×

பாட்டியை தாக்கி 8 சவரன் பறித்த பேத்தி தலைமறைவானவருக்கு வலை ஆரணி அருகே தனியாக வசிக்கும்

ஆரணி, நவ.13: ஆரணி அருகே வீட்டில் தனியாக வசிக்கும் பாட்டியை தாக்கி அவரது பேத்தி 8 சவரன் நகை திருடிச்சென்றுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ராட்டிணமங்கலம் ஊராட்சி ஈபி நகர் புதுத்தெருவை சேர்ந்தவர் வேதபுரி மனைவி சிந்தாமணி(75). இவரது கணவர் இறந்துவிட்டதால் தனது வீட்டில் தனியாக வசிக்கிறார். அதேபகுதியில் மகன் வழி பேரன் பிரதாப் குடும்பத்தினர் உள்ளனர். அவர்கள் சிந்தாமணிக்கு உணவு வழங்கி பராமரித்து வருகின்றனர். அதன்படி நேற்றுமுன்தினம் பிரதாப் குடும்பத்தினர் சிந்தாமணிக்கு மதிய உணவு கொடுக்கச்சென்றனர். அப்போது வீட்டின் கதவு வெளிப்பக்கம் மூடியிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது தலையில் காயத்துடன் சிந்தாமணி மயங்கி கிடந்தார். அவரது கழுத்தில் இருந்த 8 சவரன் நகை காணவில்லை. அப்போது அங்கு சிந்தாமணியின் மற்றொரு மகன் வழி பேத்தியான மதுமதி என்பவர் பதற்றத்துடன் வந்தாராம். அவரிடம் நடந்த சம்பவம் குறித்து பிரதாப் குடும்பத்தினர் கேட்டுள்ளனர்.

ஆனால் மதுமதி முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறிவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டாராம். இதையடுத்து படுகாயமடைந்த சிந்தாமணியை ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் பிரதாப் குடும்பத்தினர் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில் தனியாக வசிக்கும் சிந்தாமணியை, கணவரை பிரிந்து வாழும் மதுமதியும் அவ்வப்போது பராமரித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காலை வீட்டுக்கு வந்த அவர், சிந்தாமணியை தாக்கிவிட்டு அவர் அணிந்திருந்த 8 சவரன் நகையை திருடிச்சென்றது ெதரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து தலைமறைவான மதுமதியை தேடிவருகின்றனர்.

The post பாட்டியை தாக்கி 8 சவரன் பறித்த பேத்தி தலைமறைவானவருக்கு வலை ஆரணி அருகே தனியாக வசிக்கும் appeared first on Dinakaran.

Tags : Arani ,Vedapuri ,Chintamani ,EB Nagar Pudutheru ,Rattinamangalam Panchayat ,Tiruvannamalai District ,Webarani ,
× RELATED ஆரணி பேரூராட்சியில் மது பிரியர்களின்...