டெஹ்ரான்: ஈரானில் கடுமையான வெப்ப அலை காரணமாக அரசு அலுவலகங்கள்,வங்கிகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. ஈரான் நாட்டில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. தலைநகர் டெஹ்ரானில் நேற்று 42 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியது. கடுமையான வெப்பம் காரணமாக அரசு அலுவலகங்கள், வங்கிகள், பொது துறை நிறுவனங்களின் அலுவலக நேரம் நேற்று பாதியாக குறைக்கப்பட்டது.
கடுமையான வெப்பத்தில் இருந்து மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், ஆற்றலை சேமிக்கவும் நாடு முழுவதும் வங்கிகள், அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாலை 5 மணி வரை பொது வெளியில் நடமாட வேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடும் வெப்ப அலை காரணமாக மின் நுகர்வு அதிகரித்துள்ளதாகவும் கடந்த செவ்வாய்கிழமையன்று மின்நுகர்வு 78,106 மெகாவாட் என்ற சாதனை அளவை எட்டியதாகவும் ஈரான் செய்தி நிறுவனம் இர்னா தெரிவித்துள்ளது.
The post ஈரானில் கடும் வெப்ப அலை அரசு அலுவலகங்கள் மூடல்: மாலை 5 மணி வரை வெளியே வர தடை appeared first on Dinakaran.