×
Saravana Stores

பள்ளிகொண்டா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூச்சு திணறலால் சிகிச்சைக்கு வந்த மூதாட்டி பலி

*சடலத்தை பைக்கில் எடுத்து சென்றதால் பரபரப்பு

பள்ளிகொண்டா : வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த கழணிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் நாகம்மா(65). இவருக்கு நேற்று முன்தினம் இரவு மூச்சுதிணறல் ஏற்பட்டதால் அவரது மகள் பள்ளிகொண்டா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது, அங்கு மருத்துவர் இல்லாததால் பணியில் இருந்த செவிலியர் மறுநாள் காலை அழைத்து வரும்படி கூறியுள்ளார். அதனையடுத்து நேற்று காலை நாகம்மாவுக்கு மூச்சு திணறல் அதிகமானதால் மீண்டும் காலை 9 மணிக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலைத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

அப்போதும், அங்கு மருத்துவர் இல்லாததால் மருத்துவமனை வளாகத்தில் காத்திருந்துள்ளனர். தொடர்ந்து மூதாட்டிக்கு மூச்சு திணறல் அதிகமாகி மயக்கம்போட்டு கீழே விழுந்துள்ளார். உடனடியாக அவரை பரிசோதித்த செவிலியர்கள் நாடித்துடிப்பு குறைந்து கொண்டே இருக்கிறது உடனடியாக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக கொண்டு செல்லுங்கள் என தெரிவித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து நாகம்மா உறவினர்கள் மேல்சிகிச்சைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வசதி செய்து தாருங்கள் என கேட்டுள்ளனர். அதற்கு சுகாதார நிலையத்தில் ஒரு ஆம்புலன்ஸ் தான் உள்ளதாகவும் அது வெளியே சென்றுவிட்டதாகவும் பதில் அளித்துள்ளனர். இதனிடையே பணிக்கு வந்த சுகாதார நிலைய மருத்துவர் நாகம்மா பரிசோதித்து நாடித்துடிப்பு 90 சதவீதம் குறைந்து விட்டது உடனே மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லுங்கள் என தெரிவித்துள்ளார்.

அப்போது அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நாகம்மாவை பார்த்துவிட்டு நாடித்துடிப்பு சுத்தமாக நின்றுவிட்டதாக கூறி சடலத்தை ஏற்ற முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். அதற்கு நாகம்மா உறவினர்கள் மருத்துவரிடம் உயிர்பிரிந்தது கூட ஏன் அறிவிக்க மறுக்கின்றீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு மருத்துவர் சுகாதார நிலையத்தில் உயிர் பிரிந்த தகவல் கூறி சான்றிதழ் தர முடியாது என பதில் கூறியதாக தெரிகிறது.

இதனால் நாகம்மா இறந்துவிட்டாரா இல்லையா என தெரியாமல் அவரது மகள் சுமார் 1 மணி நேரம் மூதாட்டியை மருத்துவமனையிலேயே வைத்துக் கொண்டு கதறி அழுது ெகாண்டிருந்தார். ஒரு கட்டத்தில் மூதாட்டி இறந்துவிட்டதை உணர்ந்த உறவினர்கள் அவரை கொண்டு செல்ல முடிவு செய்தனர். ஆனால் சடலத்தை ஏற்ற எந்தவொரு வாகனமும் முன்வராததாலும், மருத்துவமனை சார்பில் அமரர் ஊர்தி உட்பட எந்த வசதியும் செய்யாததால் மூதாட்டி நாகம்மா சடலத்தை அவர்களே தூக்கி பைக்கில் அமர வைத்து வீட்டிற்கு கொண்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து மருத்துவ வட்டார அலுவலரிடம் கேட்டபோது, பள்ளிகொண்டா சுகாதார நிலையத்தில் தற்போது மருத்துவராக உள்ளவர் திருவலம் மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வேறு ஒரு மருத்துவர் இன்னும் நியமிக்கப்படாததால் அவரே தொடர்ந்து செயல்படுவதாகவும், கூடுதலாக பயிற்சி மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதாகவும் தெரிவித்
தார். மேலும், பள்ளிகொண்டாவில் நாள்தோறும் அதிகப்படியான நோயாளிகள் வருவதால் அதற்கு தகுந்தவாறு மருத்துவர்கள் சுழற்சி முறையில் நியமிக்க மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்

பள்ளிகொண்டா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாள்தோறும் ஏராளமான கர்ப்பிணி பெண்கள், புறநோயாளிகள் என சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். மேலும், தேசிய நெடுஞ்சாலையொட்டி உள்ளதால் விபத்து ஏற்பட்டு அவசர சிகிச்சைக்காகவும் பலர் வருகின்றனர். அப்போது, அதற்கான சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவ உபகரணங்களும், மருத்துவர்களும் சுகாதார நிலையத்தில் இல்லாததால் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது.

அப்படி போகும் போது செல்லும் வழியிலேயே உயிரிழப்புகள் ஏற்பட்டுகிறது. இதனை தவிர்க்க சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தி 24 மணி நேரமும் மருத்துவரை பணியமர்த்தி பொதுமக்கள் சிகிச்சை பெற மாவட்ட மருத்துவதுறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.

The post பள்ளிகொண்டா அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூச்சு திணறலால் சிகிச்சைக்கு வந்த மூதாட்டி பலி appeared first on Dinakaran.

Tags : Pallikonda Government Primary Health Center ,Pallikonda ,Nagamma ,Kalanippakkam village ,Pallikonda, Vellore district ,
× RELATED போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சென்னை...