- தமிழ்-கர்நாடக எல்லை
- ஓசூர்
- கர்நாடக மாநில எல்லை
- மேக்னா
- கிருஷ்ணகிரி மாவட்டம்
- ஆனேகல், கர்நாடக மாநில எல்லை
- தின மலர்
ஓசூர்: ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையில், மூன்று பேரை கொன்ற மக்னா காட்டு யானையை, 8 கும்கி யானைகள் உதவியுடன் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான ஆனெக்கல் அடுத்துள்ள பன்னார் கட்டா தேசிய பூங்காவை ஒட்டியுள்ள கிராம பகுதிகளில், கடந்த சில நாட்களுக்கு முன் மக்னா காட்டு யானை சுற்றித்திரிந்தது. அந்த பகுதியில் அடுத்தடுத்து 3 பேரை தாக்கி கொன்றுள்ளது.
இதனையடுத்து கிராம மக்கள், மக்னா யானையை பிடித்து வேறு பகுதிக்கு கொண்டுசெல்ல வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து மக்னா யானையை பிடிப்பதற்காக, கர்நாடகா மாநிலம் துபாரே மற்றும் மத்திகோடு ஆகிய முகாம்களில் இருந்து 8 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. தொடர்ந்து வனத்துறை ஊழியர்கள் கும்கி யானைகளின் உதவியுடன் வனப்பகுதிக்குள் சென்று மக்னா யானையை தேடி வந்தனர். ஆனால் யானை சிக்கவில்லை. இதையடுத்து வனப்பகுதியில் டிரோன் பறக்க விட்டு, பள்ளத்தாக்கில் மக்னா யானை இருப்பது கண்டறியப்பட்டது.
பின்னர் கும்கி யானைகளுடன் வனத்துறையினர் மற்றும் மயக்க மருந்து நிபுணர் ரஞ்சன் சென்று, நேற்று முன்தினம் மக்னா யானை மீது துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தினர். தொடர்ந்து ஒரு கி.மீ. துாரம் நடந்து சென்ற மக்னா யானை மயக்கம் அடைந்து கீழே விழுந்தது. தடித்த கயிறுகளால் அதனை கட்டி, பீமா, மகேந்திரா உள்ளிட்ட கும்கி யானைகள் உதவியுடன் சிறிது தூரம் மக்னா யானையை வனத்துறையினர் அழைத்து வந்தனர். பின்னர் அந்த யானை லாரியில் ஏற்றப்பட்டு பன்னார் கட்டா தேசிய பூங்காவின் சீகேகட்டே யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த பணியில் 100க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் ஈடுபட்டனர்.
* மின்சாரம் தாக்கி காட்டு யானை பலி
நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவர்சேலை பேரூராட்சிக்குட்பட்ட கிராமங்களில் காட்டு யானைகள் அடிக்கடி நுழைவதால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனர். நேற்று முன்தினம் இரவு முதுமலை வனப்பகுதியில் இருந்து போஸ்பாரா பகுதி வழியாக வந்த காட்டு யானை, கூடலூர் செட்டி அங்காடி பகுதியில் சாலையோரத்தில் பாக்கு மரத்தை முறித்தது. அந்த மரம் மின்கம்பியில் விழுந்ததால், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே யானை உயிரிழந்தது. வனத்துறையினர் வந்து ஆய்வு செய்து, உயிரிழந்தது சுமார் 15 முதல் 20 வயதுள்ள ஆண் யானை என தெரிவித்தனர்.
The post தமிழக- கர்நாடக எல்லையில் 3 பேரை கொன்ற மக்னா யானை சிக்கியது: 8 கும்கி உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர் appeared first on Dinakaran.