×

அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூரம் பிரமோற்சவ நிறைவு விழா; பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தொடர்ந்து 10 நாட்கள் நடந்த ஆடிப்பூரம் பிரமோற்சவ விழா நேற்றுடன் நிறைவடைந்தது. அதையொட்டி, சிவகங்கை குளத்தில் தீர்த்தவாரி நடந்தது. அப்போது, வளைகாப்பு உற்சவத்தில் அலங்கார ரூபத்தில் பராசக்தி அம்மன் எழுந்தருளி அருள்பாலித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிப்பூரம் பிரமோற்சவ விழா மிகவும் பிரசித்தி பெற்றது. அதன்படி, இந்த ஆண்டு ஆடிப்பூரம் பிரமோற்சவம் கடந்த மாதம் 29ம் தேதி உண்ணாமுலையம்மன் சன்னதி எதிரில் உள்ள தங்க கொடி மரத்தில் கொடிேயற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. தொடர்ந்து, கடந்த 10 நாட்களாக தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில், அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் விநாயகர் மற்றும் பராசக்தி அம்மன் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்நிலையில், ஆடிப்பூரம் பிரமோற்சவ விழாவின் நிறைவாக, கோயில் 5ம் பிரகாரத்தில் அமைந்துள்ள சிவகங்கை தீர்த்தத்தில் தீர்த்தவாரி நேற்று பகல் 12 மணியளவில் நடந்தது. அப்போது, அலங்கார ரூபத்தில் பராசக்தி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தீர்த்தவாரி நடைபெற்ற சிவகங்கை தீர்த்தத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, குளத்துக்குள் யாரும் இறங்க அனுமதிக்கவில்லை.

தொடர்ந்து, மாலை 6 மணியளவில் கோயில் 3ம் பிரகாரத்தில் அமைந்துள்ள அலங்கார மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடைபெற்றது. அதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர், காமதேனு வாகனத்தில் அம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தார். விழாவின் நிறைவாக, அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூரம் தீமிதி விழா இரவு 11.30 மணியளவில், உண்ணாமுலையம்மன் சன்னதி எதிரில் நடந்தது. அப்போது, ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தீமிதி விழா வழக்கமாக அம்மன் கோயில்களில் மட்டுமே நடைபெறுவது வழக்கம். ஆனால், அண்ணாமலையார் திருக்கோயில் அம்மனுக்கு இடபாகம் வழங்கிய அர்த்தநாரீஸ்வரர் அருள்பாலித்த திருத்தலம் என்பதால், இங்கு ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு தீமிதி விழா நடப்பது தனிச்சிறப்பாகும்.

The post அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூரம் பிரமோற்சவ நிறைவு விழா; பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் appeared first on Dinakaran.

Tags : Aadipuram Brahmotsava ,Annamalaiyar Temple ,Thiruvannamalai ,Aadipuram ,ceremony ,Tiruvannamalai ,Theerthawari ,Sivaganga pond ,Goddess ,Parashakti ,Tiruvannamalai Annamalaiyar Temple ,Aadipuram Graduation ceremony ,
× RELATED புதுச்சேரி ஆளுநர் கயிலாசநாதன் சுவாமி...