- இந்திய முதலீட்டு அலுவலகம்
- சிங்கப்பூர்
- பிரதமர் மோடி
- மோடி
- புரூணை
- இந்திய முதலீட்டு அலுவலகம்
- புரிந்துணர்வு
- தின மலர்
சிங்கப்பூர்: சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு இந்திய முதலீட்டு அலுவலகம் திறக்கப்படும் என்று அறிவித்தார். பிரதமரின் இந்த பயணத்தின்போது இருநாட்டுக்கும் இடையே 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. பிரதமர் மோடி தனது புருனே பயணத்தை முடித்துக்கொண்டு 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் சிங்கப்பூர் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிரதமர் மோடி நேற்று பிரதமர் லாரன்ஸ் வோங்கை நேரில் சந்தித்தார். முன்னதாக சிங்கப்பூர் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த சந்திப்பின்போது சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்து முடிந்த இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்கள் மாநாடு குறித்து இருவரும் விவாதித்தனர். இரு நாட்டை சேர்ந்த மூத்த அமைச்சர்களின் பணிகளை இருநாட்டு பிரதமர்களும் பாராட்டினார்கள். 2025ம் ஆண்டு இரு நாட்டுக்கும் இடையேயான உறவின் 60வது ஆண்டு விழாவை கொண்டாடுவது குறித்தும் இருவரும் கலந்துரையாடினார்கள். இந்தியா-ஆசியான் உறவுகள் மற்றும் இந்தோ-பசிபிக் தொடர்பான இந்தியாவின் தொலைநோக்கு உள்ளிட்ட பரஸ்பர நலன் சார்ந்த விவகாரங்கள் மற்றும் பிராந்திய மற்றும் உலகளாவிய முக்கிய பிரச்னைகள் குறித்தும் இருநாட்டு பிரதமர்களும் தங்களது கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். தொடர்ந்து சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கை இந்தியா வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். பிரதமரின் அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டார்.
பிரதமர் மோடியின் தொடக்க உரையில், ‘‘4ஜி தலைவர்கள் (நான்காம் தலைமுறை) தலைமையில் சிங்கப்பூர் இன்னும் வேகமாக முன்னேறும் என்று நான் நம்புகிறேன். நாங்களும் இந்தியாவில் பல சிங்கப்பூர்களை உருவாக்குவதற்கு விரும்புகிறோம். நாம் ஒன்றிணைந்து செயல்படுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். திறன், டிஜிட்டல் மயமாக்கல், மேம்பட்ட உற்பத்தி, செயற்கை நுண்ணறிவு, சுகாதாரம், நிலைத்தன்மை மற்றும் இணைய பாதுகாப்பு ஆகியவற்றில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிப்பதன் அடையாளமாக இந்த சந்திப்பு மாறியுள்ளது” என்றார்.
இதனை தொடர்ந்து இந்தியா-சிங்கப்பூர் இடையே 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இணைய பாதுகாப்பு, தொழில்நுட்ப பகிர்வு, சிறிய நடுத்தர நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு முயற்சி, செமி கண்டக்டர் துறை உள்ளிட்ட 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. தொடர்ந்து பிரதமர் மோடி சிங்கப்பூரில் இருக்கும் உயர் வணிக தலைவர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை சந்தித்து பேசினார். இருநாட்டுக்கும் இடையே பொருளாதார தொடர்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து அவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, இந்திய முதலீட்டு அலுவலகம் சிங்கப்பூரில் தொடங்கப்படும் என்று அறிவித்தார். சிங்கப்பூர் பிரதமர் அளித்த இரவு உணவுக்கு பின் 2 நாள் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார். இது குறித்து பிரதமர் தனது எக்ஸ் பதிவில்,‘‘சிங்கப்பூர் பயணம் நிச்சயமாக இருதரப்பு உறவுக்கு வலிமை சேர்க்கும். நமது நாட்டு மக்களுக்கு நன்மை பயக்கும். சிங்கப்பூர் அரசுக்கும், மக்களுக்கும் அவர்களின் அரவணைப்புக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
* சிங்கப்பூர் அதிபருக்கு அழைப்பு
பிரதமர் மோடி, சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தை சந்தித்து கலந்துரையாடினார். அடுத்த ஆண்டு அதிபர் தர்மனை இந்தியாவிற்கு வரவேற்பதற்கு காத்திருப்பதாகவும் பிரதமர் மோடி அப்போது தெரிவித்தார். சிங்கப்பூர் சென்ற பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் லீ மதிய உணவு அளித்தார். தொடர்ந்து இருவரும் சிறிது நேரம் கலந்துரையாடினார்கள்.
* திருவள்ளுவர் கலாச்சார மையம்
இந்தியா-சிங்கப்பூர் இடையேயான கலாச்சார உறவுகளை மேம்படுத்தும் வகையில் உலகின் முதல் திருவள்ளுவர் கலாச்சார மையம் சிங்கப்பூரில் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதனை விரைவில் செய்வதற்கு அரசு ஆர்வமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
The post இந்திய முதலீட்டு அலுவலகம் சிங்கப்பூரில் திறப்பு: பிரதமர் மோடி அறிவிப்பு; இருநாடுகளுக்கும் இடையே 4 புரிந்துணர்வு ஒப்பந்தம் appeared first on Dinakaran.