×

இந்த வார விசேஷங்கள்

விநாயகர் சதுர்த்தி
7.9.2024 சனி

ஆவணி மாதம் வளர்பிறையில் வருகின்ற நான்காவது திதியான சதுர்த்தி திதி விநாயகர் சதுர்த்தி தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. அது இந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி, ஆவணி மாதம் 22ம் தேதி, ஸ்திரவாரமான சனிக்கிழமை அன்று வருகிறது. சனிக்கிழமை காலை செவ்வாய்க்குரிய சித்திரை நட்சத்திரம். பிறகு ராகுவுக்குரிய ஸ்வாதி. செவ்வாய்க்கு கிரக அந்தஸ்து கொடுத்தவர் விநாயகர் என்று ஒரு வரலாறு உண்டு. அதைப்போலவே இடுப்பில் நாகாபரணம் அணிந்த விநாயகரை வழிபட்டால் ராகு, கேதுவால் வரும் தோஷம் நீங்கும். சதுர்த்தி செப்டம்பர் 6, 2024 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 03:01 மணிக்குத் தொடங்கி செப்டம்பர் 7 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 05:37 மணிக்கு முடிவடையும். விநாயகர் பூஜை நடத்த மங்களகரமான காலம், 7ம் தேதி காலை 11:03 முதல் மதியம் 01:34 வரை.

ரிஷி பஞ்சமி
8.9.2024 – ஞாயிறு

பஞ்சமி திதி மிக உயர்வானது. விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் வரும் பஞ்சமி திதியை ‘ரிஷி பஞ்சமி’ என்று அழைக்கிறார்கள். அன்றைய தினம் சப்த ரிஷிகளை வணங்கி வழிபாடு செய்பவர்களின் இல்லங்களில் வளம் பெருகும் என்பது ஐதீகம். பெண்களின் சவுபாக்கியம் அதிகரிக்க வேண்டிச் செய்யப்படும் விரதம் இதுவாகும். அதுவும் வயது முதிர்ந்த பெண்களே இந்த விரதத்தை செய்வது வழக்கமாகும். ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த ரிஷி பஞ்சமி விரதத்தை கணவனுடனோ அல்லது தனியாகவோ செய்ய வேண்டும். அன்றைய தினம் காலை நீர்நிலைகளில், நெல்லிப்பொடியை உடலில் தேய்த்து குளிக்க வேண்டும். பிறகு வீட்டின் நடுவில் மண்டபம் அமைத்து அதில் கலசங்கள் வைத்து, அந்த கலசங்களில் சப்த ரிஷிகளையும், அருந்ததியையும் சேர்த்து ஆவாஹனம் செய்து பூஜிக்க வேண்டும். இரவு முழுவதும் சப்த ரிஷிகளின் கதைகளைக் கேட்டபடி கண் விழித்து இருக்க வேண்டும். மறுநாள் காலையில் ரிஷிகளுக்கு ஹோமம் செய்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இதேபோல் ஏழு ஆண்டுகள் செய்துவந்தால், துன்பங்கள் விலகும். மங்கலம் உண்டாகும். செல்வங்கள் சேரும். சௌபாக்கியம் கிடைக்கும். இந்த விரதங்களின் போது 10 விதமான தானங்களைச் செய்வது நன்மைகளை வழங்கும். இதில் நிவேதனமாக தேன் – பசும்பாலுடன் அனைத்து வகை கனிகளையும் படைப்பது சாலச்சிறந்தது. ரிஷி பஞ்சமி விரத பூஜையை சப்தரிஷி விரத பூஜை என்பார்கள். ரிஷி பஞ்சமி பூஜையில் ஆண்கள் கலந்து கொண்டு விரதம் இருந்து வழி படலாம். ஆனால் பூஜை நடத்தும் உரிமை பெண்களுக்கு மட்டுமே உரித்தானது.

சுவாமி சிவானந்தர்
8.9.2024 – ஞாயிறு

சிவானந்த சரசுவதி என்று அழைக்கப்படும் சுவாமி சிவானந்தர் ரிஷிகேசத்தில் வாழ்ந்த ஓர் இந்து சமய அத்வைத வேதாந்த குரு ஆவார். அவர் 1887 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் நாள் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பத்தமடை என்ற ஊரில் பிறந்தார். இவர் அப்பைய தீட்சிதர் வம்சத்தில் பிறந்தவர். சிறு வயதிலேயே கல்வி, கலை, விளையாட்டு, ஆன்மிகம் போன்ற அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கினார். மருத்துவப் படிப்பு படித்து மலேசியாவில் மருத்துவராகப் பணிபுரிந்தார். ஏழை எளியவர்களுக்கு இலவச சிகிச்சை நிறைய செய்தார். அக்காலத்தில் பணிகளுக்கூடே சத்சங்கம், பஜனை ஆகியவற்றிலும் ஈடுபாடு காட்டி வந்தார். சில ஆண்டுகளில் ஆன்மிக நாட்டம் மேலோங்க, தன் மருத்துவப் பணியைத் துறந்து இந்தியா திரும்பி, கடுமையான தவத்திற்குப் பிறகு ரிஷிகேசத்தில் தெய்வ நெறிக் கழகம் என்ற ஆசிரமம் தொடங்கி, ஆன்மிக வேட்கை கொண்ட இளைஞர்களுக்குத் தன்னுடைய கருத்துக்களை சொற்பொழிவுகள், புத்தகங்கள் வாயிலாகவும் மற்றும் சுற்றுப்பயணங்கள் மூலமாகவும் பரப்பினார். சுவாமி சிவானந்தர் நிறுவிய தெய்வ நெறிக்கழகம், சுவாமி விட்டு சென்ற ஆன்மிகப் பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறது. 14 ஜூலை 1963ல் மஹா சமாதி அடைந்தார்.

குலச்சிறையார் குருபூஜை
10.9.2024 செவ்வாய்

சுந்தரமூர்த்தி சுவாமிகளே ‘பெருநம்பி’ என்று அழைத்த குலச்சிறை நாயனார் குருபூஜை! ஒவ்வொரு ஆவணி அனுஷத்தன்றும் குலச்சிறை நாயனாரின் குருபூஜை சிவாலயங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இன்று ஆவணி அனுஷம். இந்த நாளில், குலச்சிறை நாயன்மாரை வழிபட்டு சிவபெருமானின் திருவருளுக்குப் பாத்திரர் ஆவோம்.

முக்தாபரண சப்தமி
10.9.2024 செவ்வாய்

ஆவணி மாதம் வளர்பிறை சப்தமி திதிக்கு முக்தாபரண சப்தமி என்று பெயர். இந்த தினத்தில் பெண்கள் செய்யும் பூஜை வழிபாடுகளுக்கு அதிக சக்தி உண்டு. சுமங்கலிப்பெண்கள் காலையில் குளித்து புதிய துணியில் ஐந்து வித வர்ணங்களால் வரையப்பட்ட எழுதப்பட்ட-அச்சிடப்பட்ட பார்வதியுடன் சேர்ந்த பரமேஸ்வரன் படத்தில், ஆவாஹனம் செய்து முறையாக பூஜை செய்ய வேண்டும். பூஜை முடிவில் ஏழு முடிச்சுகள் போடப்பட்ட கயிற்றை பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட ரட்சை கயிற்றை பெண் தனது இடது கையில் கட்டிக் கொள்ள வேண்டும். இதனால் பல காலமாக சந்ததி இல்லாமல் இருக்கும் பெண்ணிற்கு குழந்தைச் செல்வம் ஏற்படும். மேலும் பெண்கள் மங்களமான ஆபரணங்களை விட்டு பிரிய நேராது. இந்த பூஜையால் பெண்கள் சுமங்கலியாகவே வாழும் பாக்கியம் கிட்டும் என்கிறது பவிஷ்ய புராணம்.

ஜேஷ்டாஷ்டமி
11.9.2024 புதன்

மூத்ததேவி என்பதை சமஸ்கிருதத்தில், ஜேஷ்டா தேவி என்று அழைப்பர். தசமகா வித்யாவில், தூமாவதி என்கிற பெயரில், ஒரு தேவி பூஜிக்கப்படுகிறார். அவளை, தூம்ர வாராஹி என்றும், ஜேஷ்டா என்றும் குறிப்பிடுகின்றன. ஜேஷ்டா தேவியின் சிற்ப அமைப்பை பூர்வகரனாகமம், லிங்க புராணம் போன்ற நூல்கள் குறிப்பிடுகின்றன. ஒன்றரை அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் உள்ள கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. ஜேஷ்டா தேவி சிலையின் வலப்புறம் காளைமாட்டு தலையைக் கொண்ட ஆண் உருவமுடைய மகன் குளிகனும் இடப்புறம் மகள் மாந்தினியும் காணப்படுகின்றனர். பல்லவர் காலத்தில் உச்சத்தில் இருந்த ஜேஷ்டா தேவி வழிபாடு, பிற்கால சோழர் காலத்துக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கைவிடப்பட்டுள்ளது. இருப்பினும், தமிழகத்தின் வடமாவட்டங்களில் உள்ள பல்லவர் கால, சோழர் கால சிவன் கோயில்களில் இன்றும் ஜேஷ்டா தேவி வழிபாடு காணப்படுகிறது. ஜேஷ்டா தேவி வழிபாடு செல்வ வளத்தை பெருக்குவதோடு ஆரோக்ய வாழ்வின் முக்கிய தேவையான நிம்மதியான தூக்கத்தையும் தருகிறது என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.

குங்கிலியக்கலய நாயனார் பூஜை
12.9.2024 வியாழன்

அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்று திருக்கடவூர். அங்கே அவதரித்தவர் குங்கிலியக் கலய நாயனார். குங்கிலியம் எனும் நறுமணப் பொருள் கொண்டு தூபம் இடும் திருப்பணியை தினசரி இறைவனுக்கு செய்து வந்ததால் இவருடைய இயற் பெயர் மறைந்து குங்கிலியக்கலய நாயனார் என்று அழைக்கப்பட்டார். தன்னுடைய நிலங்களையும் மற்ற பொருட்களையும் விற்று இடைவிடாது திருப்பணியைச் செய்து வந்ததால், கொஞ்சம் கொஞ்சமாக குடும்பத்தில் வறுமை சூழ்ந்தது. உணவுக்கே வழியில்லாத நிலை ஏற்பட்டது. அப்பொழுது அவருடைய மனைவி தன்னுடைய மாங்கல்யத்தைத் தந்து, இதனை விற்று உணவுப் பொருள் களைக் கொண்டு வருக என்று சொன்னார். அப்பொழுது வணிகன் ஒருவன் வாசனையுள்ள குங்கிலிய மூட்டைகளை விற்பனைக்கு கொண்டுவந்தான்.

இந்த குங்கிலியப் பொதிகளை வாங்கினால் பல நாள்கள் இறைவனுக்குத் தூபம் போடலாமே என்று மகிழ்ந்து, உணவுப் பொருள்களை வாங்குவதற்காக வைத்திருந்த தாலிக்கொடியை தந்து, குங்கிலியப் பொதிகளை சுமந்து வீட்டில் சேமித்து வைத்தார். இவருடைய வைராக்கியத்தைக் கண்ட இறைவனார் குபேரனை அழைத்து பொற்குவியலை அவருடைய வீட்டில் நிறைக்குமாறு கட்டளையிட்டார். அச்செல்வத்தை கொண்டு வறுமை நீங்கி தொடர்ந்து திருப்பணியை செய்து வந்தார். அந்நாளில் திருப்பனந்தாளில் வீற்றிருக்கும் சிவலிங்கத் திருமேனி சற்று சாய்ந்தது. அரசன் மனம் கலங்கினான். கயிறு கட்டி சிவலிங்கத்தை நிமிர்த்த முயன்றான். நடக்கவில்லை. இதனை அறிந்த குங்கிலியக் கலயனார் தானே நேரில் சென்று சிவலிங்கத் திருமேனியைக் கட்டிய கயிற்றை தன் கழுத்தில் கட்டி மிகவும் சிரமப்பட்டு இழுத்தார். அடியாரின் அன்புக்குக் கட்டுப்பட்ட இறைவன் அதற்கு மேலும் சாய்ந்திருக் காமல் நிமிர்ந்தார். இதனைக் கண்டு அரசன் மகிழ்ச்சி அடைந்தான். இப்படி பலவாறு சிவனுக்கும் சிவனடியார்களுக்கும் தொண்டு செய்து, நிறைவாக சிவனடி அணைந்தார். அவருடைய குருபூஜை நாள் ஆவணி மாதம் மூல நட்சத்திரம். இன்று.

மதுரை புட்டுத் திருவிழா
13.9.2024 வெள்ளி

இன்று மதுரையில் புட்டுத் திருவிழா. வைகையில் பெரும் வெள்ளம் வருகிறது. வெள்ளத்தை அடைக்க மன்னர் உத்திரவின்படி வீட்டுக்கு ஒரு நபர் மண் சுமக்க வேண்டும் என்பதால், வந்தி எனும் வயதான பாட்டி தனக்கென ஆள் யாரும் இல்லையே என்று யோசிக்கும் வேளையில் சிவபெருமான் மண் சுமக்கும் வாலிபனாக வந்து வந்தியிடம், ‘‘பாட்டி, உனக்காக நான் மண் சுமந்து போடுகிறேன், எனக்குக் கூலியாக புட்டு தருவாயா? நீ அவிக்கும் புட்டில் உதிர்ந்துள்ள புட்டெல்லாம் எனக்கு. உதிராத புட்டெல்லாம் உனக்கு, சரியா?’’ என்று கூற, வந்தியும் ஒப்புக் கொள்கிறாள். வந்தி அவிக்கும் புட்டெல்லாம் உதிர்ந்து கொண்டே இருக்க, அதை யெல்லாம் இவரே சாப்பிட்டு விட்டு, கரையை அடைக்க மண் சுமக்காமல் உண்ட மயக்கத்தில் அயர்ந்து தூங்கி விடுகிறார். அவ்வழியே வந்த மன்னன், கரையை அடைக்காமல் தூங்கிக் கொண்டிருப்பதால், கோபம டைந்து பிரம்பால் அடிக்கிறார். முதுகில் பிரம்படி வாங்கிய பெருமான், துள்ளி ஓடிச் சென்று ஒரு கூடையில் மண்ணை அள்ளிப்போட அதுவரை அடைக்க முடியாத வெள்ளத்துக்கு அணை போடப்பட்ட அதிசயத்தை அனைவரும் கண்டு வியக்கின்றனர். மேலும் அனைவரின்முதுகிலும் பிரம்படி தடம் இருப்பது தெரியவருகிறது. வந்தது ஈசன்தான் என்பதை மன்னர் உட்பட அனைவரும் உணர்ந்து அவன் தாள் பணிந்து வணங்குகின்றனர். இந்த திருவிளையாடல் புராண வரலாறு இன்று உற்சவமாக மதுரையில் நடக்கிறது.

7.9.2024 சனிக்கிழமை சங்கரதாஸ் சுவாமிகள் பிறந்தநாள்.
8.9.2024 ஞாயிற்றுக்கிழமை திருக்குறுங்குடி நம்பி கருடசேவை.
9.9.2024 திங்கட்கிழமை மதுரை நவநீதகிருஷ்ணன் வெள்ளி தோளுக் கினியானில் பவனி.
9.9.2024 திங்கட்கிழமை சம்பா சஷ்டி.
9.9.2024 திங்கட்கிழமை ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் உற்சவம்.
10.9.2024 செவ்வாய்க்கிழமை குரங்கணி முத்துமாலை அம்மன் பவனி.
10.9.2024 செவ்வாய்க்கிழமை திருத்தணி முருகன் பாலாபிஷேகம்.
12.9.2024 வியாழக்கிழமை ஆவணி மூலம்.
12.9.2024 வியாழக்கிழமை நரியை பரியாக்கியது சுவாமி தங்கக் குதிரையில் புறப்பாடு.
13.9.2024 வெள்ளிக்கிழமை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பவித்ரோற் சவம் ஏழு நாட்கள்.
13.9.2024 வெள்ளிக்கிழமை கஜலட்சுமி விரதம்.

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Vinayagar ,Chaturthi ,Chaturthi Tithi ,Varapirai ,Shani Avani ,Vinayagar Chaturthi Day ,Awani ,Stravawar ,
× RELATED களைகட்டும் விநாயகர் சதுர்த்தி!