×

வழக்குகளின் உண்மையை வெளிக்கொண்டுவர வழக்கறிஞர்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்: உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் அறிவுரை

சென்னை: வழக்குகளில் உள்ள உண்மையை வெளிக் கொண்டு வர வழக்கறிஞர்கள் நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் செயல்பட வேண்டுமென்று உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு அரசின் சட்டத்துறை மற்றும் மெட்ராஸ் பார் அசோசியேஷன் இணைந்து நடத்தும் சட்டக் கல்லூரி மாணவர்களுக்கான 3 நாட்கள் பயிலரங்கத்தை சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் நேற்று தொடங்கி வைத்தார்.

இதில் தமிழ்நாடு அரசின் சட்டத்துறை செயலாளர் ஜார்ஜ் அலெக்சாண்டர், மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் பாஸ்கரன், சட்டக் கல்வி இயக்குனர் விஜயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், ‘வழக்காடுவது என்பது ஒரு கலை. அதை அனைத்து இளம் வழக்கறிஞர்களும் உருவாக்கிக்கொள்ள வேண்டும். வழக்கறிஞராக தான் பணியை தொடங்கிய போது, ஆங்கிலத்தில் நீதிமன்றத்தில் பேச தயக்கமும் அச்சமும் இருந்தது.

அதையெல்லாம் சரி செய்ததால் தற்போது நீதிபதியாக உள்ளேன். புத்தகம் வாசிக்கும் பழக்கத்தையும், கூர்ந்து கவனிப்பதையும் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். வழக்கை நீதிமன்றத்தில் நடத்தும் முன்பு வழக்குகளை எளிமையாக விளக்க அதை கதைபோல் சொல்லும் திறமையை வளர்க்க வேண்டும். தெளிவான வாதத்தை வைக்கும் வகையில் வழக்கறிஞர்கள் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும்.

நீதிமன்ற விசாரணையின் போது நீதிபதிகளின் கேள்விக்கு உகந்த பதில்களை வழங்கினாலே வழக்கில் விரைந்து தீர்வு காண முடியும். நீதி மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில், வழக்கறிஞர் வழக்குகளில் நேர்மையுடன், வெளிப்படை தன்மையுடனும் உண்மைகளை தேட வேண்டும். வழக்குகளில் உள்ள உண்மையை வெளிக் கொண்டு வர வழக்கறிஞர்கள், நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் செயல்பட வேண்டும்’’ என்று அறிவுரை வழங்கினார்.

The post வழக்குகளின் உண்மையை வெளிக்கொண்டுவர வழக்கறிஞர்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்: உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Court ,SS Sundar ,CHENNAI ,S.S. Sundar ,Tamil Nadu ,Dr. Ambedkar Law University ,Tamil Nadu Government Law Department ,Madras Bar Association ,Dinakaran ,
× RELATED வீடுகள் முன்பு நோ பார்க்கிங் போர்டு வைக்க தடை