×

தமிழ்நாட்டின் மீது ஒன்றிய அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியையே இந்த பட்ஜெட் காட்டுகிறது : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

சென்னை : மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்தவிதமான புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாதது ஏமாற்றத்தை அளிக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் அளித்த பல வாக்குறுதிகள், இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்பது மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. வட மாநிலங்களையும், பாடணி கட்சிகள் ஆளும் மாநிலங்களையும் திருப்திபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதே தவிர, ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சமநிலையோடு ஊக்குவிக்கும் அறிக்கையாக இல்லை.தமிழ்நாட்டிற்கு எந்தவிதமான திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்பது, தமிழ்நாட்டின் மீது ஒன்றிய அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது.

தற்போதைய அறிவிப்புகளால் விவசாயிகளுக்கு எதிர்பார்த்த எந்த நன்மைகளும் இருக்காது. கோதாவரி – காவிரி இணைப்பு குறித்து பட்ஜெட்டில் எந்த ஒரு அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. நடந்தாய் வாழி காவிரி திட்டத்தை அறிவித்துவிட்டு எந்த நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை. வருமான வரிவிகிதத்தில் மாற்றம் வரும் என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஒசூர்-கோவை பாதுகாப்பு தொழில்வழி திட்டமும் அறிவிப்போடு கிடப்பில் போடப்பட்டுள்ளது. வெள்ளத்தடுப்பு பணிக்கு அசாம், பீகாருக்கு பெருந்தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கான வெள்ளத்தடுப்பு திட்டங்கள் ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. தனியார் துறை மூலம் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்பது எந்தஅளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டின் மீது ஒன்றிய அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியையே இந்த பட்ஜெட் காட்டுகிறது : எடப்பாடி பழனிசாமி விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Union government ,Tamil Nadu ,Edappadi Palaniswami ,Chennai ,Union Budget ,BJP ,Tamil ,Nadu ,Dinakaran ,
× RELATED மீனவர்கள் உண்ணாவிரதம் அதிமுக பங்கேற்பு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு