- அரவிந்த் கெஜ்ரிவால்
- யூனியன் பிஜேபி
- ஆர்.எஸ்.பார்தி
- சென்னை
- யூனியன் அரசு
- சிபிஐ
- ஆம் ஆத்மி கட்சி
- ஆர்.எஸ். பாரதி
சென்னை: அமலாக்கத்துறை, சிபிஐ அமைப்புகளை தவறாக பயன்படுத்தும் ஒன்றிய அரசை கண்டித்தும், ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறையில் சரியான சிகிச்சை வழங்காததையும், அவரை விடுதலை செய்ய வலியுறுத்தியும் இந்தியா கூட்டனி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு, ஆம் ஆத்மி மாநில தலைவர் வசீகரன் தலைமை வகித்தார்.
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, துணை தலைவர் சொர்ணா சேதுராமன், மாநில பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கர், விடுதலை சிறுத்தைகள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி, காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில், ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது: பாஜ அமைத்துள்ள இந்த ஆட்சி மக்களால் அமைக்கப்பட்டுள்ள ஆட்சி அல்ல.
கோயபல்ஸ் பிரசாரங்களை செய்து ஆட்சிக்கு வந்த பின்னரும் மைனாரிட்டி அரசாகத் தான் இருக்கிறது. பிரதமர் மோடி கொஞ்சநஞ்ச பொய்யா சொன்னார். தமிழ்நாட்டுக்காரர்கள் எல்லாம் திருடன் என்று கூறினார். பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாவட்டங்களில் மோடி, அமித்ஷா பேசியது உங்களுக்கு தெரியும். எனவே ஒன்றிய பாஜ ஆட்சியானது, அடுத்த நாடாளுமன்றம் கூடும் வரை இருக்கிறதா என்பதே சந்தேகமாகத் தான் இருக்கிறது. ஏனென்றால் நிதிஷ்குமார் தற்போது தனது சுயரூபத்தை காட்டி விட்டார்.
டிசம்பர் மாதம் வரை பார்ப்பார், பின்னர் ஆட்சியைக் கவிழ்த்து விட வாய்ப்புள்ளது. அமலாக்கத்துறையை தவறாக பயன்படுத்தி இந்தியா முழுவதும் எந்தெந்த தலைவர்களை தவறாக கைது செய்துள்ளனரோ, அவர்கள் அனைவரையும் விடுதலை செய்யும் வரை, அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெறும் வரை இந்த அணி தொடர்ந்து போராட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசுகையில், ‘‘அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் இந்த ஆட்சி இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. ஜனநாயகத்தை வீழ்த்த முடியாது, அது வென்றே தீரும். அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டு வருவார். பாசிசத்திற்கு எதிராக, மோடிக்கு எதிராக குரல் கொடுப்பார்’’ என்றார்.
The post அரவிந்த் கெஜ்ரிவால் கைது கண்டித்து ஆர்ப்பாட்டம் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் வரை ஒன்றிய பாஜ ஆட்சி நீடிப்பது சந்தேகம்: ஆர்.எஸ்.பாரதி பேச்சு appeared first on Dinakaran.