×

போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள் ஆடு திருடிய வாலிபர்களுக்கு தர்ம அடி

 

திருப்பூர், ஆக. 19: ஊத்துக்குளி அருகே ஆடு திருடிய வாலிபர்களை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.  திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அடுத்த கத்தாங்கண்ணி பகுதியில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடைகள் வளர்ப்பு முக்கிய தொழிலாக விவசாயிகள் செய்து வருகிறார்கள். இந்நிலையில், விவசாயிகள் வளர்க்கும் ஆடு, கோழி போன்றவை அவ்வப்பொழுது காணாமல் போவது வழக்கமாகி வருகிறது.

இந்நிலையில் ஊத்துக்குளி அடுத்த இரட்டை கிணறு பகுதியில் பாப்பாத்தி (44), என்பவர் நேற்று ஆடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது 2 வாலிபர்கள் பைக்கில் வந்துள்ளனர். திடீரென அந்த வாலிபர்களில் ஒருவர் பாப்பாத்தியை கீழே தள்ளிவிட்டு ஆட்டை திருடிக்கொண்டு பைக்கில் சென்றனர். இதனை பார்த்த பாப்பாத்தி கூச்சலிட்டார். தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபர்களை விரட்டி சென்று தொட்டிபாளையத்தில் மடக்கி பிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து ஒன்று கூடிய அப்பகுதி பொதுமக்கள் ஆடு திருட முயன்ற நபர்களை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில், அந்த இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து, ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஊத்துக்குளி போலீசார் பொதுமக்கள் பிடியில் இருந்த அந்த வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.

போலீசார் விசாரணையில் அவர்கள் திருப்பூரை சேர்ந்த மணிகண்டன் (25), பாலகிருஷ்ணன் (22), என்பதும் அவர்கள் மது போதையில் ஆடு திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து மணிகண்டன், பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டதால் அவர்களை சிகிச்சைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பாப்பாத்தி கொடுத்த புகாரின் பேரில் ஊத்துக்குளி போலீசார் விசாரித்து வருகின்றனர். சிகிச்சைக்கு பின் 2 பேரும் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

The post போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள் ஆடு திருடிய வாலிபர்களுக்கு தர்ம அடி appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Uthukuli ,Katangkanni ,Tirupur district ,
× RELATED ஊத்துக்குளி தாலுகா அலுவலகத்தில் இன்று ஆதார் முகாம்