×

பொன்னான வாழ்வு தரும் பொன்னேஸ்வரி

துவாபர யுகத்தில் சொர்ணமயமாகத் திகழ்ந்த ஒரு மலை, இந்தக் கலியுகத்தில் கல்மலையாக விளங்குகிறது. கிருதயுகத்தில் வைர மலையாகவும், திரேதா யுகத்தில் மரகத மலையாகவும் திகழ்ந்திருக்கிறது இதே மலை. ஆனாலும் இது பூர்வ யுகத்து மகிமையால் பொன்மலை என்றுதான் அழைக்கப்படுகிறது. திருச்சிக்கு அருகில் இந்த மலையின் பெயரை ஒட்டியே பொன்மலை என்ற ஊரும் அமைந்திருக்கிறது. 200 அடி உயரம் கொண்ட இம்மலையின் உச்சியில் ஏறி நின்று பார்த்தால் கிழக்கே எறும்பீஸ்வரர் மலையும், மேற்கே இரட்டை மலையும், வடக்கே திருச்சி மலைக்கோட்டையும், தெற்கே நார்த்தாமலையும் தெரியும். இந்த நான்கு மலைகளும் தெய்வாம்சம் நிறைந்தவை.பொன்மலை மூன்று அடுக்குகளாக காட்சி தருகிறது. முதல் அடுக்கில் ஈஸ்வரி கோயிலும், இரண்டாம் அடுக்கில் முருகப் பெருமான், ஐயப்பன் கோயில்களும் அமையப்பெற்றிருக்க, மூன்றாம் அடுக்கான உச்சிப் பகுதி திறந்த வெளியாக உள்ளது.

பொன்மலையில் ஈஸ்வரி கோயில் அமைந்தது எப்படி?

கயிலைவாசியான நாகார்ஜுன முனிவர் பூலோகத்திற்கு வந்து தவம் செய்ய விரும்பினார். அவர், பார்வைக்கு ரம்மியமான சூழ்நிலையில் அமைந்திருந்த மலை ஒன்று தென்பட்டது. அந்த மலைதான் இப்போதைய பொன்மலை. அந்த மலையடிவாரத்தில் அமர்ந்து தவம் செய்ய ஆரம்பித்தார் முனிவர். காலம் கடந்தது. ஒருநாள், கண் விழித்துப் பார்த்த போது, அவர் அருகில், ஒரு புதரில் அதிசய ஒளி பிரகாசித்தது. ‘அந்தப் புதர் பகுதியிலிருந்து ஒளிவர காரணம் என்ன?’ என்று யோசித்தபடியே புதருக்கருகே சென்றார். அங்கே, புதர் நடுவில் ஓர் அம்மனின் சிரசு மட்டும் வெளியே தெரிந்தது. அதிலிருந்துதான் ஒளி பரவியது. அம்மனின் சிலையை எடுக்க முயன்றார் முனிவர். ஆனால், அம்மனின் திருவுருவம் பூமிக்குள் புதைந்திருந்தது. உடனே அந்த இடத்தை ஒழுங்குபடுத்தி, அம்மனின் முழு திருவுருவத்தையும் பூமிக்குள்ளிருந்து வெளியே எடுத்தார் முனிவர். அம்மனுடன் சில பொற்காசுகளும் வெளிவந்தன. அந்த விக்ரகம் பராசக்தியின் மறுபிம்பமான ஈஸ்வரியின் திருவுருவாக இருப்பதைக் கண்டு அதிசயத்த அவர், ஈஸ்வரியை அருகிலிருந்த சரக்கொன்றை மரத்தடியில் ஸ்தாபித்து வழிபட்டார்.தேவியுடன் சில பொற்காசுகளும் வெளிப்பட்டதால், ஈஸ்வரிக்கு ஸ்ரீபொன்னேஸ்வரி என்று திருப்பெயரிட்டு தினமும் வழிபட்டார்; பிற மக்களும் வழிபடலாயினர். ஈஸ்வரிக்கு அபிஷேகம் செய்ய எண் கோண வடிவில் ஒரு கிணறு அமைத்தார், முனிவர். அந்த கிணற்றுக்கு மலைமேலிருந்து, தன் தியான யோகத்தால் நீர் வரும்படி செய்தார். இன்றும் மலை மேலிருந்து நீர் கசிந்து இந்தப் புனிதக் கிணற்றில் சங்கமமாகிறது. இது அக்னி தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. அன்னைக்கு மக்கள் உதவியுடன் சிறு கோயிலை நிர்மாணித்த முனிவர் கயிலாயத்துக்குத் திரும்பினார் என்கிறது தலபுராணம்.

இக்கோயிலுக்குள் நுழையும்போது 16 கால்கள் கொண்ட கொட்டகை சுகமான நிழல் தருகிறது. அந்தக் கொட்டகையின் இடது பக்கத்தில் உள்ள அக்னி தீர்த்தக் கிணற்றைத் தரிசித்துவிட்டு பிரதான கோயில் வாயிலுக்குள் நுழையலாம். ஒரே பிரகாரம் கொண்ட இக்கோயிலின் நுழைவாயிலிலிருந்தே ஈஸ்வரியைத் தரிசிக்கலாம். ஈஸ்வரி சந்நதியின் வலதுபுறம் ராஜ கணபதி எழுந்தருளியுள்ளார். இவரை வழிபட்டபின், ஈஸ்வரியைத் தரிசிப்பது மரபு.மூலஸ்தானத்தில் சுயம்புவாக எழுந்தருளியிருக்கும் ஈஸ்வரி அமர்ந்த நிலையில் அருள்புரிகிறாள். இக்கோயில் கட்டியதும், கருவறையில் ஈஸ்வரி விக்ரகத்திற்கு முன்னால் மூன்றடி உயரத்தில் இன்னொரு ஈஸ்வரியையும் பிரதிஷ்டை செய்திருந்தார்கள். ஆக, ஒரே கருவறையில் இரண்டு ஈஸ்வரிகள் இங்கே! முன்னவர், ‘ஆதி பொன்னேஸ்வரி’. பின்னாலிருப்பவர், ‘ஸ்ரீபொன்னேஸ்வரி’. கருவறையிலுள்ள இரு ஈஸ்வரிகளும் தீப ஒளியில் ஜொலிக்கிறார்கள். பலமுறை கருவறையில் மின்விளக்குகள் பொருத்த முயன்றும் பல இடையூறுகளும், ஏன் விபத்துகளும்கூட ஏற்பட்டன. பல வருடங்களாக பூமிக்குள் இருட்டில் இருந்ததால், ‘மின் ஒளி வேண்டாம்’ என்று ஒரு மூதாட்டி மூலமாக அருளிவிட்டதாகச் சொல்கிறார்கள். ஈஸ்வரிகளின் எதிரில் சிம்ம வாகனம் உள்ளது. வழக்கம் போல் பலிபீடமும் கொடிமரமும் காணப்படுகின்றன.

கருவறையை வலம் வந்தால் மகாமண்டபத்தில் மதுரை வீரனும், கருப்பண்ணசாமியும் தனிச்சந்நதி கொண்டுள்ளார்கள். கன்னிமூலையில் கணபதி எழுந்தருளியுள்ளார். மகாமண்டபத்தின் மேற்குப்பகுதியில் நாகர் சிலைகளும், சிறிய விநாயகர், சிவலிங்கம், பாலமுருகன், கருமாரி அம்மன் ஆகியோர் வரிசையாக தரிசனமளிக்கிறார்கள். அதனை அடுத்து நவ கன்னியர்களுக்கும் தனிச்சந்நதி உள்ளது. கருவறையின் வடக்குப் பகுதியில் விஷ்ணு துர்க்கை அருள்புரிகிறாள். இங்கு நவகிரக சந்நதியும் உண்டு.இரண்டாம் அடுக்கிற்கு செல்லும்போது இடதுபுறம் பன்னிரண்டு படிகள் ஏறினால் இடும்பன் சந்நதியை தரிசிக்கலாம். இன்னும் ஆறு படிகள் ஏறினால், இரண்டாம் அடுக்கில், முருகப் பெருமான் வள்ளி&தெய்வானையுடன் தனிக்கோயிலில் தரிசனம் தருகிறார். வேலை இல்லாதவர்களை நல்ல பணியில் அமர்த்துவார் என்று இவரை நம்பித் தொழுகிறார்கள். முருகப் பெருமானை தரிசித்துவிட்டு வலதுபுறம் சென்றால் பதினெட்டுப் படிகள் கொண்ட ஐயப்பன் கிழக்கு நோக்கி அருள் வழங்குவதைக் காணலாம். இந்த பொன்னேஸ்வரி அம்மன் கோயில் மிகவும் பழமையானது. இந்த ஈஸ்வரிகளுக்குப் பாலாபிஷேகம் செய்தால் அவை நிவர்த்தியாகின்றன. திருமணத்தடை நீங்க, குடும்ப மகிழ்ச்சி, நினைத்த காரியங்கள் வெற்றிபெற சந்தானாபிஷேகம் செய்கிறார்கள் பக்தர்கள். அக்னி தீர்த்தத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து 18 நாட்கள் நீராடி ஈஸ்வரிகளை வழிபட்டால்
விரைவில் குணம் அடைகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

The post பொன்னான வாழ்வு தரும் பொன்னேஸ்வரி appeared first on Dinakaran.

Tags : Ponneshwari ,Dvapara Yuga ,Kali Yuga ,Vira Hill ,Krita Yuga ,Emerald Hill ,Treta Yuga ,Ponmalai ,Trichy ,
× RELATED பவானி அம்மன் கோயிலில் சுகாதார அதிகாரி ஆய்வு