×

புகார் கொடுக்க வருபவர் பேச்சை கேட்க போலீசார் தயாராக இருக்க வேண்டும்: பெண்கள், குழந்தைகள் அளிக்கும் புகார்களில் 99% குற்றங்கள் குழந்தைகள் பாதிக்கப்பட்டதாக உள்ளது, டிஜிபி சங்கர் ஜிவால் பேச்சு

சென்னை: புகார் கொடுக்க வருபவர்களின் பேச்சைக் கேட்க காவல்துறையினர் தயாராக இருக்க வேண்டும் என டிஜிபி சங்கர் ஜிவால் கூறினார். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் இணைந்து பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கான ஒரு நாள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நேற்று நடத்தியது. இதில் காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால் உள்பட பலர் பேசினர். இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சங்கர் ஜிவால் பேசியதாவது:

காவல் உதவி என்கிற செயலியை பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் வைத்துக் கொள்ள வேண்டும். வயது முதிர்ந்தவர்களுக்கு இந்த செயலி கண்டிப்பாக மிகவும் பயனுள்ளதாக இருக்கும். காவல்துறை மட்டுமல்ல இன்னும் பல அமைப்புகள் மக்களின் பாதுகாப்பிற்காக செயல்பட்டு வருகிறது. சைபர் க்ரைம் விங்க் என்கிற ஒரு அமைப்பு இருக்கிறது. பணத்திற்காக மட்டுமன்றி இன்னும் பல காரணங்களுக்காக சைபர் க்ரைம் செய்யப்படுகிறது. ஹாரசிங், மார்பிங் போன்ற குற்றங்களில் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

சைபர் குற்றங்களுள் 30 சதவீதத்திற்கும் அதிகமான குற்றங்கள் பணம் அல்லாத குற்றங்களாக இருக்கின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகள் கொடுக்கக் கூடிய புகார்களில் 99% குற்றங்கள் குழந்தைகள் பாதிக்கப்பட்டதாக இருக்கிறது. தமிழகத்தில் 26 சதவிகித காவல்துறையினர் பெண் காவலர்களாக இருக்கிறார்கள். புகார் கொடுக்க வருபவர்களின் பேச்சைக் கேட்க காவல்துறையினர் தயாராக இருக்க வேண்டும். குற்ற சம்பவங்கள் தங்களுக்கு நடந்ததாக கருதி நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

திருமணம் சார்ந்த பிரச்னைகள், விவாகரத்து என பல விஷயங்களில் பெண்கள் தனித்து இருக்கப்படுகிறார்கள். அப்படியான பெண்களுக்கு அரசாங்கம் ஒன் ஸ்டாப் சென்டர் என்கிற அமைப்பை அமைத்தது. ஆனால் இதுசரியாக மக்களுக்கு சேவை செய்யவில்லை. தற்போதுள்ள தொழில்நுட்ப செயலியை பாதுகாப்பு கவசமாக கொண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கலாம். இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் அமைப்பின் மாநில இயக்குனர் குரளமுதன் பேசுகையில்:

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொண்டு அதிக குற்றங்கள் நடைபெறுகின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நீதி வழங்குவதற்கு தமிழக மாநில மகளிர் ஆணையம் சிறப்பாக செயல்படுகிறது. தமிழகத்தில் 64 சதவிகித பெண்கள் பாதுகாப்பாக வீட்டை விட்டு வெளியேறி பணியாற்றி வருகிறார்கள். தேசிய சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி ஆணையத்தின் இயக்குனர் காளிராஜ் பேசுகையில்:

உலகளவில் சைபர் க்ரைம் தொடர்பான குற்றங்களுக்கு ஒரே மாதிரியான சட்டத்தை கொண்டு வர வேண்டும் என ஒன்றிய அமைச்சர் அமித்ஷா சொல்லிருக்கிறார். சர்வதேச அளவில் இதனை கட்டுப்படுத்தினால் மட்டுமே குற்றங்களை குறைக்க முடியும். சைபர் மோசடிகளில் சந்தேக அழைப்புகள் வரும்போது 1930 என்கிற எண்ணை அழைத்து புகார் தெரிவிக்க வேண்டும். தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் குமாரி பேசுகையில்:

எத்தனையோ துறைகளில் பெண்கள் முன்னேறி வந்தாலும் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பெண்கள் இன்னும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளனர். மற்ற மாநிலங்களில் எப்ஐஆர் போடுவதில்லை. ஆனால் தமிழ்நாட்டில் அதிகமான எப்ஐஆர் பதிவாகிறது. தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பிரச்னை ஏற்படுகிறது என்றால் நேர்த்தியாகவும் கடமை உணர்வுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் பேசினர்.

 

The post புகார் கொடுக்க வருபவர் பேச்சை கேட்க போலீசார் தயாராக இருக்க வேண்டும்: பெண்கள், குழந்தைகள் அளிக்கும் புகார்களில் 99% குற்றங்கள் குழந்தைகள் பாதிக்கப்பட்டதாக உள்ளது, டிஜிபி சங்கர் ஜிவால் பேச்சு appeared first on Dinakaran.

Tags : DGP ,Shankar Jiwal ,CHENNAI ,Tamil Nadu Open University ,Tamil Nadu State Women's Commission ,
× RELATED காவல்துறையினர் எந்த ரக காக்கி உடையை...