×

மோடியின் ரஷ்ய பயணத்தால் ஏமாற்றம் அடைந்தோம்: அமெரிக்கா கருத்து

வாஷிங்டன்: பிரதமர் மோடியின் ரஷ்ய பயணத்தால் ஏமாற்றம் அடைந்ததாக அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது. 3ம் முறை பிரதமர் பதவியேற்ற மோடி, கடந்த 8,9 ஆகிய தேதிகளில் ரஷ்யா சென்றார். அப்போது மாஸ்கோவில் பிரதமர் மோடியை ரஷ்ய அதிபர் புடின் கட்டிப்பிடித்து வரவேற்றார்.

இதுகுறித்து உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, “உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் உலகின் மிகக் கொடூரமான குற்றவாளியை கட்டிப்பிடிப்பது உக்ரைன் – ரஷ்யா போரின் அமைதி முயற்சிகளுக்கு பெரும் ஏமாற்றம் மற்றும் பேரழிவு தரும் இடியாகும்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிரதமர் மோடியின் ரஷ்ய பயணம் ஏமாற்றம் அளிப்பதாக அமெரிக்கா வேதனை தெரிவித்துள்ளது.  இதுகுறித்து தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்காவின் துணைசெயலாளர் டொனால்ட் லூ கூறியதாவது,

“பிரதமர் மோடி ரஷ்யா செல்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன் இத்தாலியில் நடந்த ஜி7 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். உக்ரைன் – ரஷ்யா போரில் குழந்தைகள் பலியாவதை பார்த்து அடைந்த வேதனையை மோடி தெரிவித்தார். உக்ரைன் – ரஷ்யா பிரச்னையை போரால் வெல்ல முடியாது என்று கூறினார். பின்னர் மாஸ்கோ சென்ற மோடி என்ன செய்தார் என்பதை நாங்கள் கவனமாக பார்த்து கொண்டிருந்தோம்” என்று தெரிவித்தார்.

The post மோடியின் ரஷ்ய பயணத்தால் ஏமாற்றம் அடைந்தோம்: அமெரிக்கா கருத்து appeared first on Dinakaran.

Tags : Modi ,Russia ,United States ,Washington ,President Putin ,Moscow ,America ,Dinakaran ,
× RELATED உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!