×

பொம்மை தயாரிப்பில் அசர வைக்கும் பெண்மணி!

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், சாதிக்க வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு தற்போது தொழில்முனைவோராக வலம் வருகிறார் சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த நிஷா ஸ்ரீ காந்த். இவர் கண்களை கவரும் அழகான மற்றும் வண்ணமயமான பொம்மைகளை தயாரித்து விற்பனை செய்வது மட்டுமில்லாமல், இதன் மூலம் பல பெண்களுக்கு வேலை வாய்ப்பினையும் ஏற்படுத்தி தந்து வருகிறார். ‘ஸ்ரீ கோலாபுரி’ என்ற பெயரில் இயங்கி வரும் இவரின் பொம்மை தொழிற்சாலை மூலம் 2000க்கும் மேற்பட்ட பெண்களுக்கு இலவசமாக பொம்மைகள் தயாரிக்க பயிற்சி அளித்து கின்னஸ் சாதனையில் இடம் பெற்றுள்ளார். சிறந்த தொழில்முனைவோர், வுமன் லீடர்ஷிப், MSME விருது, வெற்றித்திருமகள் சாதனை விருது என விருதுகளைப் பெற்றவர் தான் கடந்து வந்த பாதையைப் பற்றி விவரித்தார்.

‘‘நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில்தான். எங்க வீடு பத்மநாபசுவாமி கோவில் அருகேதான் இருந்தது. எங்க வீட்டில் என்னையும் சேர்த்து ஐந்து பெண்கள். நான்தான் கடைக்குட்டி. அப்பாவுடைய சொந்த ஊர் சிதம்பரம் என்றாலும், வேலை காரணமாக குடும்பத்தோடு திருவனந்தபுரம் வந்துட்டோம். ஐந்து பெண் குழந்தைகள் ஒருவரின் சம்பாத்தியம் என்றாலும் எங்க எல்லோரையும் அப்பா நல்லா படிக்க வைத்து, நல்ல இடத்தில் திருமணமும் செய்து வைத்தார்.

கார்ப்பரேஷன் பள்ளியில்தான் படித்தேன். அதன் பிறகு கேரள பல்கலைக்கழகத்தில் பி.காம் பட்டப்படிப்பு முடிச்சேன். அப்பா, எங்க எல்லோரையும் ஆண் பிள்ளைகளை போல் தைரியமாகவும், வீரமாக இருக்கணும்னு சொல்லித்தான் வளர்த்தார். எந்த சூழ்நிலையையும் சமாளித்து தன்னம்பிக்கை மற்றும் துணிச்சலுடன் வாழ அம்மா கற்றுக் கொடுத்தார்.

அப்பா பட்டுப் புடவை கடையில் தான் வேலை பார்த்தார். அப்போது கடைகளில் வரும் பட்டுப் புடவையின் சிறிய சாம்பிள் துணிகளை என்னிடம் கொண்டு வந்து தருவார். அதில் சின்னச் சின்ன சைசில் பாவாடை சட்டை எல்லாம் நான் தைப்பேன். எங்க வீட்டில் பொம்மைகளை வாங்கித்தர வசதி கிடையாது. அதனால் சாக்லெட் பேப்பரில் பஞ்சினை வைத்து பிறகு சிகரெட் பாக்கெட்டினை கத்தரித்து, நானே ஒரு பொம்மை செய்வேன். அதற்கு அப்பா கொண்டு வந்த துணிகளில் பாவாடை தைத்து போட்டு அழகு பார்ப்பேன். இந்த பொம்மைகள் கொண்டுதான் நான் விளையாடி இருக்கேன். இதுதான் நான் தற்போது ஈடுபட்டு வரும் இந்த பொம்மை தயாரிப்பு தொழிலுக்கு ஒரு அடித்தளமாக இருந்தது.

வளர ஆரம்பித்த பிறகு எங்க வீட்டு நவராத்திரி கொலுவினை அலங்கரிக்க, அட்டைப் பெட்டிகளைக் கொண்டு பொம்மை தயாரித்து அதன் மூலம் ராமர், கிருஷ்ணர் கதைகளை வடிவமைத்தேன். அதைப் பார்த்து மற்றவர்கள் அவர்கள் வீட்டில் இருக்கும் மரப்பாச்சி பொம்மைகளை கொடுத்து அதற்கு உடையினை தைத்து தர சொல்வார்கள். நானும் அந்த பொம்மைகளுக்கு மாப்பிள்ளை, பெண் போல் அழகாக வேஷ்டி புடவை கட்டி நகைகள் எல்லாம் போட்டு அலங்கரித்து தருவேன். படிப்பு, திருமணத்திற்குப் பிறகு சென்னையில் செட்டிலாயிட்டோம். இங்கு வந்த பிறகு ஐ.டி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். நேரம் கிடைக்கும் போது பொம்மைகளை வடிவமைப்பேன்.

சுவாமி விவேகானந்தர், நரசிம்மர், பக்த பிரகலாதன், மகாபாரதம், ராமாயணம், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பற்றிய கதைகள், ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் பிறந்தது முதல் திருமணம் வரை அனைத்தும் ஒரு தீமாக அமைத்து அதற்கான பொம்மைகளை வடிவமைக்க ஆரம்பித்தேன். அதைப் பார்த்து பலர் பரிசுப் பொருளாக பொம்மைகளை செய்து தரச் சொல்லி கேட்டார்கள். நானும் செய்து கொடுத்து வந்தேன். வேலைக்கு செல்வதால் இதனை பொழுதுபோக்காக தான் செய்து வந்தேன்’’ என்றவர் தன் அக்கா மகளின் திருமணத்திற்குப் பிறகு முழுமையாக தொழில்முனைவோரா தன்னை மாற்றிக் கொண்டுள்ளார்.

‘‘திருமணத்தில் வரவேற்பில் அலங்கரிக்க இது போன்ற பொம்மைகளை வைப்பது வழக்கம். எங்க வீட்டில் அது உன்னுடைய ெபாறுப்புன்னு சொல்லிட்டாங்க. அப்போதுதான் நான் இதில்
முழுமையாக என்னை ஈடுபடுத்தினேன்னு சொல்லணும். மாறுபட்ட தீமில் தினுசு தினுசான பொம்மைகளை நான் செய்து திருமண மண்டபத்தில் கொலு போல அமைத்திருந்தேன். அது கல்யாணத்திற்கு வந்த அனைவரையும் கவர்ந்தது. பலரும் என்னை தேடி வந்து பாராட்டிவிட்டு சென்றார்கள். பாராட்டு மழையில் நனைந்து போனேன் என்றுதான் சொல்லணும். அதைப் பார்த்து பலர் இந்த பொம்மைகளை எங்களுக்கும் செய்து கொடுங்கள், அதற்கான விலையும் தருகிறோம் என்றார்கள். ஆர்டர்கள் வரத் துவங்கியதால் நான் பார்த்து வந்த ஐ.டி வேலையினை விட்டு விட்டு முழு நேர டால்புரூனராக மாறினேன்.

என்னால் மட்டுமே செய்ய முடியாது என்பதால் பெண்களை வேலைக்கு நியமித்து அவர்களுக்கு பொம்மை வடிவமைப்பது குறித்து பயிற்சி அளித்தேன். அதன் பிறகு ஸ்ரீ கோலாபுரி என்ற பெயரில் பொம்மை தொழிற்சாலையினை துவங்கினேன். நேரடியாக மட்டுமில்லாமல் ஆன்லைன் முறையிலும் பொம்மைகளை விற்பனை செய்து வருகிறேன்’’ என்றவர் இந்த தொழிலில் சந்தித்த சுவையான சம்பவங்களை பகிர்ந்து கொண்டார்.

‘‘ஒரு முறை என்னை நாடி ஒரு பெரியவர் வந்தார். அவரின் மகன், மகள், பேரக் குழந்தைகள் அனைவரும் வெளிநாட்டில் இருப்பதாகவும், தான் தனியாக வசித்து வருவதால், ஒரு பாலகிருஷ்ணர் பொம்மை ஒன்று வேண்டும் என்று என்னிடம் வாங்கிச் சென்றார். எப்போதும் அந்த பொம்மையை கையில் வைத்துக் கொண்டு ‘கிருஷ்ணா.. கிருஷ்ணா’ என்று அதனுடன்தான் பேசிக் கொண்டிருப்பதாகவும், தூங்கும் போதும் அருகில் படுக்க வைத்து அதற்கு தாலாட்டு பாடிவிட்டு தான் தூங்குவதாகவும் என்னிடம் கூறினார்.

நான் தயாரித்தது பொம்மையாக இருந்தாலும், ஒருவருக்கு உயிருல்ல பாலகன் போல் அந்த கிருஷ்ணர் துணையாக இருக்கிறார் என்று நினைக்கும் போது மனசுக்கு நெகிழ்வாக இருந்தது. அதேபோல் உயர் பதவியில் இருக்கும் ஒருவர் எங்களிடம் முருகன் பொம்மையினை வாங்கிச் சென்றார். தினமும் வழிபட்டு வேலைக்கு செல்லும் போது தைரியத்தை அவர் கொடுப்பதாக என்னிடம் கூறினார். இது எங்களின் தயாரிப்பிற்கு மேலும் ஒரு பெருமையை சேர்த்தது போல் இருந்தது. உங்களிடம் குழந்தை பொம்மை வாங்கிய பிறகே எங்களுக்கு குழந்தை பிறந்தது என்று சொன்ன தம்பதியும் உண்டு.

ஒரு வயதான பெண்மணி அவர் வீட்டு பூஜை அறைக்கு ஒரு துர்க்கை அம்மன் பொம்மையை எங்களிடம் ஆர்டர் செய்திருந்தார். நானும் மரியாதைக்காக அந்த பொம்மையை நேரில் கொடுக்க சென்றேன். அவர் அதனை பூஜை அறையில் வைக்க சொன்னார். நான் அம்மனை பூஜை அறையில் வைக்க அந்த வயதான பெண்மணி திடீரென்று சாமி வந்து ஆடிவிட்டார். அதைப் பார்த்து நான் மெய்சிலிர்த்துவிட்டேன். இந்த பொம்மைகளை பூஜை அறையில் வைத்து வணங்கலாம். ஷோகேசில் வைத்தும் அழகு பார்க்கலாம். நவராத்திரி கொலுவில் வைத்தும் கொண்டாடலாம்’’ என்று சொன்ன நிஷா தனது எதிர்கால திட்டங்கள் குறித்து கூறினார்.

‘‘பொம்மை தயாரிப்பு தொழில் என்றாகிவிட்டதால், அதில் நான் என்னை அப்கிரேட் செய்து கொண்டிருக்கிறேன். தற்போது 3டி முறையில் பொம்மைகள் செய்ய படித்து வருகிறேன். பெண்களுக்கு நேரடியாக மட்டுமில்லாமல் ஆன்லைன் முறையிலும் பயிற்சி அளித்து அவர்களுக்கு என் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருகிறேன். குறிப்பாக குடும்பப் பெண்கள் இதன் மூலம் ஒரு வருமானம் ஈட்டும் வகையில் உதவி செய்ய வேண்டும். களிமண் பொம்மைகள் மட்டுமில்லாமல், காட்டன் துணி, பஞ்சில் பொம்மைகளை ெசய்து அதற்கு அழகான ஆடை ஆபரணங்கள் அதே கலை வேலைப்பாட்டுடன் செய்ய கற்றுத்தரும் எண்ணம் உள்ளது. பல புதிய தீம்களில் அனைவரையும் கவரும்படி பொம்மைகள் தயாரிக்கவும் திட்டமிட்டு வருகிறோம்.” என்றார் நிஷா ஸ்ரீ காந்த்.

தொகுப்பு: விஜயா கண்ணன்

The post பொம்மை தயாரிப்பில் அசர வைக்கும் பெண்மணி! appeared first on Dinakaran.

Tags : Nisha Srikanth ,Madipakkam ,Chennai ,
× RELATED சிலிண்டர் விபத்தில் தீக்காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு