×

உத்தரபிரதேசத்தில் விபத்து எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு 2 பேர் பலி: 8 பெட்டிகள் கவிழ்ந்தன; 35 பயணிகள் படுகாயம்; நாசவேலை காரணமா?

கோண்டா: உத்தரபிரதேசத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு 2 பயணிகள் பலியானார்கள். 35 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்திற்கு நாசவேலை காரணமா என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சண்டிகரில் இருந்து அசாம் மாநிலத்தின் திப்ருகர் வரை செல்லும் சண்டிகர் – திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மதியம் உத்தரப் பிரதேசம் மாநிலம் கோண்டா நிறுத்தத்தில் இருந்து மதியம் 1.58க்கு புறப்பட்டது. அந்த ரயில் பஸ்தி ரயில் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது மோதிகஞ்ச் மற்றும் ஜுலாஹி ஆகிய பகுதிகளுக்கு இடையே உள்ள பிகவுரா என்ற இடத்தில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

உபி தலைநகர் லக்னோவில் இருந்து 150 கிமீ தொலைவில் நடந்த இந்த விபத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலின் 8 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு கவிழ்ந்தன. விபத்து குறித்து அறிந்ததும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இந்த விபத்தில் 2 பயணிகள் பலியானார்கள். 35 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்த இடத்திற்கு உத்தரபிரதேச துணை முதல்வர் பிரிஜேஷ் பதக் விரைந்து மீட்பு பணிகளை முடுக்கி விட்டார். கோண்டா கலெக்டர் நேகா சர்மா, உத்தரபிரதேச மீட்பு பணி கமிஷனர் ஜி.எஸ். நவீன்குமார் உள்ளிட்டோர் அங்கு சென்றனர். 40 பேர் கொண்ட மருத்துவக்குழு, 15 ஆம்புலன்ஸ்கள் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு காயம் அடைந்தவர்களை மீட்டு சம்பவ இடத்திலேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் கோண்டா மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ந்த போது பெரிய சத்தம் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை ரயிலை இயக்கிய லோகோ பைலட் உறுதிப்படுத்தி உள்ளார். ரயில் தடம் புரளும் முன்பு பலத்த வெடிசத்தம் கேட்டதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே இந்த விபத்திற்கு நாசவேலை காரணமா என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரயில் விபத்து பற்றி ஸ்லீப்பர் கோச்சில் பயணித்த சந்தீப்குமார் கூறுகையில்,’ ரயில் கவிழ்ந்ததும் எனக்கு எதிரே உள்ள பெர்த்தில் அமர்ந்திருந்த சிறுவன் அலறியபடி கதறி அழுதான். அந்த ஒரு கணம், கோச் முழுவதும் தூசியால் நிரம்பியது. மிகவும் இருட்டாக இருந்தது. அடுத்த சில நொடிகளில் என்ன நடந்தது என்பது எனக்கு நினைவில் இல்லை. அதன்பின் சில பயணிகள் என் கையை இழுத்து ஜன்னலுக்கு வெளியே வர உதவினர்’ என்றார்.

ரயிலின் பி2 பெட்டியில் பயணித்த மற்றொரு பயணி மனிஷ் திவாரி (35) கூறுகையில்,’ நான் ஜன்னலுக்கு அருகில் அமர்ந்திருந்தேன். அப்போது பலத்த சத்தம் கேட்டது. அந்த நேரம் நான் தூங்குவதற்காக மேல் பெர்த்திற்கு ஏறினேன். ரயில் கவிழ்ந்ததால் நான் தூக்கி எறியப்பட்டேன். குழந்தைகள், பெண்கள் கதறினார்கள். அவசரகால ஜன்னல்கள் மற்றும் கதவுகளிலிருந்து பயணிகள் வெளியே வந்தனர். ஏசி பெட்டிகளில், பயணிகள் ஒருவருக்கொருவர் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து வெளியே வந்தனர்’ என்றார்.

* ரூ.10 லட்சம் இழப்பீடு
உபி ரயில் விபத்தில் பலியானவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது. மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2.50 லட்சமும், சிறிய காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஒன்றிய அரசு என்ன செய்கிறது?
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில்,’ உ.பி., கோண்டாவில் நடந்த மற்றொரு சோகமான ரயில் விபத்து குறித்து அறிந்து வருத்தமாக இருக்கிறது. ரயில்வே அதிகாரிகள் என்ன செய்கிறார்கள். ஒன்றிய அரசு என்னதான் செய்கிறது? பயணிகளின் பாதுகாப்பு தான் முக்கியம். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கல்கள், காயமடைந்தவர்களுக்காக பிரார்த்தனைகள்’ என்று குறிப்பிட்டு உள்ளார்.

* மோடியும், ரயில்வே அமைச்சரும்தான் பொறுப்பு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
சண்டிகர்-திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட விபத்திற்கு பிரதமர் மோடி மற்றும் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும் என்றும், அனைத்து வழித்தடங்களிலும் கவாச் கருவியை விரைவாக நிறுவ வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.இதுபற்றி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில்,’ உத்தரபிரதேசத்தில் சண்டிகர்-திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது, மோடி அரசு எப்படி ரயில் பாதுகாப்பு முறையை அழித்துள்ளது என்பதற்கு மற்றொரு உதாரணம். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் காயமடைந்தவர்களுடன் உள்ளன. ஒரு மாதத்திற்கு முன்பு, சீல்டா-அகர்தலா கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது சரக்கு ரயில் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர். அதை தொடர்ந்து இன்னும் ரயில் விபத்து நடக்கக் காத்திருக்கிறது என்று ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கூறினார். தானியங்கி சிக்னல் தோல்வி உள்ளிட்டவை காரணங்கள் என்று அந்த விபத்திற்கான விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டன. தற்போது மீண்டும் விபத்து நடந்துள்ளது. இதற்கு பிரதமர் மோடியும், ரயில்வே அமைச்சரும் நேரடிப் பொறுப்பேற்க வேண்டும்’ என்று கூறினார்.

The post உத்தரபிரதேசத்தில் விபத்து எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு 2 பேர் பலி: 8 பெட்டிகள் கவிழ்ந்தன; 35 பயணிகள் படுகாயம்; நாசவேலை காரணமா? appeared first on Dinakaran.

Tags : derailment ,Uttar Pradesh ,Konda ,Chandigarh ,Dibrugarh ,Assam ,
× RELATED புத்தாண்டை மக்கள் இயக்கமாக மாற்றுவோம்: கார்கே அறிவிப்பு