×
Saravana Stores

ரயில்வே திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கக் கோரி ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!!

சென்னை: ரயில்வே திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கக் கோரி ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். தெற்கு இரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைந்திருக்கும் நிலையில், தமிழ்நாட்டில் புதிய வழித்தடங்கள், இரட்டைப் பாதை மற்றும் வாடிக்கையாளர்களுக்கான வசதிகள் தொடர்பான திட்டங்களுக்கு போதுமான அளவிற்கு நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டுமென வலியுறுத்தி ஒன்றிய இரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய இரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில்;

2024-2025 நிதியாண்டில் வழக்கமான இரயில்வே பட்ஜெட்டில், தெற்கு இரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறிப்பிடத்தக்க அளவிற்குக் குறைந்திருப்பதால், அதன் விளைவாக தமிழ்நாட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து குறிப்பிட்டு, தமிழ்நாட்டில் புதிய வழித்தடங்கள், இரட்டைப் பாதை மற்றும் வாடிக்கையாளர்களுக்கான வசதிகள் தொடர்பான திட்டங்களுக்குப் போதுமான அளவிற்கு நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், 2024-2025 நிதியாண்டுக்கான இந்திய இரயில்வே-க்கான வழக்கமான பட்ஜெட்டில், சில கணக்குத் தலைப்புகளின்கீழ் தெற்கு இரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது ஏமாற்றமளிப்பதாகவும், அதே ஆண்டின் இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகளுடன் ஒப்பிடும்போது இது மிகக் குறைவு என்றும் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். கணக்குத் தலைப்பு 11-புதிய பாதைகள் என்பதன்கீழ் இடைக்கால ஒதுக்கீடாக 976.1 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கமான பட்ஜெட் ஒதுக்கீட்டில் வெறும் 301.3 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றும், கணக்குத் தலைப்பு 15-இரட்டைப் பாதையாக்கல் என்பதன்கீழ் இடைக்கால ஒதுக்கீடாக 2,214.4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கமான பட்ஜெட் ஒதுக்கீட்டில் 1,928.8 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

மேற்கண்ட நிதி ஒதுக்கீட்டில், புதிய வழித்தடத் திட்டங்களுக்கான ஒதுக்கீட்டில் ரூ.674.8 கோடி அளவிற்கு அதிரடிக் குறைப்பு செய்யப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பல முக்கியத் திட்டங்களின் முன்னேற்றம் கடுமையாக பாதிக்கப்படும் எனக் குறிப்பிட்டு, அந்த வகையில், திண்டிவனம்-செஞ்சி-திருவண்ணாமலை, திண்டிவனம்- நகரி, அத்திப்பட்டு-புத்தூர், ஈரோடு-பழனி, சென்னை-கடலூர்-மகாபலிபுரம், மதுரை- தூத்துக்குடி (வழி-அருப்புக்கோட்டை), ஸ்ரீபெரும்புதூர்-கூடுவாஞ்சேரி-இருங்காட்டுக் கோட்டை-ஆவடி-ஸ்ரீபெரும்புதூர் ஆகிய ஏழு முக்கிய திட்டங்கள் பாதிக்கப்படும் என முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், இரட்டைப் பாதைத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை 285.64 கோடி ரூபாய் அளவிற்குக் குறைத்திருப்பது. தமிழ்நாட்டில் மிகவும் அத்தியாவசியமாக உள்ள இரட்டைப் பாதை திட்டங்களைச் செயல்படுத்துவதை நிச்சயம் தாமதப்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், அந்த வகையில், விழுப்புரம்- திண்டுக்கல், திருவள்ளூர்-அரக்கோணம் (4-வது லேன்), ஒமலூர்-மேட்டூர் அணை, திருவனந்தபுரம்-கன்னியாகுமரி, மதுரை-மணியாச்சி-தூத்துக்குடி, மணியாச்சி-நாகர்கோவில், சேலம்-மேக்னசைட் சந்திப்பு-ஓமலூர், காட்பாடி-விழுப்புரம், சேலம்-கரூர்-திண்டுக்கல், ஈரோடு-கரூர், சென்னை கடற்கரை-சென்னை எழும்பூர், அரக்கோணம் யார்டு சாலை 1 மற்றும் 2-க்கு, 3 வது மற்றும் 4 வது வழித்தடம் இணைப்பு போன்ற திட்டங்கள் பாதிக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகள் தொடர்பாக தெற்கு இரயில்வேயில் நிலுவையில் உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து எடுத்துரைக்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், குறிப்பாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், மின்சாரப் பேருந்து சேவைகள், பெருந்திரள் துரித இரயில் போக்குவரத்துத் திட்டத்தை மாநில அரசிடம் ஒப்படைப்பது போன்ற பணிகள் எவ்வித தாமதமும் இன்றி விரைவுபடுத்தப்பட வேண்டுமென்று கேட்டுக் கொண்டு, அப்பணிகளின் விவரங்களை தனது கடிதத்தில் விவரித்துள்ளார்.

மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் புதிய வழித்தடங்கள், இருவழிப்பாதை மற்றும் வாடிக்கையாளர்களுக்கான வசதிகள் தொடர்பான திட்டங்களுக்கு போதுமான அளவிற்கு நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டுமென ஒன்றிய இரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை கேட்டுக் கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதிப் பற்றாக்குறை காரணமாக இந்த முக்கியத் திட்டங்களை மேலும் தாமதப்படுத்தக் கூடாது என்றும், இது தொடர்பாக ஒன்றிய இரயில்வே துறை அமைச்சர் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டுமென்றும் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

The post ரயில்வே திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கக் கோரி ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Railway Minister ,Ashwini Vaishna ,CHENNAI ,M.K.Stalin ,Ashwini Vaishnava ,Tamil Nadu ,Ashwini Vaishnav ,Dinakaran ,
× RELATED எதை பற்றியும் கவலைப்படாமல்...