×
Saravana Stores

பவானி அம்மன் கோயிலில் சுகாதார அதிகாரி ஆய்வு

திருவள்ளூர், ஜூலை 10: பெரியபாளையத்தில் புகழ்பெற்ற பவானி அம்மன் கோயில் உள்ளது. கலியுகத்தில் பக்தர்களின் துயரங்கள் அனைத்தையும் போக்கி மங்களத்தை அளிக்கும் பவானி அம்மனாக சுயம்பு வடிவில் கோயில் கொண்டு அருள் பாலித்து வருகிறார். இந்த கோயிலில் வருகிற 12ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 5 மணிக்கு மேல் 6.30 மணிக்குள்ளாக மகா கும்பாபிஷேகம் மற்றும் மகா சம்ப்ரோஷணம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை காண பெரியபாளையம் மட்டுமல்லாது சுற்றுவட்டார கிராம மக்கள் மட்டுமல்லாது திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஊத்துக்கோட்டை, திருத்தணி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திராவில் இருந்தும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வரக்கூடும் என்பதால் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் உத்தரவின் பேரில் பொது சுகாதார முன்னேற்பாடுகளை மாவட்ட சுகாதார அலுவலர் பிரியாராஜ் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவ முகாம்கள் எங்கெங்கு அமைப்பது, போதிய மருந்து மாத்திரைகள் இருப்பு இருக்கிறதா, பாம்பு கடி, நாய்க்கடி மருந்துகள், ஊசிகள் போதுமான அளவு இருப்பு உள்ளதா என்றும் பொது சுகாதாரத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்தும் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இதுதவிர, கோயிலுக்கு வரும் கர்ப்பிணி பக்தர்களுக்கு பிரசவ வலி ஏற்பட்டால் அவர்களை எவ்வாறு மீட்டு செல்வது போன்ற விவரங்களை கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது வட்டார மருத்துவ அலுவலர் சங்கீதா மற்றும் செவிலியர்கள், சுகாதாரத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post பவானி அம்மன் கோயிலில் சுகாதார அதிகாரி ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Bhavani Amman Temple ,Thiruvallur ,Periyapalayam ,Bhavani ,Amman Temple ,Kali Yuga ,Swayambu ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை...