×

வரவேற்பு நிகழ்ச்சியில் புகுந்து காதலன் திருமணத்தை தடுத்து நிறுத்திய காதலி உறவினர்கள் அதிர்ச்சி `ஆசைவார்த்தை கூறி என்னை ஏமாற்றிவிட்டார்’ என கதறல்

ஆரணி, செப்.6: ஆரணியில் காதலனுக்கு வேறு பெண்ணுடன் நடக்கவிருந்த திருமணத்தை சென்னையை சேர்ந்த காதலி தடுத்து நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 29 வயது வாலிபர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அப்போது, அவருடன் நிறுவனத்தில் வேலை செய்யும் சென்னையை சேர்ந்த 32 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், இருவரும் காதலித்து வந்துள்ளனர். அப்போது, வாலிபர் அந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி, அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தாராம். இந்நிலையில், அந்த வாலிபருக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து, சில வாரங்களுக்கு முன்பு ஆரணியை சேர்ந்த 20 வயது பெண்ணுடன் வாலிபருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அதன்படி, நேற்று முன்தினம் திருமண வரவேற்பும், நேற்று காலை திருமணமும் நடைபெற இருந்தது.

இதற்கிடையில், அந்த வாலிபர் சென்னையில் உள்ள தனது காதலியுடன் சரிவர பேசாமலும், போனை எடுக்காமலும் இருந்து வந்துள்ளார். இதனால், சந்தேகமடைந்த காதலி, நண்பர்களிடம் விசாரித்தபோது, காதலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நடக்க ஏற்பாடு செய்திருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வாலிபரிடம் நேரில் சென்று கேட்டுள்ளார். அதற்கு, அவர் பல்வேறு காரணங்களை கூறி திருமணத்தை தட்டிக்கழித்து வந்துள்ளார். மேலும், நீ என்னைவிட 3 வயது பெரியவள், அதனால் எனது பெற்றோர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, வாலிபரின் பெற்றோர், அந்த பெண்ணிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தி, எனது மகன் திருமணத்தில் எந்த பிரச்னையும் செய்யாமல் இருக்க வேண்டும் எனக்கூறி ₹1 லட்சம் கொடுத்து, சமரசம் செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, வாலிபரின் பெற்றோர் திருமண வேலையை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அந்த வாலிபருக்கு ஆரணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது, இருவீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள், ஊர்மக்கள் என பலர் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.

இரவு 10 மணி அளவில், மணமகனின் காதலி சென்னையில் இருந்து தனது வழக்கறிஞருடன் திருமண மண்டபத்துக்குள் திடீரென நுழைந்தார். பின்னர், மணமேடையில் இருந்த மணமகளிடம், அந்த வாலிபர் என்னை காதலித்து ஏமாற்றிவிட்டு, உன்னை திருமணம் செய்வதாக கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த மணப்பெண், எனக்கு இந்த திருமணமே வேண்டாம் எனக்கூறி மேடையில் இருந்து அழுதுகொண்டே மண்டபத்தை விட்டு வெளியே வந்தார். பின்னர், தனது பெற்றோரிடம் இந்த திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை எனக்கூறியுள்ளார்.

இதையடுத்து, இரு குடும்பத்தாருக்கும் இடையே தகராறு, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. இதனால் நிகழ்ச்சிக்கு வந்திருந்த உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஊர்மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் மற்றும் போலீசார் விரைந்து வந்து, மண்டபத்தில் தகராறில் ஈடுபட்டிருந்த இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, திருமணம் நிறுத்தப்பட்டு, பெண் வீட்டார் கொண்டு வந்த சீர்வரிசை பொருட்களை மண்டபத்திலேயே விட்டுவிட்டு, மணப்பெணை மட்டும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றனர். பின்னர், இதுகுறித்து மணமகளின் பெற்றோர், வாலிபரின் சென்னை காதலி ஆரணி தாலுகா போலீசில் புகார் ெசய்தனர். அதன்பேரில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேறு பெண்ணுடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது, மணமகனின் காதலி திடீரென வந்து திருமணத்தை நிறுத்திய சம்பவம் ஆரணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post வரவேற்பு நிகழ்ச்சியில் புகுந்து காதலன் திருமணத்தை தடுத்து நிறுத்திய காதலி உறவினர்கள் அதிர்ச்சி `ஆசைவார்த்தை கூறி என்னை ஏமாற்றிவிட்டார்’ என கதறல் appeared first on Dinakaran.

Tags : Arani ,Chennai ,Tiruvannamalai district ,
× RELATED மர்ம விலங்கு கடித்து 15 ஆடுகள் பலி சிறுத்தை நடமாட்டம் என கிராம மக்கள் பீதி