×

ஆன்மீக தகவல்கள்

கல்யாணம் நடத்தி வைக்கும் கந்தன்

திருச்சி புகைவண்டி சந்திப்பிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள எஸ்.எம்.ஈ.ஏ. காலனியில் உள்ள சித்தி விநாயகர் ஆலயத்தின் மேல் திருச்சுற்றில் அருள்பாலிக்கிறார் வள்ளி-தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணியர். தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேற இந்த கல்யாண பாலசுப்பிரமணியர் அருள்புரிகிறார். அதோடு குழந்தைப்பேறு, விரும்பிய கல்வி, வேலை, ஆரோக்கிய அபிவிருத்தி, கடன் தொல்லையிலிருந்து விடுபடல் எனப் பல்வேறு நற்பலன்களையும்
அருள்கிறார் இவர்.

ஆண்டு முழுவதும் சந்தனம்

ஆந்திராவில் நரசிம்மருக்கு ஏராளமான கோயில்கள் உள்ளன. சிம்ஹாசலம் கோயிலில் மூலவரின் உக்கிரத்தை குறைக்க வருடம் முழுவதும் சிலையின்மீது சந்தனம் பூசி மூடி வைத்திருப்பார்கள். வருடத்தில் ஒரு நாள் மட்டும் இந்த நரசிம்மரைச் சந்தனம் இல்லாமல் பார்க்க முடியும்.

நல்லாண்டவர் எனும் இறை அண்ணன்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ளது நல்லாண்டவர் கோயில். இங்கு மூலவராக நல்லாண்டவர் என்ற மாமுண்டி வீற்றிருக்கிறார். 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற கோயில் இது. இங்கு சப்த கன்னிமார்கள், நல்லாண்டவரின் சகோதரிகளாக மூலவருக்கு அருகில் தனிச்சந்நதியில் கொலுவிருக்கிறார்கள். இங்கு இவர்களுக்குத் தான் முதல் பூஜை. லாட சன்யாசி என்பவர் வடதேசத்துச் சித்தர். தன்னை நாடி வரும் பக்தர்கள் எந்தத் துன்பத்துக்கும் ஆளாகக்கூடாது என்பதற்காக இவரை இத்தலத்திலேயே தங்கி அருளாசி வழங்கும்படி நல்லாண்டவர் கேட்டுக்கொண்டார். அவரது விருப்பப்படி லாடம் பூட்டப்பட்ட நிலையில் தனிச்சந்நதியில் அருள்பாலிக்கிறார் இந்த சித்தர். இவருக்கு இரண்டாவது பூஜை. மூன்றாவது பூஜையையே நல்லாண்டவர் ஏற்கிறார். உடன்பிறந்தவர்களுக்குத் தொந்தரவு, கணவன்-மனைவி பிரச்னை, விஷ ஜந்துகளால் தொந்தரவு, பெண்களின் மனக்குழப்பம் ஆகிய எந்த பிரச்னையானாலும் நல்லாண்டவரிடம் முறையிட்டால் அண்ணனாக இருந்து பிரச்னைகளைத் தீர்த்து வைப்பார் என்பது ஐதீகம்.

கிழமைகள் தரும் கீர்த்தி

வாங்கிய கடனில் கொஞ்சமாவது செவ்வாய்க்கிழமை அன்று தந்தால், கடன் விரைவில் அடையும். ஞாயிறு, வியாழக்கிழமைகளில் நோய்க்கு மருந்து சாப்பிட சீக்கிரம் குணமாகும். அறுவை சிகிச்சை செய்பவர் தேய்பிறையில் செய்தால் சுகமாக வீடு திரும்புவர். ‘சனிக்கோடி தனக்கோடி’ என்பது பழமொழி. சனிக்கிழமை நாம் செய்யும் வழிபாடு நமக்கு நன்மைகளைத் தொடர்ச்சியாகத் தரும். சனிபகவான், பெருமாள், ஐயப்பனுக்கு பூஜை செய்ய சனிக்கிழமை ஏற்ற நாளாகும். சனிக்கிழமை அதிகாலையில் விநாயகப் பெருமானையும், பகலில் விஷ்ணுவையும், மாலையில் அனுமனையும் வழிபட காரியத்தடை அகலும்.

கோள்வினை நீக்கும் குமரன்

கோவை பொள்ளாச்சி சாலையில் உக்கடத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில், ஈச்சனாரியில் அமைந்துள்ளது பாலசுப்ரமணியசுவாமி ஆலயம். குருப் பெயர்ச்சி மற்றும் பிற கிரகப்பெயர்ச்சி நாட்களில் இங்கு 108 மூலிகைகளைப் பயன்படுத்தி விசேஷ யாகம் நடத்துகிறார்கள். இதில் கலந்து கொள்வதால் கிரகப் பெயர்ச்சியின் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம் என்கின்றனர் பக்தர்கள். திருமணத் தடை உள்ள பெண்கள் இங்கு இறைவனிடம் வேண்டிக் கொள்ள, பிரார்த்தனை பலிப்பதுடன் அவர்கள் திருமணம் இந்த இறைவன் சந்நதியிலேயே நடைபெறுவது இந்த ஆலயத்தின் கூடுதல் சிறப்பு.

 

The post ஆன்மீக தகவல்கள் appeared first on Dinakaran.

Tags : Kandan Trinchi Chyavandi Junction ,Sametha Kalyana Subramanian ,Valli-Devan ,Siddhi Vinayagar ,
× RELATED பாண்டுரங்கன் வருகை