×
Saravana Stores

ஈஷா மண் காப்போம் சார்பில் கோவையில் அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழா: ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

கோவை: ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் வேளாண் தொழில் முனைவோர்களுக்கான “அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழா” எனும் பிரம்மாண்ட பயிற்சி கருத்தரங்கு கோவையில் இன்று (ஆக 15) நடைப்பெற்றது. கோவை சின்னியம்பாளையம் பிருந்தாவன் ஆடிட்டோரியத்தில் பிரம்மாண்டமாக நடைப்பெற்ற இவ்விழாவில் ஆயிரக்கணக்கான விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் பெண்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் திரு. முத்துக்குமார் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். “அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழா” எனும் இந்நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து மண் காப்போம் அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா அவர்கள் பேசுகையில் “இன்றைய சூழலில் விவசாயிகள் ஒரு சுய தொழில் துவங்கி தொழிலதிபராக மாறும் வாய்ப்பு இருக்கிறது.

இந்த வாய்ப்பு விவசாயிகளுக்கு மட்டும் இல்லாமல் இளைஞர்கள், பெண்கள் இல்லத்தரசிகள் என அனைவரையும் சென்று சேர வேண்டும் எனும் நோக்கில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.” என்றுப் பேசினார். வசீகர வேதா என்ற நிறுவனத்தை தன்னுடைய 50 வயதுக்கு மேல் நிறுவி வேளாண் மதிப்பு கூட்டல் பொருட்கள் விற்பனையில் சாதித்த திருமதி. விஜயா மகாதேவன் அவர்கள் தன்னுடைய வெற்றி அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அவரைத் தொடர்ந்து இன்றைய சூழலில் வேளாண் சார் தொழில்களுக்கு அரசு வழங்கும் திட்டங்கள் மற்றும் சலுகைகள் குறித்து, தமிழ்நாடு வேளாண் கல்லூரியின் வணிக மேம்பாடு துறையின் தலைமை செயல் அலுவலர் திரு.ஏ.வி. ஞானசம்பந்தம் அவர்கள் விரிவாக விளக்கிப் பேசினார்.

மேலும் கோவை நபார்டு வங்கி அதிகாரி திருமலா ராவ் அவர்கள், விவசாயிகள் தொழில் துவங்க நபார்டு வங்கியின் மூலம் வழங்கப்படும் கடன உதவித் திட்டங்கள் குறித்து விளக்கினார். இதனைத் தொடர்ந்து சிறுதானியத்தின் மூலம் கோடிகளில் வருமானம் ஈட்டும் பி.வி.ஆர் புட்ஸ் நிறுவனர் திருமதி சுபத்ரா அவர்கள் பேசுகையில் “சிறுதானிய விற்பனையில் துவக்கத்தில் பல்வேறு சிக்கல்களை சந்தித்தோம். ஆனால் தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு சென்று சிறுதானியங்கள் குறித்து எடுத்துக் கூறினோம். முக்கியமாக கோவையில் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு சென்று அங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் ஆரோக்கியம் குறித்தும், கேன்டீனில் அவர்களுக்கு சிறுதானிய உணவுகளை வழங்குவது குறித்தும் எடுத்துரைத்தோம்.

இன்று கோவையில் பல்வேறு நிறுவனங்களில் எங்களின் தயாரிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது அடை, தோசை மாவுகள் உள்ளிட்ட 120 பொருட்களுக்கு மேல் சிறுதானியங்களில் இருந்து தயாரித்து வருகிறோம். உலகத்தில் அதிகளவில் பால் உற்பத்தி இந்தியாவில் நடைபெறுகிறது. ஆனால் அதில் இருந்து தயாரிக்கும் வே புரோட்டீன் எனும் பொருளை நாம் இறக்குமதி செய்கிறோம். ஏன் அந்தப் பொருளை நாமே உற்பத்தி செய்யக் கூடாது. தொழில் துவங்க நினைப்பவர்கள் உங்களுக்கான துறையை முதலில் தேர்ந்தெடுங்கள், பின் அதற்கான தகவல் மையங்களுக்கு சென்று கற்றுக் கொள்ளுங்கள்.”எனக் கூறினார்.

அடுத்ததாக முருங்கை மதிப்புகூட்டு பொருட்களின் ஆன்லைன் விற்பனையில் சாதித்து வரும் பெண் விவசாயி திருமதி. பொன்னரசி, ஜீரோவில் தொடங்கி லட்சங்களில் வருமானம் ஈட்டும் தாய் ஹெர்பல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் திருமதி. அர்ச்சனா, ஐடித் துறையிலிருந்து கால்நடை தீவனப் பொருட்கள் தயாரிப்பு மூலம் கோடிகளில் வருமானம் ஈட்டி வரும் ஆர்.பி. கேட்டல் பீட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் திருமதி. அன்னபூரணி, உள்ளிட்ட வேளாண் சார் தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு சாதனையாளர்கள், வேளாண் வல்லுனர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இதுமட்டுமின்றி இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக சிறப்பாக செயல்படும் தொழில் முனைவோர்களை தேர்வு செய்து அவர்களுக்கு மண் காப்போம் விருதுகள் வழங்கப்பட்டது. இவ்விழாவில் வேளாண் சார் தொழிலில் பயன்படும் எளிமையான சிறு கருவிகள், பேக்கிங்கில் பயன்படும் சாதனங்கள் உள்ளிட்டவற்றின் கண்காட்சியும் நடைபெற்றது.

மேலும் வேளாண் மதிப்புகூட்டப்பட்ட பொருட்களின் கண்காட்சியும், விற்பனையும் நடைப்பெற்றது. ஈஷா மண் காப்போம் இயக்கம் கடந்த 15 வருடங்களாக நம் மண்ணின் வளத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு தமிழகம் முழுவதும் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து வருகிறது. அதுமட்டுமின்றி விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த இயற்கை விவசாயம் குறித்து தமிழகம் முழுவதும் பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வியக்கம் மூலம் இதுவரை 25,000 விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக 8,000 விவசாயிகளுக்கு மேல் இயற்கை விவசாயத்திற்கு திரும்பி வெற்றிகரமாக விவசாயம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஈஷா மண் காப்போம் சார்பில் கோவையில் அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழா: ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : AGRI START-UP FESTIVAL ,GOA ,ISHA MUD KAPPOM ,KOWAI ,AGRI ,ISHA ,Isha Mud Kapom ,Dinakaran ,
× RELATED கோவையில் தேசிய அளவிலான வாகனத்...