபர்களிடம் அதிகமான விவரங்களை பகிர்ந்து கொள்ள கூடாது. செயலிகளை பதிவிறக்கம் செய்யும் போது அதன் நம்பகத்தன்மையை கவனிக்கவும். அதில் கேட்கப்படும் அனுமதிகள் அவசியமா என்பதை அறிந்து பிறகு அனுமதி கொடுக்கவும். செயலிகள் மற்றும் வலைத்தளங்களில் பயன்படுத்தும் கடவுச்சொல்லை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். பெண்கள் ஸ்கேம்களில் சிக்கிக் கொண்டால் உடனடியாக புகார் செய்யவேண்டும்.
புகைப்படங்கள் மூலம் தொடுக்கப்படும் மிரட்டல்கள் மூலம் அவர்கள் சிக்கலில் இருப்பது மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்று பயப்படாமல் பெண்கள் துணிந்து அளிக்க முன் வரவேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு cybercrime.gov.in என்ற வலைத்தளத்தில் பெண்களுக்கென சிறப்பு பிரிவு உள்ளது. இதில் புகார் செய்யப்படும் பெண்கள் குறித்த செய்திகள் அவர்களின் அனுமதியின்றி வெளியாகாது. பிரச்னைகளும் தீர்த்து வைக்கப்படும்.
ஆன்லைன் லோன் செயலிகளை பயன்படுத்த விரும்புவோர், RBIயினால் அங்கீகரிக்கப்பட்ட செயலிகளை பதிவிறக்கம் செய்யலாம். அவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட செயலிகளின் பெயரில் மோசடிகள் நடந்தால் அடுத்த 24 மணி நேரத்திற்குள் புகார் அளிக்கும் பட்சத்தில் RBI தரப்பில் பொறுப்பேற்று அதற்கான உடனடி நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று ஆலோசனை வழங்கினார்.
தொகுப்பு: ரம்யா ரங்கநாதன்
The post பெண்களுக்கு வலை விரிக்கும் சைபர் ஸ்கேம்! appeared first on Dinakaran.