×

மாமல்லபுரம் அருகே துரியோதனன் படுகளம் விமரிசை

 

மாமல்லபுரம், ஜூலை 22: மாமல்லபுரம் அடுத்த தெற்குபட்டு கிராமத்தில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோயில் மகாபாரத சொற்பொழிவு பெருவிழா கடந்த ஜூன் 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, தினமும் மாலையில் மகாபாரத சொற்பொழிவு, நாடகம் ஆகியவை நடந்து வந்தன. இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நேற்று மதியம் கோயில் வளாகத்தில் நடந்தது.

அங்கு 50 அடி நீளம் கொண்ட துரியோதன், சகுனி மற்றும் சல்லியனின் பிரம்மாண்ட உருவம் மண் சிற்பத்தால் வடிவமைக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து, துரியோனன், பீமன் இருவரும் ஆயுதங்களை ஏந்தி சண்டையிட்டபடி பீமன் துரியோதனனை துரத்தி வந்து தொடை பகுதியில் ஓங்கி அடித்து துரியோதனனை படுகளத்தில் வதம் செய்த காட்சி நடத்திக் காட்டப்பட்டது.

பிறகு, பீமன் மற்றும் துரியோதனனை அங்கு இருந்த பக்தர்கள் அனைவரும் தோளில் தூக்கிச் சென்றனர். இந்நிகழ்ச்சியில், தெற்குபட்டு, திருவிடந்தை, கோவளம், வட நெம்மேலி, நெம்மேலி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு திரவுபதியை வழிபட்டுச் சென்றனர். அனைத்து ஏற்பாடுகளையும் தெற்குபட்டு கிராம மக்கள் செய்திருந்தனர்.

The post மாமல்லபுரம் அருகே துரியோதனன் படுகளம் விமரிசை appeared first on Dinakaran.

Tags : Duryodhana Padukalam Vimarisai ,Mamallapuram ,Mahabharata lecture festival ,Draupathi ,Amman Temple ,Dukhyapattu ,
× RELATED மாமல்லபுரம்-கோவளம் சாலையில்...