- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- பசுக்கள் சரணாலயம், அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகம்
- திருவண்ணாமலை
- இந்து சமய அறநெறிகள் துறை
- பசுக்கள் சரணாலயம், அறநிலையத் துறை மண்டல இணை ஆணையர் அலுவலகம்
திருவண்ணாமலை, ஜூலை 25: திருவண்ணாமலையில் ₹5.95 கோடி மதிப்பில் பசுக்கள் காப்பகம் மற்றும் அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் கட்டுமான பணிகளை காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ₹35.57 கோடி மதிப்பிலான 14 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் ₹20.53 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று காணொலி காட்சி மூலம் நடந்தது. அதையொட்டி, சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அதன்படி, திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் சார்பில், கிரிவலப்பாதையில் நிருதி லிங்கம் அருகே ₹2.95 கோடி மதிப்பில் புதியதாக ஒருங்கிணைந்த பசுக்கள் காப்பகம் அமைக்கும் பணிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
அண்ணாமலையார் கோயிலில் தற்போது 5ம் பிரகாரத்தில் கோசாலை செயல்படுகிறது. அதில், அதிகபட்சம் 60 பசுக்கள் வரை பராமரிக்கும் வசதி உள்ளது. ஆனாலும், கோசாலைக்கு போதுமான கட்டமைப்பு வசதிகளை கோயில் பிரகாரத்துக்குள் ஏற்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எனவே, கிரிவலப்பாதையில் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் தற்போது ஒருங்கிணைந்த பசுக்கள் காப்பகம் அமைக்கப்படுகிறது. தற்போது அமையும் பசுக்கள் காப்பகம் 11,128 சதுர பரப்பளவில் அமைகிறது. அதில், 150 பசுக்களை பாராமரிக்க முடியும். மேலும், நோயால் பாதிக்கப்படும் பசுக்களை தனிமைப்படுத்தும் இடம், கால்நடை மருத்துவ சிகிச்சைக்கான வசதி, பணியாளர்கள் குடியிருப்பு போன்ற வசதிகள் செய்யப்படுகிறது.
ஒருங்கிணைந்த பசுக்கள் காப்பகம் அமைக்கப்படுவதன் மூலம், கோயிலுக்கு தானமாக வழங்கப்படும் பசுக்களை பராமரிக்க வாய்ப்பு ஏற்படும். அதோடு, கோயிலுக்கு தேவையான பால், இந்த காப்பகத்தில் இருந்து கொள்முதல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சி பகுதியில் ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் அருகே இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகம் ₹3 கோடி மதிப்பில் கட்டப்படுகிறது. இப்பணியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
கடந்த 4 ஆண்டுகளாக, திருவண்ணாமலை காந்தி நகர் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் மண்டல இணை ஆணையர் அலுவலகம், புதிய கட்டிட கட்டுமான பணி முடிந்ததும் சொந்த கட்டிடத்திற்கு இடம் மாறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தும் வரும் மார்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், காணொலி காட்சி நிகழ்ச்சியை முன்னிட்டு, திருவண்ணாமலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். உரிய சிறப்பு வழிபாடுகளுடன் கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், மாநில தடகளச் சங்க துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் ஜோதி, மண்டல இணை ஆணையர் சுதர்சன், நகராட்சித் தலைவர் நிர்மலா வேல்மாறன், ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, அண்ணாமலையார் கோயில் அறங்காவலர்கள் ராஜாராம், கோமதி குணசேகரன், சினம் பெருமாள், கோயில் மேலாளர் செந்தில், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் வெங்கடேசன், செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் நிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post பசுக்கள் காப்பகம், அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் அலுவலகம் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் தொடங்கி வைத்தார் திருவண்ணாமலையில் ₹5.95 கோடி மதிப்பில் appeared first on Dinakaran.