×

தமிழக மீனவர் விரோதப்போக்கு ஒன்றிய அரசை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம்: காங்கிரசாருக்கு செல்வப்பெருந்தகை அழைப்பு

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கை: தமிழக மீனவர்களின் 170க்கும் மேற்பட்ட படகுகளை மீட்க கோரியும், சேதமடைந்த படகுகளுக்கு தமிழக அரசு வழங்குவது போல், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தகுந்த இழப்பீடு வழங்கக் கோரியும், பாரம்பரிய கச்சத்தீவு பகுதியில் இந்திய – இலங்கை மீனவர்கள் பிரச்னையின்றி மீன்பிடிக்க வழிவகை செய்யக் கோரியும் ஒன்றிய அரசை வலியுறுத்தி பாரம்பரிய இந்திய மீனவர் நல சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகில் காலை 10 மணி அளவில் நடக்கிறது.

தமிழக காங்கிரஸ் சார்பாக சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ, எம்பிக்கள் விஜய் வசந்த், ராபர்ட் புரூஸ் உள்ளிட்ட காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் பங்கேற்கின்றனர். 10 ஆண்டு கால ஒன்றிய பாஜ ஆட்சியிலும், தற்போது நடந்து வரும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியிலும் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கடற்பகுதியில் மீன்பிடிக்க செல்லும் போது கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்வதும், வழக்கு பதிவு செய்வதும், சிறையில் அடைப்பதும் தொடர் கதையாக நடந்து வருகின்றன. இதுகுறித்து தமிழக முதல்வர், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதங்களுக்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இத்தகைய தமிழக மீனவர் விரோத போக்கை கண்டிக்கிற வகையில் திரளான மீனவர்களும், காங்கிரஸ் கட்சியினரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post தமிழக மீனவர் விரோதப்போக்கு ஒன்றிய அரசை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம்: காங்கிரசாருக்கு செல்வப்பெருந்தகை அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Fishermen ,Congress ,Chennai ,Tamil Nadu Congress ,President ,Selvaperunthakai ,Tamil Nadu ,Tamil Nadu government ,National Democratic Alliance government ,Dinakaran ,
× RELATED திமுக – காங்கிரஸ் கூட்டணியில் எந்த...