×

5 சென்னை ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு; ஜனவரி முதல் அமல்படுத்துவதாக அறிவிப்பு

சேலம்: நாடு முழுவதும் முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் பயணிகள் கூட்டம், மிக அதிகளவு இருந்து வருகிறது. இதில், பெரும்பாலான ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் 2 அல்லது 3 மட்டுமே இருக்கிறது. இதன்காரணமாக முன்பதிவில்லா டிக்கெட் எடுத்துக் கொண்டு பயணிக்கும் ஏழை, எளிய மக்கள், கடும் நெருக்கடிக்கிடையே அப்பெட்டிகளில் பயணிக்கின்றனர். வட மாநில புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், முன்பதிவில்லா டிக்கெட் வைத்துக்கொண்டு, முன்பதிவு பெட்டிகளை ஆக்கிரமித்து செல்கின்றனர். இதனால், டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்கும் பயணிகளுக்கும், அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது.
இச்சூழலை தவிர்க்க நடப்பு நிதியாண்டில் புதிதாக 10,000 முன்பதிவில்லா பெட்டிகள் உற்பத்தி செய்யப்பட்டு, முக்கிய வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் இணைக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது.

இதன்பேரில், புதிய முன்பதிவில்லா பெட்டிகள் உற்பத்தியை சென்னை ஐசிஎப் உள்ளிட்ட ரயில் பெட்டி ஆலைகள் மேற்கொண்டுள்ளன. இந்தவகையில் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பகுதியில் இயங்கும் 15 ரயில்களில் வரும் ஜனவரி மாதம் முதல் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை 4 ஆக அதிகரிப்பதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதில், சேலம் வழியே இயங்கும் 5 ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் 4 ஆக அதிகரிக்கப்படுகிறது. இதன்படி, சென்னை சென்ட்ரல்-ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரசில் (22649, 22650) இருமார்க்கத்திலும் முறையே வரும் ஜனவரி 20, 23ம் தேதி முதல் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை 3ல் இருந்து 4 ஆக அதிகரிக்கப்படுகிறது.

இதேபோல், சென்னை சென்ட்ரல்-நாகர்கோவில் வாராந்திர எக்ஸ்பிரசில் (12689, 12690) இருமார்க்கத்திலும் வரும் ஜனவரி 17, 19ம் தேதி முதலும், சென்னை சென்ட்ரல்-திருவனந்தபுரம் எக்ஸ்பிரசில் (12695, 12696) இருமார்க்கத்திலும் வரும் ஜனவரி 22, 23ம் தேதி முதலும் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை 3ல் இருந்து 4 ஆக அதிகரிக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல்-ஆலப்புலா எக்ஸ்பிரசில் (22639, 22640), சென்னை சென்ட்ரல்-பாலக்காடு எக்ஸ்பிரசில் (22651, 22652) ஆகிய 2 ரயில்களிலும் இருமார்க்கத்திலும் வரும் ஜனவரி 20, 21ம் தேதி முதல் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கை 3ல் இருந்து 4 ஆக அதிகரிக்கப்படுகிறது. இந்த ரயில்களில் இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டி எண்ணிக்கையில் ஒன்றை குறைத்து, முன்பதிவில்லா பெட்டியை அதிகரித்துள்ளனர்.

 

The post 5 சென்னை ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு; ஜனவரி முதல் அமல்படுத்துவதாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Salem ,Dinakaran ,
× RELATED சின்னசேலம் அருகே கார் விபத்து: நடிகர் ஜீவா உயிர் தப்பினார்